தமிழ்நாடு என்ன திறந்த வீடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 29, 2021

தமிழ்நாடு என்ன திறந்த வீடா?

தமிழக இளைஞர்கள் படித்தும், பட்டம் பெற்றும் இலட்சக்கணக்கில் வேலை வாய்ப்பின்றித் தவித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.

* திருச்சி - திருவெறும்பூர் பெல் நிறுவன வாயிலில் நின்று பாருங்கள் - ஜோலார்பேட்டை சந்திப்பு இரயில் நிலையத்தின் வாயிலில்  நின்று பாருங்கள். நாம் இருப்பது தமிழ்நாடா,  வெளி மாநிலமா என்ற அய்யம் ஏற்படும்.

***

* அஞ்சல் துறைக்குத் தமிழ்நாட்டில் வந்து தேர்வு எழுதிய அரியானாக்காரர்கள் தமிழ்ப் பாடத்தில் தமிழக மாணவர்களைவிட இலக்கணப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

***

* இரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டரைப் பாருங்கள். இரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர்களைக் கவனியுங்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வாசலிலும் சற்று நேரம் நின்றுபாருங்கள் - வயிறுதான் எரியும்.

* நெய்வேலி நிலக்கரி  நிறுவனம் அங்கு கொண்டு வரப் பட்டபோது தங்கள் சொந்த நிலங்களைக் கொடுத்தவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன?

சொன்னபடி வேலை வாய்ப்பை அந்த ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுத்தார்களா?

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தலைவர் உட்பட 11 பேர் இயக்குநர்கள் என்றால்  9 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

* சென்னை மணலியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் பொறியாளர் பணிக்குத் தேர்வு செயயப்பட்ட 42 பேர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை.

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என்று கருநாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மகாராட்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமே இயற்றியுள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன? பிற மாநிலத் தவர்களின் வேட்டைக்காடா தமிழ்நாடு - திறந்த வீடா தமிழ் மாநிலம்?

என்ன கொடுமை என்றால், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வு எழுதலாமாம்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருந்தபோது காதும் காதும் வைத்தாற்போல இப்படி ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் மாண்புமிகு . பன்னீர்செல்வம்.

மாநிலங்களிலிருந்து கவர்ந்து செல்லப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் இல்லை; சிறப்பு மருத்துவப் பிரிவில் (Super Speciality) நூறு சதவீத இடங்களைக் கவர்ந்து சென்றனர்; அதிலும் இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய பா... அரசு அடித்துக் கூறிவிட்டது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள்  எராளம் இருந்தும் பயன் என்ன?

புகழ் பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி நுழைவு வாயிலில் நின்று பாருங்கள். நாம் .பி.யில் இருக்கிறோமா? பீகாரில் இருக்கிறோமா என்ற சந்தேகம் தான் எழும்.

கேட்டால் இது என்ன குறுகிய பார்வை என்று கேட்பவர்களும் இங்கு உண்டு; திராவிட இயக்கம் இப்படித் தான் என்று கூக்குரல் போடுவார்கள்.

தமிழ் மண்ணிலே தமிழர்களுக்கு இடமில்லையா என்று கேட்கக் கூடாதாம் - கேட்டால் அது குறுகிய துவேஷ உணர்வாம். அப்படியென்றால்  வீட்டுக்கு வீடு, கதவு ஏன், பூட்டு ஏன்?

ஒரே நாடு, ஒரே மொழி என்று குரல் கொடுப்பவர்களின் பின்னணியில் இருப்பதன் இரகசியம் இப்பொழுது புரிகிறதா? இன உணர்வு, மொழி உரிமை, மண்ணுரிமை பற்றிப் பேசக் கூடாது என்று பேசுவதன் பொருள் புரிகிறதா?

எனவே தமிழர்களே, தமிழர்களே, வாக்காளர்களே, வாக்காளர்களே! தமிழ்நாட்டு இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் கதவடைப்பு - பிற மாநிலத்தவர் களுக்கு மட்டும்  வரவேற்பா?

இன உணர்வும், மொழி உணர்வும், மண் உணர்வும் உள்ள - சமுதாயக் கொள்கையையும் உடைய ஒரே அரசியல் கட்சி திமுக என்பது நினைவிருக்கட்டும்!

அந்தத் திமுக தலைமையில் உள்ள மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து இழந்த உரிமைகளை மீட்போம் - தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு எனும் நிலையை உருவாக்குவோம்.

ஏப்ரல் 6 முக்கிய நாள் - ஒரு திருப்புமுனை நாள்! ஆட்சி அதிகாரம் நமக்காகட்டும் - பத்தாண்டுகள் அதிகாரத்தில் இருந்து நாட்டை சிதைத்தவர்களுக்குப் பாடம் கற்பிப்பதாக அமையட்டும்! அமையட்டும்!!

வெல்க திராவிடம்!

No comments:

Post a Comment