டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையும், மக்களின் நிலையும்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், சமையல் எரிவாயுவின் விலையும் 100 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் பின்னணி என்ன?

 கோவிட்- 19 உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தபோது குரூட் பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 65 டாலராக இருந்தது. அதற்குப் பிறகு வந்த ஊரடங்கினால், அதன் விலை வெகுவாகச் சரிந்து 25 டாலர் வரை கீழே இறங்கியது.   சந்தையில் பூஜ்ய விலைக்குக்கூட விற்றது. அந்தத் தருணத்தில் அரசு பெட்ரோலின் விலையை 25 ரூபாய் அளவுக்குக் குறைத்திருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசு19 ரூபாய் அளவுக்கு சுங்கவரியும் சிறப்பு வரியும் விதித்தது. ஆகவே பெட்ரோலின் விலை குறையாமல் இருந்தது. அந்த விலையேற்றத்தின் பயனை மத்திய  அரசு எடுத்துக்கொண்டது.

 அரசுக்கு இரு வகைகளில் வரி வருகிறது. ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. ஒரு நேர்மையான அரசு என்பது, மறைமுக வரியைக் குறைவாகவும் நேர்முக வரியை அதிகமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பார் டாக்டர் மன்மோகன் சிங். ஏனென்றால் நேர்முக வரியை சாமானியர்கள் செலுத்த மாட்டார்கள்.

பணம் உடையவர்கள், நிறுவனங்களுக்கே அந்த வரி விதிக்கப்படும். ஆனால், இந்த அரசு மறைமுக வரியை வைத்துக்கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தது. 36 சதவீதம் இருந்த வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2020இல் இது நடந்தது. இதனால், அரசின் வருவாயில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. இந்த இழப்பை எங்காவது ஈடுகட்ட வேண்டுமென பெட்ரோலுக்கும் டீசலுக்கும் கடுமையாக வரி விதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த வரியை எளிதில் வசூலித்துவிட முடியும்.

மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசும் கடுமையாக வரிகளை விதிக்கிறது. கிட்டத்தட்ட 22 ரூபாய் அளவுக்கு மாநில அரசு வரி விதிக்கிறது.

பெட்ரோலின் விலை உயர்ந்ததால் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்ட மானியம் குறைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு மானியம் கொடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாகவும் சொல்வதில்லை.

உஜ்வாலா என்று ஒரு திட்டம். அதில் முதல் மாதம் எரிவாயு இலவசமாகக் கொடுப்பார்கள். ஆனால், தொடர்ந்து மாதாமாதம் எரிவாயு வாங்க ஏழைகளிடம் காசு இருக்காது. அவர்கள் திரும்பவும் மண்ணெண்ணெய்க்கே சென்றுவிட்டார் கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால், அரசுக்கு வருவாய் பற்றாக்குறையாம். அது ஏன் ஏற்படுகிறது? 

யாரால் வரி கட்ட முடியாதோ, அவர்களுக்கு வரி இருக்கக்கூடாது. ஆனால், மோடி அரசு தலைகீழாக  மாற்றி வசூலிக்கிறது.

 சாதாரண மக்களுக்கு வரி போட்டுவிட்டு, தேசத்திற்காக இதைச் செய்யுங்கள் என்கிறார்கள். பெட்ரோலின் அடக்க வில்லை 31-32 ரூபாய்தான். ஆனால், 93 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. அதாவது அடக்கவிலையைப் போல இரு மடங்கு வரி விதிக்கப்படுகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயரும்.

மாநில அரசு தன் வரியைக் குறைத்துக்கொள்ள வேண்டி யதுதானே என்கிறார்கள். மாநில அரசுகளைப் பொறுத்தவரை, விற்பனை வரி, சொத்துவரி, கலால் வரி ஆகியவற்றின் மூலம் தான் வருவாய் கிடைக்கும். விற்பனை வரியைப் பொறுத்த வரை, அந்த உரிமை ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிவிட்டது. ஆகவேதான், மாநில அரசு இந்த அளவுக்கு வரியை வசூலிக்கிறது.

 கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து ஏற்ற - இறக்கத்தில் இருந்ததால் அரசு தன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தது. ஒரு கட்டத்தில் விலை மிக அதிகமானபோது, அப்போதைய மத்திய அரசு கடன்களைத் திரட்டி, சுமையைத் தாங்கியது. அரசு கடன் வாங்கியாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பது அந்தக் காலம். ஆனால், சாமானி யர்கள் மீது வரியைச் சுமத்தி, நண்பர்களுக்கு உதவிசெய்வது இந்தக் காலம்.

ஊடகங்களுக்குத் தற்போது சுதந்திரம் இல்லாத நிலை வந்துவிட்டது, ஆகையால் தான் காங்கிரஸ் ஆட்சியில் முதல் பக்கத்திலேயே பெட்ரோல் பம்பு தூக்குக் கயிறாக மிகப் பெரிய அளவு கார்ட்டூன் வரைந்து செய்திகள் வெளிட்டன. ஆனால், இன்று விவசாயிகள் குறித்து பேசியதற்காகவே மூத்த ஊடகவியலாளர் மீது தேசத்துரோக வழக்கும், கல்லூரி மாணவி மீது தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதியப் பட்டுள்ளது. ஆகையால் பெட்ரோல், டீசல் விலை குறித்து  பேசுவதற்கே ஊடகங்கள் அஞ்சுகின்றன.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது அரசு அல்ல; நிர்ணயிப்பது தனியார் நிறுவனமே! இந்த இலட்சணத்தில் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதே தங்கள் கொள்கை என்று பிரதமர் வெளிப்படை யாகவே கூறி விட்டாரே!

நாடு திவால் தான்!

Comments