ஒற்றைப் பத்தி : ‘அறியப்படாத தமிழகம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

ஒற்றைப் பத்தி : ‘அறியப்படாத தமிழகம்!'

‘‘கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரேமணிலா' எனப்படும் நிலக்கடலை பயிரிடப்பட்டு, எண்ணெய் வித்தாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.''

‘‘பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும், கோவில்களிலும் பாலிலிருந்து பெறப்பட்ட நெய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் கூடப் பார்ப்பனர் வீடுகளில் மாதுளங்காயினை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்பட்டுள்ளது. பக்தி இயக்கக் காலத்தில் ஜாதியப் படி நிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது, செக்கினைத் தொழிற் கருவியாகக் கொண்டு எண்ணெய் எடுக்கும் ஜாதியார் கீழ் ஜாதியாகக் கருதப்பட்டனர். 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவர்களைச் சக்கரப்பாடியார், சங்கரப்பாடியார் என்று குறிக்கின்றன.''

‘‘இடைக்காலத்தில் எண்ணெய் அமங்கலப் பொருளாகக் கருதப்பட்டது. எண்ணெய் விற்போர் எதிரில் வருவது நல்ல சகுனம் இல்லை எனவும் கருதப்பட்டது. இக்காலத்தில் எண்ணெய் விற்கும் ஜாதியார்செட்டியார்' என்ற ஜாதிப் பெயரை இட்டுக் கொள்கின்றனர். அக்காலத்தில் அவர்களுக்குச்செக்கார்' என்றும் பெயருண்டு.''

'‘இன்று எல்லா ஊர்களிலும் உணவு விற்கும் கடைகள் உள்ளன. சில ஊர்களில் குடிநீரும் விற்பனைப் பொருளாகி விட்டது. தமிழர் பண்பாட்டில்சோறும், நீரும் விற்பனைக்குரியவையல்ல' என்ற கருத்து இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்போது தெரிகிறது. வறியார்க்குச் சோறிடுதல் அறம் என்கிற கோட்பாடு மட்டுமே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.''

‘‘விசய நகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்ஹோட்டல்' எனும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட பிராமணரும், பிராமணரை அடுத்த மேல்ஜாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.

நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் .வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்த பின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே!'' (தொ.பரமசிவன் - ‘‘அறியப்படாத தமிழகம்'')

- மயிலாடன்

No comments:

Post a Comment