பாயும் புலியே!

அன்னையே,

நீங்கள் தோற்றத்தில்

பசுபோல

ஆனால்,

தோற்றதில்லை

தொட்ட காரியங்களில்!

பார்வைக்குத்தான்

நீங்கள்

பதுவிசு!

பாயும்புலி நீங்கள்

பகுத்தறிவுப் போர்க்களத்தில்!

‘‘இராவண லீலா''வில்

கண்டோமே -

உங்கள் வீரத்தின்

உச்சத்தை!

எத்தனை எத்தனை

அழுத்தங்கள்!

எதிர்ப்புகளின்

எரிக் கணைகள்!

ஆனாலும்,

அலட்சியமாய்

ஏளனப்

புன்னகையால்

கொடுத்தாய் பதிலடி!

எடுத்தாய்

செந்தீயை

எட்டுத் திசையும்

குலுகுலுங்க

எரித்தாய் ராமனை

அவன் மனைவியை

அவன் தம்பியை!

அடேயப்பா

எத்தனை உணர்ச்சிக் காவியம்!

இன வரலாற்றில்

அழியா ஓவியம்!

சேலத்தின்

இரண்டாம் பாகமது!

என்ன,

ஆண்டு அறுபது

தொடு முன்னே

ஆயுளின் முடிவை

எழுதிக் கொண்டாய்!

ஆறாத ரணம்தான்!

எங்கள் ஆதங்கம்

அடித் தொண்டைக்குள்

இன்னும் இன்னும்!

ஆனாலும்,

நீ எண்ணியபடி

இழை ஏதும்

பிசகாமல்

நடைபோடுகிறது

இயக்கம்!

உங்கள் அருமை

மகனின்

உழைப்பின்

மூச்சால்

எங்கும் எங்கும்

செயலாக்கமே!

ஏப்ரல் ஆறில்

ஒரு சம்ஹாரம்!

மீண்டுமொரு

இராவண லீலா'

அரங்கேற்றம்

அதுவும் ஒரு

மூன்றாம் பாகம்!

திராவிடம் வெல்லும்!

தி.மு.. அணி

திமிர் முறிக்கும்

வெற்றிக் குவியலை

அள்ளும், அள்ளும்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Comments