தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை தேவை

தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை,ஜன.23- தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தளபதி மு..ஸ்டாலின் (தி.மு.தலைவர்)

கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித் துக் கொண்டிருந்த, கோட்டைப்பட் டினத்தைச் சேர்ந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி - விசைப்படகோடு மூழ்கடித்தி ருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடலில் மூழ்கடிக்கப்பட்ட  மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் இப்போது மீட்கப் பட்டுள்ளன என்ற பேரிடிச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் -  மீன்பிடி உரி மையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது  கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்க மாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது!

இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பா... அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பியவுடன் இலங்கைக் கடற்படை நான்கு மீனவர்களைக் கொன்றிருப்பது, இலங்கையில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, இந்திய மத்திய அரசையோ துளி கூட மதிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எனவே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு,  பிரதமர்  நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரி விக்க வேண்டும் எனவும், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

 இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மூழ்கடித்ததில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரி ழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும் பங்களுக்கு தமிழக முதல்வர் தலா 10  லட்சம் வழங்குவதோடு பிரச்னை முடிந்துவிடப் போவதில்லை. இதற்கு பிறகு இத்தகைய உயிரிழப்புகள் ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த  வேண்டும். இதன் எதிர்வினையாகத்தான் அப்பாவி தமிழக மீனவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு இலங்கை அரசு தான் பொறுப்பாகும். எனவே, மத்திய பாஜ அரசு, தமிழக மீனவர்களின் உயிரிழப்பு குறித்து தீவிரமான விசாரணையை  மேற்கொண்டு இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் வழங்கியிருக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

(மதிமுக பொதுச் செயலாளர்)

லட்சக்கணக்கான ஈழத் தமிழர் களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த இலங்கை அரசு, இந்திய அரசு கொடுத்து வருகின்ற ஊக்கத் தினால் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக் கொன்று வருகின்றது. கடந்த 35 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை கொன் றுள்ளது. இலங்கை அரசையும், அவர்களை ஊக்கு வித்து வருகின்ற இந்திய அரசையும் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இரா.முத்தரசன்

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்)

தமிழகத்தின் கடலோரப் பகுதிக் கிராமமான கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மெசியா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து வந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கப்பல்படையினர் நான்கு மீனவர்களையும் கடலில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளனர்.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தொடர்ந்து தாக்கி வருகின்றது. தமிழக மீனவர்கள், மீன்பிடித் தொழிலை இழந்தனர். இலங்கை ராணுவத்தினரிடம் உடைமையினையும், உயிரையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர். இது பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை. அண்மை யில் வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அரசுடன் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. இனிமேல் மீனவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் சேதாரம் ஏற்படாது எனத் தெரிவித்தார். ஆனால் அதற்கு நேர் எதிரான செயல்களே நடைபெறுகின்றன. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர் களின் தொழிலையும், உரிமை மற்றும் உடைமை களையும் பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூபாய் 5 கோடி இழுப்பீடு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்)

நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் இதுவரை உரிய தலையீடு செய் யாமல் அலட்சியம் காட்டி வரு வது மிகுந்த வேதனையளிக்கிறது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்வதோடு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச் சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பலமுறை வலியுறுத் தியும் இப்பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு சென்றிருந்த போதும் இது குறித்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையோ அல்லது உரிய நடவடிக் கைகளோ மேற்கொண்டதாக தெரியவில்லை.

எனவே, மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை இலங்கை அரசிற்கு தெரிவிப்பதோடு. தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடித் தொழி லுக்கும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வ தற்கும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் துகிறது.

மேலும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தொல்.திருமாவளவன்

(விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்தியதில் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்திய அரசு, சிங்கள அரசைக் கண்டிப்பதுடன் இலங்கைத் தூதரையும் கடுமையாக கண்டிக்க வேண்டும். தமிழக அரசு இந்திய கடலோரக் காவல்படையை மட்டும் நம்பியிருக்காமல் நமது காவல் துறையையும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் சில காலம் நின்றிருந்தது. ஆனால், ராஜபக்சே ஆட்சி அமைந்ததற்குப் பிறகு சிங்கள கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவது, அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, அவர்களைக் கைது செய்வது மீண்டும் தொடர்கதை ஆனது. அண்மைக்காலமாக இது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இதனை இந்திய அரசு வழக்கம்போல வேடிக்கை பார்க்காமல் மிகக் கடுமையாக தனது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும்.  இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

(மமக தலைவர்)


தமிழக மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் உடல்களின் படங்களைப் பார்க் கும்போது அவர்களை உடல் ரீதியாகப் பலமாகத் தாக்கி ரத்த காயத்துக்கு உள் ளாக்கியுள்ளனர்.

அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருந்தால் ரத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது தமிழகக் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மருத்துவர் இராமதாஸ்

(பா... நிறுவனர்)

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரின் படகு மீது இலங்கை கடற் படையினர் கப்பலை மோதி தாக் கியதில், மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து 4 பேரும் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இலங்கை கடற்படையினர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியதாகவும், அவர்களை நெருப்பால் சுட்டுபடகில் போட்டு மூழ்கடித்துக் கொன்றதாகவும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இரு மீனவர்களின் குடும் பங்களுக்கும் தலா ரூ.10 கோடி இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன்

(தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)

4 மீனவர்கள் உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இலங்கை அரசிடம் ரூ.10 கோடி நிவாரணமாக பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment