‘கொடும் பழமைவாதம், மூடநம்பிக்கை மலிந்த மலையாள சமூகத்தின் மீட்சி’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

‘கொடும் பழமைவாதம், மூடநம்பிக்கை மலிந்த மலையாள சமூகத்தின் மீட்சி’

மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி - தமிழர் தலைவரின் தொடர்பொழிவு-5



‘மூன்று நூற்றாண்டுகளில் சமூக நீதி - ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றி வரும் தொடர் நிகழ்வின் அய்ந்தாம் பொழிவு 28.08.2020 அன்று காணொலி மூலம் மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது. மராட்டியம், கர்நாடகப் பகுதிகளின் சமூக நீதி வரலாறு பற்றி கடந்த பொழிவுகளில் எடுத்துக் கூறிய தமிழர் தலைவர், அய்ந்தாம் பொழிவில் கேரள சமூக நீதி வரலாறு பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்.


சமூக நீதியினை வழங்குதலில் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதுதான் பெரும் பணியாக இருக்கும் நிலை களைத் தாண்டி, மிக மிகக் கொடுமையான, மோசமான பழமைவாதக் கருத்துகள் - கடைப்பிடிப்புகளிலிருந்தும், மூடநம்பிக்கை மலிந்த சமூகச் சூழலிருந்தும் மீண்டு வந்த வரலாறுதான் கேரள சமூக நீதி வரலாறாகும்.


சத்திரியர்களை கொன்று குவிக்கப் புறப்பட்ட விஷ்ணுவின் அவதாரமான பார்ப்பன பரசுராமர் உருவாக்கியதாக புராணங் களில் கூறப்படும் பகுதி கேரளம் ஆகும். கடவுளின் தேசம் (God's Own Country) எனப் பரவலாகக் கூறப்படும் கேரளப் பகுதியானது இந்து மதத்திற்கு ‘புத்தாக்கம்’ தந்த விவேகானந் தரால் மிக மோசமான, பண்பாட்டு இழிவுகளைப் பெருமை யாகக் கொண்டு மூடநம்பிக்கை வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்ததனால் ‘பைத்தியக்காரர்களின் புகலிடம் (லிuஸீணீtவீநீs கிsஹ்றீuனீ)’ என அடையாளப்படுத்தப்பட்டது. அந்த அளவிற்கு மனிதநேயமற்ற, சமூக இழிவுகளைப் போக்கிட, பெண்களை நினைத்துப் பார்க்க முடியாத அடக்குமுறைக்கு ஆளாக்கி வந்த நிலையிலிருந்து அந்த மக்களை மீட்டெடுக்க சமுதாயப் புரட்சியாளர்கள் பலர் அந்த மண்ணில் தோன்றினார்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்து சமுதாயப் பணியாற்றிய ஒடுக்கப்பட்ட சமுதாயப் போராளி களினால் - அவர்தம் அளப்பரிய உழைப்பால் மீண்டெழுந்த பகுதியாக கேரள மாநிலம் இன்று திகழ்கிறது. அந்தப் பழமை வாதங்களின் சில எச்சங்கள் அந்த மண்ணில் இன்னும் நீடிக்கும் அவலநிலையும் உள்ளது.


அசுரகுல மன்னன் மாவலி புகழ்பேசிடும் ஓணம் விழா


கேரள மண்ணில் ஓணம் விழா என்பது வெகு சிறப்பாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மராட்டிய மண்ணில் மாவலி விழா என்பது வெகு சிறப்பாக அந்த மாவீரனின் பெயராலேயே கொண்டாடப்பட்டு வந்தது. அந்த மாவலி விழா குறித்து சமூக புரட்சியாளர் ஜோதிராவ் பூலே அவர்களும் குறிப்பிட்டு பெருமைபடப் பேசியுள்ளார். அப்படிப்பட்ட மாவலியின் வரலாற்றை புராணப் புனைவுடன் திணித்து விஷ்ணு குள்ளப் பார்ப்பான் ‘வாமனன்’ அவதாரம் எடுத்து மாவலியைக் கொன்ற கதையாகக் கேரளத்தில் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடும் நிலை வந்தது. இருப்பினும் மாவலி கேரள மக்களால் பெருமைமிகு மன்னனாக போற்றப் படுகிறான். ஆரியர் எதிர்ப்பு திராவிடப் போராட்ட வரலாற்றில் திராவிட வீரன் மாவலியின் சிறப்பை மட்டுப்படுத்திடும் வகை யில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தேசியத் தலைவரும் இன்றைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, குள்ளப் பார்ப்பானைத் தூக்கிப் பிடிக்கும் விதமாக ‘வாமன விழா’ எனக் கொண்டாட வலியுறுத்தினார். இதை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்தோம். கேரள மக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ‘வாமன விழா’ முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன.


நம்பூதிரிப் பார்ப்பனரின் ஆதிக்கத்தை பெருமையாகக் கருதிய நிலைமை


கேரள மண்ணில் நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கடந்த காலங்களில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பனரை உயர் வாகக் கருதிடும் நிலைமைகள் இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், கேரளாவில் இருந்த நிலைமை மிகவும் மோசமானது; நிலவுடமை முழுவதும் நம்பூதிரிப் பார்ப்பனர் வசம் எனும் மனுதர்மத்தின் முழுமையான நடைமுறை கேரளாவில் அன்று நிலவி வந்தது. கொலைக்குற்றம் செய்த நம்பூதிரிப் பார்ப்பனருக்கு தூக்கு தண்டனை கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குற்றங்கள் யார் செய்தாலும் ஒரே தண்டனை என இந்திய குற்றப்பிரிவு (Indian Penal Code) நடைமுறை 1800 களின் தொடக்கத்தில் வரும் வரை குற்றம் செய்த நம்பூதிரிகள் தண்டிக்கப்படாத நிலைமைகளே நீடித்தன.


மோசமான சமூகநிலை


ஆட்சி செய்த மன்னர்களே தங்களது ‘ராஜவம்சத்துப் பெண்கள் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அந்த பெண்கள் நம்பூதிரிப் பார்ப்பனருடன்தான் முதல் இரவினைக் கழித்திட வேண்டும்‘ எனப் பெருமையாகக் கருதினர். பார்ப்பனர் அல்லாதாரான நாயர் வகுப்பினரிடம் ‘மருமக்கள் தாயம்’ எனும் தாய்வழி மரபு நடைமுறை நிலையில் ‘சம்பந்தம்’ எனும் திருமண முறை இருந்தது. நாயர் சமுதாயப் பெண்டிர் திருமணத்திற்குப் பின் முதலிரவினை நம்பூதிரிப் பார்ப்பனரி டம் தான் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கொடிய வழக்கமெல்லாம் நிலவி வந்தது. பார்ப்பனர் அல்லாத பிற ஜாதிப்பிரிவிலும் இந்த திருமண வழக்கம் தொடர்ந்து வந்தது. இந்தக் கொடிய சமூக வழக்கம் நிலவிவந்ததை 16-ஆம் நூற்றாண்டில் கேரளப் பகுதிக்கு வந்த பயண எழுத்தாளர் லூடோ விகோ (Ludo Vico) எழுதிய குறிப்புகள் De Varthama London 1868 ஆவணப் பதிவில் காணக் கிடைக்கிறது. இபப்டிப்பட்ட சமூக இழிவுகளை எதிர்த்து, பார்ப்பனர் ஆதிக் கத்தை தகர்த்திட - கேரள மண்ணில் சமூகப் புரட்சியாளர்கள் தோன்றினர்.


அய்யன்காளி (1863-1941) : தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து சமூகக் கொடுமைகளை எதிர்த்த போராளி, கால்பந்து வீரர். பார்ப்பனர்களுடன் அவர் சேர்ந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. ஒருமுறை உதைத்த பந்து பார்ப்பனர் வீட்டில் சென்று விழுந்து விட்டது. தீண்டத்தகாதவர் உதைத்த பந்து வீட்டில் வந்து விழுந்ததால் தாங்கள் தீட்டாகி விட்டதாக பார்ப்பனர்கள் அவரை வசை பாடுகின்றனர். அன்று தொடங் கினார் அய்யங்காளி. பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பை, உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்லக் கூடாது என இருந்த நிலைமைக்கு எதிராக துணிச்சலாக இரட்டை மாட்டு வண்டியைப் பூட்டி சாட்டையை சுழற்றியபடி அந்த தெருக்களில் துணிச்சலுடன் சென்று வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஜாதி பரிபாலன சங்கம் அமைத்து அவர்தம் உரிமைக்கு, சமமாக நடத்தப்படுவதற்குப் பல போராட்டங்களை நடத்தினார். கடவுளைப் பற்றிக் கவலைப் படாத புரட்சியாளராக வாழ்ந்தார். இவரது சமுதாயப் பணியினைப் பாராட்டி அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான சட்டமன்றத்தில் உறுப்பினராக நியமனம் பெற்றார். பல புரட்சிகர மாற்றங்கள் சட்டப் பூர்வ மாக வர வழிவகுத்தார்.


அந்நாளில் முற்போக்கான எண்ணங்களுடன் செயல் பட்டு வந்த சட்டாம்பி சாமி (குஞ்சம் பிள்ளை) (இவர்தான் புரட்சியாளர் சிறீநாராயண குருவின் ஆசான்) அவர்களை குருவாக ஏற்று நடந்தவர். மத நம்பிக்கை ஏதும் இல்லாமல் சமுதாயப்பணி ஆற்றிய திருவனந்தபுரம் தைக்கட்டு அய்யா சாமியை தோழராகக் கொண்டு சமூக மாற்றங்களுக்காகப் பாடுபட்டார்.


சிறீ நாராயண குரு (1856-1928): கேரள சமூகத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த புரட்சியாளர் சிறீ நாராயண குரு. தாழ்த்தப்பட்ட ஜாதியினரான ஈழவர்கள், புலையர்கள் ஒட்டுமொத்தமாக சமய வழிபாடுகளில் புறக் கணிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கென தனி ஆலயம், அவர்களில் ஒருவரே அர்ச்சகர், என ஒரு புரட்சிகர மாற்றத்தை பரவலாகக் கொண்டுவந்தார். ஒரே மதம், ஒரே கடவுள் என ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருமைப்பாட்டை வளர்த்தார். பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகராக அவர் நிறுவிய கோயில்களில் நியமனம் செய்ததுதான் இன்று நடைபெறும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அப்படிப்பட்ட நியமனங்களுக்கு உத்தரவு போட முடிந்தது.


எஸ்.என்.டி.பி. (சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன) யோகம் எனும் அமைப்பினை தொடங்கி அடக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்றிடப் பாடுபட்டார். அடக்கப்பட்ட மக்களில் குறிப்பாக ஈழவ மக்கள், பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து இன்று பரவலாக பல நிலைகளில் கல்வி, உத்தியோகம் பெற்று நல்லபடி சமத்துவ நிலையில் இருப்பதற்கு மக்கள் இயக்கத்தின் மூலம் அடித்தளம் அமைத்தவர் சிறீ நாராயண குரு ஆவார்.


டாக்டர் பத்மநாபன் (எ) பல்பு (1863-1950) : சிறீ நாராயண குருவின் எஸ்.என்.டி.பி. யோகம் இயக்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்து செயல்பட்டவர். ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த இவர் லண்டன் சென்று மருந்தியல் கல்வி கற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலை கிடைக்காத காரணத் தால் மைசூர் சென்று பணியாற்றியவர். எஸ்.என்.டி.பி. யோகம் அமைப்பின் செயல்பாட்டை கல்வி வளர்ச்சியின் பக்கம் திருப்பி பல பள்ளிக் கூடங்களைத் திறப்பதற்கு காரணமாக இருந்தவர். இதனால் ஈழவ சமுதாயத்துப் பிள்ளைகள் கல்வி கற்று பின்னாளில் உயர்நிலைக்கு வரமுடிந்தது. எஸ்.என்.டி.பி. அமைப்பின் செயல்பாட்டில் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கி அதன் பயன்கள் பரந்துபட்டு கிடைக்கச் செய்த சமூக நீதிச் செயல்பாட்டாளர். சிறீ நாராயண குருவின் கொள்கைகள் பரவிட முக்கியக் காரணமாக இருந்தவர்.


சகோதரன் அய்யப்பன் (1889-1968) :


சிறீ நாராயண குருவின் அமைப்புடன் தொடர்பில் இருந் தாலும் தன்னைக் கடவுள் மறுப்பாளர் எனப் பிரகடனப்படுத்திக் செயல்பட்டவர். ‘சகோதரன்’ எனும் சமூக நீதி ஏட்டினை நடத்தியதால் தனது பெயருடன் ஏட்டின் பெயரையும் சேர்த்து ‘சகோதரன் அய்யப்பன்’ என ஒடுக்கப்பட்ட மக்களால் அறி யப்பட்டவர். அவர்களுக்கு சமூக நீதிப் பலன்கள் கிடைக்கப் பாடுபட்டவர். உயர்ஜாதி-தாழ்த்தப்பட்ட ஜாதியரிடையிலான பிரிவு மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட ஜாதியினருள் ஈழவர், தீயர், புலையர் என பிரிவுகள் நிலவி அவர்களுக்குள்ளும் வேற் றுமை, பாகுபாட்டு உணர்வு நிலவிவந்தது. அந்த தாழ்த்தப் பட்ட மக்கள் பிரிவினரை ஒருங்கிணைத்து சமபந்தி போஜன நிகழ்ச்சியினை நடத்தி புரட்சி செய்தவர் சகோதரன் அய்யப்பன் ஆவார். அதற்காகவே பல்வேறு எதிர்ப்புகளை, துயரங்களைச் சந்தித்தார். பின்னாளில் கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றி மக்கள் பணியில் ஈடுபட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரன் அய்யப்பன் நடத்திய சமபந்தி போஜன நிகழ்ச்சியின் 100-வது ஆண்டு விழாவினை கேரள பகுத்தறிவாளர் இயக்கம் நடத்தி அதில் திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்புப் பெற்றோம். சகோதரன் அய்யப்பன் தந்தை பெரியார் அவர் களுடன் வைக்கம் போராட்ட காலம் முதல் நெருக்கமான தொடர்பில் இருந்தார். சமூக நீதியை வலியுறுத்தி தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப்பனும் இணைந்து கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.


டி.கே. மாதவன் (1885-1930) - மகா கவிஞர் குமாரன் ஆசான் (1873-1924) ஆகிய எஸ்.என்.டி.பி. அமைப்பினைச் சார்ந்த போராளிகள் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள பொதுத் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்லும் உரிமை வேண்டி, நடத்தப்பட்ட போராட்டத்திற்கு முயற்சி எடுத்து  செயல்பட்டவர்கள். பின்னர் ஒரு கட்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் புதிய உத்வேகம் பெற்று வைக்கம் போராட்டம் வெற்றி அடைந்த வரலாறும் கேரளாவில் உண்டு.


இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட கொச்சின் சமஸ்தானம்:


கொச்சின் சமஸ்தானத்தில் நீதிக்கட்சியில் பொது வாழ்வைத் தொடங்கிய சர்.ஆர்.கே. சண்முகம் அவர்கள் திவானாகப் பொறுப்பேற்றுப் பணியாற்றும் சூழலில் நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று வகுப்புவாரி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.


கொச்சி சமஸ்தானத்தில் ஒவ்வொரு 50 உத்தியோகங் களுக்கும் 9 வகைப் பிரிவினரை எப்படி சுழற்சிமுறையில் நியமனம் அளிக்க வேண்டும் என சமஸ்தான கெஜட் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மொத்தத்தில் விழுக்காடு அடிப்படையில் 100-ல் இந்துக்களுக்கு 68 சதவீதமும் கிறிஸ்த வர்களுக்கு 24 சதவீதமும் முஸ்லீம்களுக்கு 6 சதவீதமும் - யூத இனத்தவருக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் 2 சதவீத மும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்துக்களுள் பார்ப் பனர் 4 சதவீதமும், நாயர்களுக்கு 16 சதவீதமும், ஈழவர்களுக்கு 20 சதவீதமும் இதர ஜாதி இந்துக்களுக்கு 10 சதவீதமும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு 14 சதவீதமும் என 69 சதவீதம் பிரித்து சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கி ஒரு வகுப்பினரின் ஏகபோக ஆதிக்கம், தகர்க்கப்பட்டது. இந்த சமூகப் புரட்சிப் பணியில் சமஸ்தான திவான் சர்.ஆர். கே. சண்முகம் அவர்கள் குறிப் பிடத்தக்க ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பினை அளித்தார்.


கேரளம் என்பது மாநிலமாக உருவாவதற்கு முன்னர், பிரிட்டிஷ் ஆட்சியில் திருவிதாங்கூர், கொச்சின் சமஸ்தானங் களையும் (மன்னராட்சியில் இருந்த பகுதிகள்) சென்னை ராஜதானியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கள்ளிக் கோட்டை, கண்ணனூர், மலபார் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய தாக இருந்தது. சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பொழுது அங்கு ஏற்பட்ட சமூக நீதித் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் நேரடியாக கேரளத்திலும் நடைமுறைக்கு வந்தன. சமஸ்தானங்களில் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களினால் பழமைவாதத்திலிருந்து மீண்டு வரக்கூடிய நிலைமைகள் உருவாகின. சமூகநீதித் தளத்தில் அனைத்து ஜாதியினரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என இன்றைய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அரசாணை பிறப்பித்து பரவலாக நடை முறையாவதற்கு நீண்ட நெடுங்காலமாக நடைபெற்ற சமூகநீதிப் போராட்டங்களும் அதற்கு வலு சேர்த்த பொதுக் கருத்துப் பலமே அடிப்படையாக உள்ளது. பழமை வாதத்தை எதிர்த்து, பெண்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்கின்ற வகை யில் கேரள சமூக நீதி வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி அறிவு அதிகம் பெற்ற மக்கள் கொண்ட மாநிலம் என்பதற்கும் அதுவே காரணமாகும்.


தொகுப்பு: வீ. குமரேசன்


தோள் சீலைப் போராட்டம்


ஒடுக்கப்பட்ட பெண்கள் கடந்து வந்த அவமானப் பாதை


இன்றைய கேரளாவின் பகுதியான அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நினைத்தால் நெஞ்சம் பதைபதைக்கக்கூடிய கூடிய பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஒருவித சமூகக் கொடுமை நிலவியது. உயர் ஜாதிப் (பார்ப்பனர் உட்பட) பெண்கள் தவிர்த்து இதர சமுதாயப் பெண்கள், அவர்தம் மார்பகத்தை மறைத்து ஆடை (ரவிக்கை) அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. உயர் ஜாதிப் பெண்கள் மட்டுமே ரவிக்கை அணியலாம் என எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்து வந்தது. தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் ரவிக்கை அணிந்தால் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேலும் அரசாங்கம் வரி வசூலிப்பதற்கு உலகில் எங்குமில்லாத கொடுமையான முறையும் இருந்து வந்தது. ஒடுக்கப்பட்ட ஜாதிப் பெண்கள் மார்பக வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயமுறையும் இருந்தது. மார்பக அளவிற்கு ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டது. வரிவிதிக்கும் அதிகாரிகள் மார்பகத்தை தொட்டு அளவைப் பார்த்து வரி விதித்தனர். இந்த வரலாற்றை நினைவுபடுத்திப் பார்ப்பதற்கே நெஞ்சம் கூசுகிறது. இந்த மான அவமானத்தையும் தாங்கிக் கொண்டுதான் ஒடுக்கப்பட்ட பெண்கள் வாழ்ந்து(?) வந்தனர். இந்த அவலநிலையை எதிர்த்து நாஞ்செலி என்ற போராளி வெகுண்டு எழுந்தாள் - ‘மார்பகம் இருப்பதால்தானே வரி கேட்கின்றீர்கள்! மார்பகம் இல்லாவிட்டல் வரி கேட்க மாட்டீர்களே!’ என்று சினந்து தனது மார்பகங்களை கத்தி எடுத்து தானே வெட்டி எடுத்து, தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


அன்று தொடங்கிய சமூகக் கொடுமையை எதிர்த்த போராட்டம் ‘தோள் சீலைப் போராட்டம்’ என வலுப்பெற்று மார்பக வரிவிதிப்பை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு திரும்பப் பெற்றிடும் நிலைமைகள் ஏற்பட்டது. இந்த புரட்சிமிகு தோள் சீலைப் போராட்டத்தின் பல்வேறு காலக்கட்டங்களில் பல தலைவர்கள் வழிநடத்திய நிகழ்ச்சிகள் கேரள சமூகநீதி வரலாற்றில் உண்டு.


No comments:

Post a Comment