தேசியக் கல்விக் கொள்கையில் ஆசிரியர் சங்கங்களின் சங்கநாதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

தேசியக் கல்விக் கொள்கையில் ஆசிரியர் சங்கங்களின் சங்கநாதம்!

பகுத்தறிவு ஆசிரியரணியின் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் காணொலிக் காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.(30.8.2020)


தேசியக் கல்விக் கொள்கை, 'நீட்' தேர்வு உள்ளிட்ட கல்விப் பிரச்சினைகளை மத்தியில் இருக்கக் கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கையாளும் போக்கு, இவற்றால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்ட மாக இது அமைந்திருந்தது.திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இக்கூட்டத் திற்குத் தலைமையேற்றுத் தொடக்கவுரையை ஆற்றினார்.


அனைவருக்கும் கல்வி என்று அறிவித்த மத்திய அரசு, அதனைச் செயல்படுத்திட முனையாமல், முடியாமல் அனை வரும் கல்வி கற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு, போக் கோடு ஒரு கல்வித் திட்டத்தைத் திணிப்பதுபற்றி ஆழ்ந்த கவலையுடன் கருத்துகளை எடுத்துரைத்தார்.


130 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டின் கல்விப் பிரச்சினை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை நாடாளுமன்றத்தில்கூட வைத்து விவாதிக்காமல், மக்கள் கரோனா எனும் கொடுநோயால் பெரும் அவதிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், வெளியில் வந்து மக்கள் தங்கள் கருத்தை எடுத்து வைக்க இயலாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஏற்கெனவே  தோற்று ஓடிப்போன  ஊசிப்போன குலக்கல்வியை புதுமுகமூடியணிவித்துத் திணிக்கும் சூழ்ச்சியை தமது உரையில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.


20 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெளிவாக, நுட்ப மான கருத்துகளை எடுத்து வைத்தனர்.


(1) கல்வி - பொதுப்பட்டியல் என்ற பெயரில் உள்ள ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.


(2) மாநிலங்களில் கல்வித் திட்டம் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும்.


(3) 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது உளவியல் அடிப்படையில் மாணவர்களைப் பாதிக்கக் கூடிய தாகும்.


(4) 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தொடர்ந்து பருவத் (செமஸ்டர்) தேர்வுகள் என்பதெல்லாம் கல்விமீது மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.


(5) இப்படி 3ஆம் வகுப்பு தொடங்கி பொதுத்தேர்வுகளை நடத்தினால் கல்வியில் இடைநிற்றல் (Drop-outs) என்பது அதிகரிக்கும்.


(6) ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி என்பது மிகவும் ஆபத்தானது. கிராமங்களில் தொழிற்கல்வி என்பது நடை முறையில் குலக்கல்விதான் என்பது யாருக்குத்தான் தெரியாது.


(7) தொழிற்கல்விதான் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், ஏற்கனவே அய்.டி.அய். பாலிடெக்னிக்குள் இருக் கின்றன. அவற்றில் சேர்ந்து படிக்க வாய்ப்பு இருக்கும்போது 11ஆம் வயதில் உள்ளூர்த் தொழில்களைக் கற்க வேண்டும் என்பதன் பின்னணியில் ராஜாஜியின் பழைய குலக்கல்வி திட்டம் பதுங்கி இருக்கிறது.


(8) தொடர்ந்து தேர்வுமயமாக இருப்பதால், அத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவன் தொடர்ந்து படிக்காமல், குலத் தொழில் பக்கம் தள்ளப்படும் ஆபத்து இதில் பதுங்கியுள்ளது.


(9) தன்னார்வ அமைப்புகளிலிருந்து பாடம் நடத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது; யார் அந்தத் தன்னார்வலர்கள்? அவர்களைத் தீர்மானிப்பது, தேர்வு செய்வது எப்படி-யார்? பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத்தான் இருப்பார்கள்.


(10) இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதற்கு? மொழிப்பாடங் களில் கவனம் செலுத்தினால், முதல் தலை முறையாகப் படிப்ப வர்களால் மற்ற பாடங்களில் எப்படி கவனம் செலுத்த முடியும்?


(11) ஆர்.எஸ்.எஸின் சனாதன திட்டம்தான் இது.


(12) சமூகநீதிக்கும் தமிழ்நாட்டு உரிமைக்கும், மொழிக்கும் ஆபத்து வரும்போதெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், விடுதலை ஏடு எதிர்ப்புக் குரல் கொடுத்து அனை வரையும் ஒருங்கிணைப்பு செய்து, தாய்ப்பறவைபோல் காப் பாற்றி வருவதற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.


(13) அரசியல் நோக்கமின்றி அனைவரையும் ஒருங்கிணைக் கும் மய்யப் புள்ளியாகத் திகழ்பவர் தந்தை பெரியார் வழிவந்த நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அவர் வழிகாட்டும் திசையில் ஆசிரியர்கள் அணிவகுக்கத் தயாராக உள்ளோம் என்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கூறிய அரிய கருத்துகள் அபூர்வமானவை ஆக்கப்பூர்வ மானவை வரவேற்கத்தக்க வையே!


திராவிடர் கழகம் ஏற்கெனவே அதே பிரச்சினைக்காக ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் அடங்கிய முத் தரப்பு ஒருங்கிணைப்பை செய்து ஆற்றுப்படுத்தியதன் நீட் சியே இது; தேவைப்படும்போதெல்லாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். இந்தியத் துணைக்கண்டத்திலேயே இது தான் முன்மாதிரியான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment