'ஆத்மா, கர்மா' என்பதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதற்கே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 7, 2020

'ஆத்மா, கர்மா' என்பதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதற்கே!

காணொலியில் கழகத் தலைவர் - பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவு


* கலி. பூங்குன்றன்



இஸ்கான் சார்பில் பகவத் கீதை உபந்நியாசம் இந்தியில் நடக்கிறது என்ற அறிவிப்பைக் கண்ட மாத்தி ரத்தில் “பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவினை” நேற்று மாலை கழகத் தலைவர் ஆசிரியர் காணொலி மூலம் தொடங்கினார்.


‘கீதையின் மறுபக்கம்‘ எனும் நூலினைக் கழகத் தலைவர் எழுதி அதன் முதல் பதிப்பு 1998இல் வெளிவந்தது. இதுவரை 27 பதிப்புகள் வெளியாகி இலட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. 'Bhagavad Gita: Myth or Mirage?'  என்று பேராசிரியர் பழனி.அரங்கசாமி அவர்களால் அந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு- இரு பதிப்புகள் வெளியாகி யுள்ளன.


இந்த நூலை எழுதுவதற்குக் கழகத் தலைவர் இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டார். சமஸ்கிருதத்தில் இருக்கும் கீதை பற்றி ஆசிரியர் எப்படி எழுதினார்? லிஃப்கோ வெளியிட்ட நூல் - சமஸ்கிருத சுலோகங்கள் (700) அவற்றின் கீழ் ஆங்காங்கே தமிழில் மொழியாக்கம் தரப்பட்டுள்ளது. மேலும் கீதைபற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த நூல்களையெல்லாம் திரட்டி (73 நூல்கள்), இந்நூல் எழுதுவதற்கு இரண் டாண்டுகள் தேவைப்பட்டன.


சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலை வெளி யிட்டார் (16.3.1999).


அந்த வெளியீட்டு விழாவில் நாவலர் எழுப்பிய வினா விவேகமானது. கீதை -  என்பது கீதம் - கீதமாக (பாடலாக) இருக்கக்கூடிய சுலோகங்கள் எப்படி உபதேசம் ஆனது? போர்க்களத்தில் பாட்டு பாடி கொண்டிருப்பார்களா? என்பதுதான் அந்த முக்கியமான கேள்வியாகும்.


நேற்றைய உரையில் கழகத் தலைவர் சில வினாக்களை எழுப்பியும் கருத்துகளைத் தந்தும் தொடர் சொற்பொழிவின் முன்னுரையைத் தந்தார்.


(1) மகாபாரதம் என்பது உண்மையில் நடந்த கதையா?


(2) கிருஷ்ணன் என்ற கடவுள் உண்டா?


(3) கீதை உண்டாக்கப்பட்டது எப்போது?


(4) கீதை என்பது மகாபாரதத்தில் இடம் பெற்றது எப்படி?


(5) கீதையை ஏன் பரப்புகிறார்கள்?


(6) கீதையை நாம் ஏன் எதிர்க்கிறோம்?


இவை ஆசிரியர் உரையின் அடிநாதமாக அமைந் திருந்தன.


தாம் எழுதிய நூல்களில் எல்லாம் ஆரியத்தைத் தூக்கிப் பிடித்து எழுதிய மாக்ஸ் முல்லரேகூட வேதங்களில் எந்த இடத்திலும் மகாபாரதம் என்ற சொல்லே இல்லை என்று நிறுவியுள்ளார்.


‘ஆனந்தவிகடன்’ என்ன கூறுகிறது:


“பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக்  கூறப்படுகிறது. ஆனால் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திரமாக, சம்பவமாகக் கருத முடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை”


“கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை, போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.”


“இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் அவ்வப் போது பல சமஸ்தானக் கவிஞர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டிப் பலவற்றை ‘புகுத்தி’யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே!


- (‘ஆனந்தவிகடன்’ 12.10.1975)


(பார்ப்பன இதழான ‘ஆனந்த விகடனே’ இவ்வாறு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது - இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?)


புத்தருக்குப் பிறகு எழுதப்பட்டதே பாரதம், இராமா யணம் எல்லாம் என்று கழகத் தலைவர் குறிப்பிட்டார்.


புத்தர் தோன்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருணாசிரமம், யாகம் இவற்றை மக்கள் மத்தியிலிருந்து வெளியேற்றினார். பார்ப்பனர்களின் ஆதிக்கப் பல் பிடுங்கப்பட்டது.


இந்த நிலையில் புத்தருக்குப் பின் தங்களை உயிர்ப்பித்துக் கொள்ளக் கற்பிக்கப்பட்டதே கீதையும் கிருஷ்ணனும்.


ஆரியர்கள் பசு மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியதும், பசுக் கொலையை நீக்கியதும் - புத்தர் யாகங்களை எதிர்த்து, உயிர்க் கொலைகளைத் தடுத்ததற்குப் பிறகே என்று கூறிய கழகத் தலைவர் பார்ப்பனர்கள் பசு மாமிசம் சாப்பிட்டவர்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு என்று குறிப்பிட்டார்.  (கழகத் தலைவர் ஆசிரியரால் எழுதப்பட்ட "கீதையின் மறு பக்கம்" நூலின் பின்னனிணைப்பில் ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’ வார ஏட்டில் வெளிவந்த பார்ப்பனர்கள் பசுக் கொலை, பசு மாமிசம் சாப்பிட்ட ஆதாரங்கள் இடம் பெற்றுள்ளன).


அதேபோல ‘என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா’ என்ன கூறுகிறது?


“புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமாக பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக “கிருஷ்ணாவதாரக் கதை” யின் நோக்கம் புத்தர் கொள்கைகளின் செல் வாக்கை ஒழிக்கவே இட்டுக்கட்டப்பட்டது” என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.


கிருஷ்ணனை மகாவிஷ்ணுவின் 9ஆம் அவதார மாக்கிய ஆரியம், புத்தரையும் விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கியது எல்லாம் ஆரியத்தின் வஞ்சகம் சூழ்ச்சி என்பதை வெளிப்படுத்தினார் கழகத் தலைவர்.


புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் ராம்சரண்சர்மா (ஆர்.எஸ். சர்மா) என்ன எழுதுகிறார்?


கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி.200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத்துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில், இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றி பேசுவதைக் கைவிட வேண்டும் என்று எழுதி யுள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.


கழகத் தலைவரின் “கீதையின் மறுபக்கம்“ நூலில் “பாரதம் நடந்த கதையா?” எனும் தலைப்பில் வரலாற்று ஆவணங்கள் ஆதாரப் பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளன.


“யாரைத் தான் நம்புவதோ?” என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தியும் இந்நூலின் 336ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


ஜெர்மன் நாட்டின் ஆராய்ச்சி அறிஞரான “ரூடால்ப் ஓட்டோ’ என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பே கீதையை ஆய்வு செய் தவர்.


அவர் ஒரிஜினல் கீதை 73 சுலோ கங்களை மட்டுமே கொண்டது என்று கூறியுள்ளார்.


(Original Gita’ 1939 London (பக்கம் 21), Author: Otto Rudolf).


டாக்டர் அம்பேத்கர் கீதையைப் பற்றி ஒரு முட்டாளின் உளறல் என்று சொன்னதையும் நினைவு படுத்திய கழகத் தலைவர்,


கீதை உள்ளிட்ட பாரதம், இரா மாயணம் போன்ற இதிகாசங் களையும், 18 புராணங்களையும் நாம் விமர்சிப்பதற்குக் காரணம் யாரை யும் புண்படுத்தும், சங்கடப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல!


மாறாக இவை மக்களைப் பிறப் பின் அடிப்படையில் பேதப்படுத் துவது, பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கொச்சைப்படுத்துவது,


இம்மண்ணுக்குரிய பெரும் மக்களை - பெரும் பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்துவது- என்பவற்றை எதிர்த்தே தீர வேண்டும். ஒழித்தே தீர வேண்டும்; என்ற சமத்துவ நோக்கமே இதிகாசங்களையும், புராணங்களையும் நாம் எதிர்ப்பதன்  - எரிப்பதன் நோக்கம் என்று தெளிவு படுத்தினார்.


‘ஆத்மா, கர்மா என்று சொல்வதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதற்கேÕ என்பதையும் அழுத்தமாகச் சொன் னார்.


புராணங்கள் என்றால் என்ன, இதிகாசங்கள் என்றால் என்ன என்பதற்கு விளங்கும்படி பொருள் கூறினார். புராணம் என்றால் - புரோகிதம், வேதம் என்றால் - வைதீகம், இதிகாசம் என்றால் இப்படி நடந்தது என்ற பொருளில் சொல்லப்படுவதாகும் என்று விளக்கம் அளித்தார்.


திருக்குறள் என்பது Ôபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்Õ என்ற சமத்துவக் கோட்பாட்டைக் கொண்ட தாகும். கீதையோ, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது, உயர்வு, தாழ்வு பேசுவதாகும்.


ஆனாலும், சமத்துவ நூலான திருக்குறளைவிட, பிறப்பில் பேதம் பேசும், பெண்களைக் கொச்சைப் படுத்தும் கீதை மிகப் பெரிய அளவில் உலகம் எங்கும் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. அதற்கென்று அமைப்பை ஏற்படுத்தி பெரும்நிதி  ஏற்பாடு செய்து, செயல்பட்டு வருகிறார்கள் என்ற தகவலையும் கூறினார்.  கீதையைப் பற்றி நாலு வார்த்தை பேசினால் ஏதோ மதிப்பு வரும், தன்னைப் பெரிய மனிதனாகக் கருதுவார்கள் என்ற போக்கு நம் மக்களிடம் இருப்பதையும் நாசூக்காகச் சாடினார்.


கீதை என்பது ஒரு வரலாற்று நூல் அல்ல என்று எனக்குத் தோன்றியது என்று கூறிய காந்தியார், கீதை என் மதம் என்று கூறியதையும் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.


இராமாயணம், பாரதம் இரண்டில் இராமாயணம்தான் முந்தியது என்று சொல்லுவார்கள் - அது தவறு பாரதம்தான் முந்தியது என்று தந்தை பெரியார் காரணா காரியத்தோடு கணித்துச் சொன்னதையும் கழகத் தலைவர் கூறினார்.


கீதையைப்பற்றி கழகத்தின் சார்பில் ஒரு நூல் வெளியிடப்பட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் விருப்பம் - அதற்கான அறிவிப்பினையும் ‘விடுதலை’ வாயிலாகக் கொடுத்திருந்தார். அப்படி நூல் எழுதுப வர்களுக்குச் சன்மானமும் அளிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். எனினும் யாரும் முன்வர வில்லை என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்களில் திறமை உள்ளவர்கள் யாரும் இல்லை என்று பொருள் அல்ல - அத்தகையவர்களுக்குத் துணிவு இல்லை - அதுதான் காரணம் என்று குறிப் பிட்டார்.


இறுதியாக ஓர்  அறிவிப்பையும் வெளியிட்டார்.


தமிழில் வெளிவந்துள்ள திராவிடர் கழக வெளியீடான ‘கீதையின் மறுபக்கம்‘ நூலின் நன்கொடை ரூ.300. அதனை ரூ.200க்கும், ஆங்கில நூலுக்குத் தள்ளுபடி செய்தும் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.


 


கலைஞரும் - இராம. கோபாலனும்



முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், இந்து முன்னணியின் மாநில தலைவர் இராம.கோபாலன் சந்திக்கச் சென்றார். போகும் போது பகவத் கீதை நூல் ஒன்றையும் கையோடு எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார்; கலைஞரும் தயாராகவே இருந்தார். தனது மேசையைத் திறந்து ஒரு நூலை எடுத்து திருவாளர் இராம. கோபாலனிடம் அளித்து "இதையும் படியுங்கள்" என்று சொன்னார். அந்த நூல்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால் 1998இல் எழுதி வெளியிடப்பட்ட "கீதையின் மறுபக்கம்" எனும் நூல். கலைஞர் அவர்களைச் சந்திக்கும் முன் இராம.கோபாலனின் மனநிலை வேறு - விடை பெற்றபோது இருந்த மனநிலை வேறு. இது நடந்தது 8.9.2004.


தொடக்கவுரையில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்.


 


 


No comments:

Post a Comment