ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்...


  1. ஏழைகளால் ஏற்றம் உண்டு; கோழைகளால் எந்தப் பலனும் ஏற்படவே ஏற்படாது.


ஏழை தருவரே ஏற்ற(ம்) அதுவொரு


கோழையா லுண்டாவ தில்.



  1. அன்பை விளைநிலமாக நாம் மாற்றிக்கொண்டு அதைப் பிறருக்கு வழங்கும் பணியில் வேகமாக ஈடுபட்டால், எல்லாம் சரியாகிவிடும்.


அன்பை விளைத்து அவனி நலஞ்செய்வாய்


துன்பமும் ஓடுந் துவண்டு .



  1. மரணத்தைவிடக் கொடியது மரணம் வந்துவிடுமோ என்ற அச்சம். மகிழ்ச்சியை விரட்டி அடிப்பதே அந்த அச்சத்தின் ஒரே வேலை.


மாய்க்கும் மனத்தின் மகிழ்ச்சியை நோயச்சம்


சாய்க்குமே நோயினு மேல்.



  1. வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அதிகார பலத்தோடு அமர்ந்துவிட்டால், அதிக காரமாக மக்களிடம் நடந்து கொள்ளாதவர்களே இல்லை.


ஆட்சி கொடுக்கும் அதிகா ரமதனைக்


காட்டாதார் யாரு மிலர்



  1. நடந்த பாதையே பத்திரமானது; பாதுகாப்பு நிறைந்தது என்று எண்ணி அதிலேயே நடப்பதால், நமது மூளையின் திறன் உயராது. அன்றாடம் புதுப்புது செய்திகளை அறிதல், புதுப்புது அறைகூவல்களை ஏற்றல், புதிய அனுபவங்களைத் தேடிப்பிடித்தல் போன்றவையே நம்மை உயர்த்தும்.


போன வழியினில் போகாமல் நாளுமே


ஆன புதுப்பாதை தேடு.



  1. நாம் இழக்கும் எதையும் திரும்பப் பெறமுடியும் இரண்டு இழந்தால் மீண்டும் பெறவே முடியாது ஒன்று உயிர். மற்றொன்று காலம்.


உயிரோடு காலமும் ஓடினால் வாரா;


கயிறில்லாப் பட்டமவை காண்.



  1. எந்தப் பணியை நாம் விருப்பத்துடன் செய்ய வேண்டும். வெறுப்புடன் செய்யத்


தொடங்கினால், அது மிகப் பெரிய சுமையாகவே தோன்றி விடும்.


விரும்பச் சுகமாகும் வேலையும் வேண்டா


வெறுப்பால் சுமையாகுங் காண்.


ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை


No comments:

Post a Comment