'சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

'சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா'

வைதிகர்கள் ஒன்றைச் சொல்லுவார்கள் 'திருமணம் என்பது நீங்களோ, நாங்களோ பார்த்து நிச்சயிக்கப்படுவதில்லை; சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்று வாய்க் கூசாமல் கூறுவார்கள்.


எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அதனைச் சிந்தித்துச் சொல்லுவதில்லை; பரம்பரைப் பரம்பரையாக சொல்லி வைத்துச் சென்றுள்ளார்களே அவைதான் தங்களின் பிதுரார்ஜித சொத்து என்ற நினைப்பும் - மனப்பாடமும் அவர்களுக்கு.


அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? அந்த நிச்சயிப்பை யார் செய்கிறார்கள்? ஒரு சோதிடனோ ஒரு புரோகிதனோ தானே சொல்கிறார், செய்கிறார்! இவர்கள் என்ன சொர்க்க லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் தூதுவர்களா?


இராமச்சந்திர மூர்த்திக்கும் - சீதா தேவிக்கும் கல்யாணத்தை நிச்சயித்தவர் யார்? சாட்சாத் வசிஷ்டமுனிவர் தானே! அவர் திரிகால ஞானி என்பார்களே- திரிகால ஞானி என்றால் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே 'ஞான திருஷ்டியால்' நிச்சயிக்கக்கூடிய பேராற்றல் படைத்தவர் என்று பிதற்றுவார்களே - அந்த இராமாயண இதிகாச கால ஜோடிகளின் இல்லற வாழ்க்கை இனித்ததா?


இவ்வளவுக்கும் இராமச்சந்திரமூர்த்தி என்றால் சாதாரணமா? மகாவிஷ்ணுவின் 7ஆம் 'அவதார'மாயிற்றே! அதுவும் சாதாரணமாகவா பிறந்தான்? கலைக் கோட்டு முனிவரின் முன்னிலையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு அல்லவா பிறந்தான் என்கிறது வால்மீகியின் ஸ்ரீமத் இராமாயணம்.


அப்படிப் பிறந்த பிள்ளையாண்டானாகிய இராமனுக்கும், 'இலட்சுமியின் அவதாரமான' சீதாதேவிக்கும் நாள் நட்சத்திரம் குறித்த - ஆசீர்வதித்த ஆசாமிதான் சாதாரணமானவரா? வசிஷ்ட முனிவர்தானே - அவரால்  ஆசீர்வதிக்கப்பட்ட அந்த இராமர் - சீதை ஜோடியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா?


14 வருடம் காட்டில் அல்லவா அலைந்து திரிந்தார்கள்? கர்ப்பவதியான சீதா லட்சுமி கொடும் மிருகங்கள் வாழும் காட்டில் அல்லவா உழல வேண்டியிருந்தது.


கடைசியில் அவ்விருவரின் வாழ்வும் எப்படி முடிந்தது? சுபமா? துன்பயியலா? இராமன் சரயு நதியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டான், சீதாலட்சுமி  பூமி பிளந்து மரித்தாள் என்பதுதானே!


இவர்கள் திருமணமும் 'சொர்க்கத்தில்' நிச்சயிக்கப் பட்டதுதானே! வைதிகத்தின் நங்கூரம் மக்கள் மனதில் பதியவும், புரோகிதச் சுரண்டல் தொழில் சொகுசாக நடக்கவுமான சூழ்ச்சியும், தந்திரமும்தானே இதற்கு ஆதாரமானவை.


அந்த 'சொர்க்கத்தில்' நிச்சயிக்கப்படும் 'கல்யாணம்' எனும் நம்பிக்கையின் அச்சை முறித்து விட்டதே கரோனா! நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, அய்யர் மந்திரம் சொல்லி, அருந்ததி பார்த்து, அக்னி வலம் வந்து நடந்தால்தான் திருமணம் - அப்படி நடத்திக் கொண்டவர்கள்தான் சுபீட்சவாழ்வுக்கு உத்தரவாதம் உள்ளவர்கள் என்ற மூடநம்பிக்கை இந்தக் கால கட்டத்தில் நல்ல அளவுக்கு உள் வாங்கி விட்டது.


எப்படி எப்படியெல்லாம் திருமணங்கள் இப்பொழுது நடந்து கொண்டுள்ளன! கேரள மாநில எல்லை  - தமிழ்நாடு எல்லை சுங்கச்சாவடியில் திருமணம் - வீட்டில் பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டு திருமணங்கள் - கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்  பூட்டிக் கிடக்கும் கோயில் கதவுக்கு முன்பு புரோகிதரை அழைக்காமல் கல்யாணம் என்றெல்லாம் நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன!


காணொலி மூலம் திருமணம், காணொலி மூலம் அழைப்பிதழ்கள் என்ற புதிய மாற்றம் வந்து விட்டதே! ஆம், மாற்றம்தான் மாறாதது!


தந்தை பெரியாரால் 1928இல் சுக்கில நத்தத்தில் (அருப்புக்கோட்டை) நடத்தி வைக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம் எவ்வளவோ எதிர்ப்புகளையும், சட்டத் தடைகளையும் தகர்த்து இப்பொழுது சட்ட அங்கீகாரமும் பெற்ற திருமணமாக ("வாழ்க அண்ணா!") வீறு நடைபோட்டு உலா வருகிறதே!


தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியாவிலும் சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதே!


வீண் செலவு இல்லை - உற்றார் உறவினர் செலவு செய்து கொண்டு வரும் வேலைக்கு இடமில்லை - கால இழப்பு இல்லை - உழைப்பு மிச்சம் - இப்படியாக கரோனாவால் திருமணங்கள் அரங்கேறி வருகின்றன.


நெசவாளி குரங்கை வளர்க்க மாட்டான் -  முன்னேற ஆசைப்படுபவன் மூடநம்பிக்கை சகதியில் வீழ மாட்டான்.


கரோனா காலம் கழிந்தாலும் மக்கள் மனதில் இந்தத் திசையில் மறுமலர்ச்சி எண்ணங்கள் பயணித்துக் கொண்டுதான் இருக்கும். இருக்கவும் வேண்டும். அதிர்ச்சி வைத்தியம் என்று ஒன்று இருக்கிறதே - அது இதுதான் என்று எடுத்துக் கொள்வோமாக!


கரோனா என்ற கெடுதலிலும் ஏற்பட்ட திருப்பம் இது!


No comments:

Post a Comment