சிங்கப்பூர் கழகத் தோழர்களிடையே தமிழர் தலைவர் காணொலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

சிங்கப்பூர் கழகத் தோழர்களிடையே தமிழர் தலைவர் காணொலி

50 நாள் ஊரடங்கு - 10 புதிய நூல்களுக்கான தயாரிப்பு 


தமிழர் தலைவரின் மகிழ்ச்சியான அறிவிப்பு


* கலி. பூங்குன்றன்



காணொலி மூலம் கழகத் தோழர்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும், பகுத்தறிவாளர் களையும் தமிழ் அபிமானிகளையும் சந்தித்துக் கலந்துறவாடி வரும் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை (27.5.2020) சிங்கப்பூர் வாழ் கழகத் தோழர்கள், தமிழ் அறிஞர்கள் மத்தியில் காணொலி மூலம் கலந்துரையாடினார்.


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் இதற் கான ஏற்பாடுகளை ஆர்வமுடன் செய்திருக்கிறது.


காணொலியில் கழகத் தலைவர் தெரிவித்த, வெளியிட்ட கருத்துகளும், திட்டங்களும் முக்கிய மானவை.


தொடக்க காலம் முதல் நமது இயக்கத்திற்கு, கொள்கைக்குப் பேராதரவு காட்டி வந்த பெருமகனார் இராமசாமி அவர்களின் பெருமைகளை எடுத்துக் கூறி வீர வணக்கம் செலுத்தித் தன் உரையைத் தொடங்கினார்.


77 ஆண்டுகளுக்குமுன் செய்யாறில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், 'இனிவரும் உலகம்' குறித்துத் தொலைநோக்கோடு கூறினார் -  ஒருவருக்கொருவர் முகம் காட்டிப் பேசும் காலம் வரும் என்றார் தந்தை பெரியார். அதுதான் இப்பொழுது நாம் காணொலி மூலம் கலந்துறவாடும் இந்த நிகழ்ச்சியாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


எதிரிகள் இரண்டு வகைப்படுவர். கண்ணுக்குத் தெரியும் எதிரிகள் ஒரு வகை - கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியின் பாதிப்பான கரோனா. இதனை எதிர்த்துதான் உலகமே போராடிக் கொண்டு இருக்கிறது.


இதற்காக அஞ்சி முடங்கிட வேண்டியதில்லை. இதற்கு முன்பும் இது போன்றவற்றைச் சந்தித்துத்தான் வந்திருக்கிறோம். புயல்களையும், பெரு வெள்ளங் களையும் கடந்துதான் வந்துள்ளோம். இதையும் எதிர் கொள்வோம் - யாரும் அஞ்சத் தேவையில்லை. புற்று நோய்க்கிடையே சமூகம் வாழவில்லையா? கரோனாவால் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. அறிவியல் புதிய மருந்துகளை - தடுப்புகளைக் கண்டுபிடித்தே தீரும்.


எல்லா இரவுகளும் விடிந்தே தீர வேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும்!


தளர்ச்சி அடையக் கூடாது. இது ஒன்றும் நிரந்தர மானதல்ல - சோதனைகள் வரும் - அதைச் சந்திக்கப் பழக்கப்பட்டவர்கள் நாம். அதைச் சாதனைகளாக மாற்றும் சக்தி நமக்கு உண்டு.


தன்னம்பிக்கையுடன், தன்மானம், இனமானம் என்ற பாதையில் பயணிப்போம். நோய் என்று சொன்னால் - மருத்துவர் என்ன சொல்லுகிறாரோ - அதனைக் கடைப்பிடிப்பதுதான் சரியானது.


ஒருவருக்கொருவர் இடைவெளி அவசியம், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழு வுதல், கூடுமானவரை தனிமைப்படுத்திக் கொள் ளுதல் ஆகியவற்றை இந்தக் கால கட்டத்தில் கடைப் பிடியுங்கள்.


போதாத காலம் என்ற ஒன்று இல்லை - இன்னும் சொல்லப் போனால் காலம் போதவில்லை என்ற வகையில் காலத்தைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.


நம் இயக்கம் தொண்டு செய்வதற்காகவே பிறந்த இயக்கம். இல்லறம், துறவறம் என்பார்கள். தொண்டறம்தான் நாம் மேற்கொள்வது.


சிங்கப்பூரை பொறுத்தவரையில் பெரியார் சமூக சேவை மன்றம் பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஓடி விட்டன - நற்பணியாற்றி வரு கிறது. இந்த நேரத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளாகி யிருப்பவர்களுக்கு உதவிக் கரங்களை நீட்டுங்கள்.


மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். இடைப்பட்ட காலத்தில் வாழ்கிறான். இந்த இடைப்பட்ட வாழ்க்கையினை எப்படி வாழ்கிறோம் - எந்தக் குறிக்கோளோடு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம்.


மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே, தனக்காக மட்டும் வாழக் கூடாது என்பார் தந்தை பெரியார். அப்படி சொன்னபடியே வாழ்ந்து காட்டியவரும் அவரே.


இந்தக் காலத்தை ஓய்வாகக் கருதாமல் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அசவுகரியமான சூழலை சவுகரியமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். காலத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை பிற்பகல் 2 மணி வரை 'விடுதலை'ப் பணி எப் பொழுதும்போல. மற்ற நேரங்களில் படிப்பு - எழுத்துப் பணி, காலை மாலை இருவேளைகளிலும் நடைப்பயிற்சி. காணொலி மூலமாக கலந்துரையாடல்கள் என்று செயல்கள் தொடர்கின்றன.


நம் தோழர்கள் உடல்நலனைப் பேணுவது முக்கியம். நோய்  எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சிங்கப்பூருக்கு இரண்டு முறை தந்தைபெரியார் வந்துள்ளார். 1929இல் ஒருமுறையும், 1954இல் இன்னொரு முறையும் பயணம் செய்தார். அப்பொழுது சிங்கப்பூர் வானொலி நிலையம் தந்தைபெரியாரிடம் ஒரு கேள்வியைக் கேட்டது.


ஒரு மாத காலம் இங்கு சுற்றுப் பயணம் செய் துள்ளீர்கள் - இந்நாட்டு மக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன என்பதுதான் அந்தக் கேள்வி.


மூடநம்பிக்கையின்றி ஒற்றுமைப் பாராட்டி அன்புடன் வாழ வேண்டும். வருவாய் ஈட்ட வேண் டும், குழந்தைகளுக்குத் தக்க கல்வியைக் கொடுக்க வேண்டும், சேமிப்பு முக்கியம், எதிர்காலத்தில் தொழில்களைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று கூறியதை இப்பொழுதும் நினைவுபடுத்துகிறேன்.


சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - இது வெறும் பேச்சல்ல - அடுக்குச் சொல்லும் அல்ல - வாழ்வியல் முறையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கான ஆணையைப் பிறப்பித்தார். அதனை முதலில் செயல்படுத்திய வெளிநாடு சிங்கப் பூரே என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.


பேராசிரியர் திண்ணப்பனார்


தோழர்கள் பலரும் கருத்துகளையும், ஆலோ சனைகளையும் எடுத்து வைத்தனர். தொண்டறம் என்ற சொல்லை பேராசிரியர் திண்ணப்பனார் சிலா கித்தார். 'தொண்டறம்', 'வாழ்விணையர்', 'மானமிகு' என்ற சொற்களை நாம் உருவாக்கிக் கொடுத்துள் ளோம் என்று தன்னடக்கத்துடன் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.


ஊரடங்கும் இந்தக் கால கட்டத்தில் மக்களுக்குத் தாங்கள் அளிக்கப் போவது என்ன என்ற வினாவை மா. அன்பழகன் எழுப்பியபோது, பத்து  நூல்களைக் கொண்டு வரும் அளவுக்குக்  குறிப்புகளைத் தயாரித்து வைத்துள்ளேன் என்றார். 'சுயமரியாதைத் திருமணம்  - தத்துவமும்  வரலாறும்' எனும் நூலின் விரிவாக்கமாக இரண்டாவது தொகுதி வெளிவரும் என்றார்.


சாக்கோட்டை இளையமதி நம் இயக்கம்பற்றிய பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் 'விக்கிப்பீடியா' போன்ற ஒரு தொகுப்பு வெளிவந்தால் வசதியாக இருக்கும் என்று கூறிய கருத்தை கழகத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இங்கு சில விஷமிகள் தந்தை பெரியார்பற்றி தவறான விஷமக் கருத்துக்களை பரப்பிக் கொண்டுள்ளனர் - அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சொன்னபோது, குறிப்பாக கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு 42 பேர் கருகினர். பெரியார் எந்த கருத்தையும் சொல்லவில்லை என்று பிரச்சாரம் செய்கின்றனர் என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.


வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய் வதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. சிலவற்றை அலட்சியப்படுத்த வேண்டும். மாமிசம் சாப்பிடுபவன் என்பதற்காக எலும்புகளை மாலையாகப் போட்டு அலைய வேண்டுமா என்று தந்தை பெரியார் கூறியதைப் பதிலாகக் கூறினார்.


(கீழ்வெண்மணி சம்பவத்தின்போது தந்தை பெரியார் மருத்துவமனையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த நிலையில் தம் கையொப்பத்துடன் 'விடுதலை'யில் தலையங்கம் தீட்டியவர் தந்தை பெரியார் ('விடுதலை', 26.12.1968). ரஷ்யாவோ, அமெரிக்காவோ, பிரிட்டனோ ஆண்டால்தான் இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியும் என்றும், நம் நாட்டின் சட்டம், ஆட்சி முறை, நீதி முறைகளை எல்லாம் அந்த அறிக்கையில் மிகவும் கடுமையாக சாடினார் தந்தை பெரியார் என்பதுதான் உண்மை வரலாறு).


தோழர் கண்ணன் சொன்ன கருத்தை ஏற்று ஆடியோ நூல்கள் வெளிவரும் என்றார் கழகத் தலைவர்.


 


காணொலி காட்சியில் தெறித்த சொல்லாய்வு, பயன்பாட்டு முத்துகள்


காணொலிக் காட்சி உரையாடலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர். சுப. திண்ணப்பன் வேண்டுகோளின்படி கரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 'சமூக இடைவெளி' எனும் சொல் பற்றிய விளக்கத்தினை தமிழர் தலைவர் அளித்தார்.


'சமூக இடைவெளி' என்பது கருத்தியல் அடிப்படையில் எதிர்மறையான பொருளைக் கொண்டது. காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இழிவுகளை இடைவெளியினை குறிக்கும் தீண்டாமை, பாராமை, நெருங்காமை ஆகியவற்றை எதிர்த்து பெரியார் இயக்கம் போராடிக் கொண்டு வருகிறது. கரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இடைவெளியினை 'தனிநபர் இடைவெளி' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். 'விடுதலை' ஏட்டில் மற்றும் இயக்கப் பிரச்சாரப் பணிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 'சமூக இடைவெளி' என்பது 'தனி நபர் இடைவெளி' என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


திருக்குறள் ஆய்வாளரும், ஆங்கில மொழியாக்க அறிஞருமான எஸ். ரத்னகுமார், உரையாடுகையில், ஆங்கிலத்தில் சொல்லப்படும் "Social Distancing"  என்பது சமூக ஒற்றுமைக்கு எதிரானதாகும். அது சரியான முறையில் சொல்லப்பட வேண்டுமானால் கரோனா காலத்தில் தடுப்பு அணுகுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டியது "Physical Distancing" என்பதுதான். சமூக ஒற்றுமையை வலியுறுத்திட  "Social Closeness" என்பதுதான் சரியானதாக இருக்க முடியும். "Social Distancing" என பயன்பாட்டில் உள்ளது சரியானதல்ல. எதிர்மறைப் பொருளை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது.


 


காணொலிக் காட்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் வாழ் தமிழ் உறவுகள்


மானமிகு தோழர்கள்:


வீ. கலைச்செல்வம்  (தலைவர், பெரியார் சமூக சேவை மன்றம்) - மலைஅரசி, நா. மாறன் (பொறுப் பாளர், பெரியார் சமூக சேவை மன்றம்) - கவிதா, ச. ராஜராஜன் - தமிழ்ச்செல்வி (பொருளாளர், பெரியார் சமூக சேவை மன்றம்), பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன், எஸ்.ரத்னகுமார், எம். இலியாஸ், க. பூபாலன், புதுமைத் தேனீ மா. அன்பழகன், மனோகர் சந்திரன், இளையமதி, ராமன், மூர்த்தி, பழனி, சவுந்திரராஜன்.


No comments:

Post a Comment