இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமானுக்கு நமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமானுக்கு நமது வீர வணக்கம்


இலங்கை அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பொறுப் பேற்று  சிறப்பாக கடமையாற்றி வந்த மாண்புமிகு ஆறுமுகத் தொண்டமான் அவர்கள் நேற்று செவ்வாய் (26.5.2020) கொழும்பில் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற துயரச் செய்தி  அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி யாகும்!


பாரம்பரிய குடும்பத்தவரான, தோட்டத் தொழிலாளர் நலன் காக்கும் பெரியவர் சவுமிய தொண்டமான் அவர்களது பேரனான இவரும், அதே இலக்கோடு சியான் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்திய தலைவர்.


காட்சிக்கெளியவர் - எவரிடத்திலும் மிகவும் அன்புடனும், பண்புடனும் பழகுபவர்.


சென்னை வரும் போதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து உரையாடித் திரும்ப தவறவே மாட்டார். மறைவதற்கு முதல் நாள்கூட மலாயா தமிழர்கள், இந்திய தமிழர்கள் - தொழிலாளர்கள் நலன் குறித்த பல திட்டங்களை இந்திய அய் கமிஷனருடன் விவாதித்துள்ளார்!


இயற்கையின் கோணல் புத்தி என்பார் தந்தை பெரியார்; அவரது நடுத்தர வயதில் இப்படி ஒரு கொடுமையா? எளிதில் ஏற்க முடியவில்லை.


என்றாலும் அவரது தொண்டறம் அவரை என்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாழ்பவராக வரலாற்றில் நிலை நிறுத்தும். அவரது இழப்பு  - அக்குடும்பத்திற்கும், இலங்கை அரசுக்கும் மட்டுமல்ல; உழைக்கும் தமிழர்களுக்கு - உலகிற்கே மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு.


அவரது  குடும்பத்தினருக்கு நமது ஆறுதலும், இரங்கலும்  - அவருக்கு நமது வீரவணக்கம்!


- கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


27.5.2020


குறிப்பு: இன்று (27.5.2020) காலை 8 மணியளவில் அவரது மகன் செந்தில் தொண்டமானிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி இரங்கலைத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment