அடுத்த பெரியார் பன்னாட்டு மாநாடு தெ. ஆப்பிரிக்க தலைநகரம் டர்பனில் "பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

அடுத்த பெரியார் பன்னாட்டு மாநாடு தெ. ஆப்பிரிக்க தலைநகரம் டர்பனில் "பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம்!"

காணொலியில் கழகத் தலைவர் கருத்தா(ழ)ரம்!


* கலி. பூங்குன்றன



காணொலி காட்சி மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு விஞ்ஞான அணுகு முறை நமது கழகத்தின் தலைவர் நமக்கு அறிமுகப் படுத்தியாகும். இப்பொழுது மேலும்  பரிணாமம் பெற்று, இயக்கப் பணியில் மிக முக்கியமான பாத் திரத்தை அது வகிக்க ஆரம்பித்து விட்டது.


பகுத்தறிவுச் சிந்தனை உடைய ஓர் இயக்கம்தான் இது போன்றவற்றில் எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்பது நிரூபணமாகி விட்டது.


இன்று இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டுத் தமிழர்களுடன் கலந்துறவாடும் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று பல கருத்துக்களையும், திட்டங்களையும் அறிவித்தார்.


முக்கியமாக தந்தை பெரியார் அவர்களின் பொதுநலன் உணர்வைப் பதிவு செய்தார். மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக மட்டும் வாழக் கூடாதவன் என்ற தந்தை பெரியார்தம் சிந்தனைச் சீலத்தை வெளிப்படுத்தினார்.


"ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ,  வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலியி ருந்தாலும் அவன் 'எனக்கு வலிக்கிறது' என்று சொல்லுவதுபோல், உலகில் வேறு எந்தத் தனிப் பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும், ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும் படியும், அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற் படும்" என்று செய்யாறில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தந்தை பெரியார் உரையாற்று கையில் இதுவரை எவரும் சொல்லாத வகையில் பொது நலனைப் புரிய வைத்திருக்கிறார் ('திராவிட நாடு' 21,28.3.1943 - நூல் இனிவரும் உலகம்).


"தன்னலத்தையும், தன்மானத்தையும்விட்டு  எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ் வாகக் கொண்டு இருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதன் ஆவார்" என்று கூடக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அடிப்படையில்தான் நமது தொண்டு அமைய வேண்டும். உலகத்திலேயே சொந்த வீட்டுச் சோற்றைச் சாப்பிட்டு விட்டு ஊருக்கு உழைக்கக் கூடிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.


தந்தை பெரியார் அவர்களின் கொள்கை என்பது முதலில் நமது குடும்பத்தில் தொடங்கப்படவேண்டும்.


உண்மையான சுயமரியாதை என்பது என்ன? உழைக்கத் தயங்கக் கூடாது - சோம்பேறித்தனம் கூடாது- அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு ஆளாகக் கூடாது - சொந்த காலில் நிற்க வேண்டும்.


நமக்கு ஏராள பணிகள்  உண்டு, கடந்தாண்டு செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சிறப்பான மாநாட்டை, கருத்தரங் குகளை நடத்தினோம்.


பெரியார் பன்னாட்டு மய்யத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு - அதைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம் - இடையில் இந்தக் கரோனா வந்து தடங்கலை ஏற்படுத்தி விட்டது.


மனிதன் தன் பகுத்தறிவால் ஆற்றலால் இந்த இடர்ப்பாட் டையெல்லாம் வென்று காட் டுவான் - இதற்கு முன்பும் இது போன்ற பேரிடர்கள் வந்த துண்டு - அவற்றை எல்லாம் வென்று காட்டி மனிதன் வெற்றி நடை போடவில்லையா? அதே போல இதிலும் வென்று காட்டும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.


நமது அடுத்த மாநாட்டை தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான டர்பனில் வரும் 2021ஆம் ஆண்டில் நடத்தவிருக்கிறோம் - நம் கண்ணப்பன் ரவிசங்கர் இங்கு அறிவித்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு இது.


கரோனா நெருக்கடியில் 'விடுதலை'யை இணை யத்தில் மூலம் நடத்தி வருகிறோம். வரும் ஜூன் முதல் தேதியன்று விடுதலை தனது 86ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.


இந்த நேரத்தில் இணையத்தின் மூலம் விடுதலை வாசகர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்துக்கு மேல் கொண்டு செல்லும் திட்டத்தில் இருக்கிறோம். நம் ஒவ்வொரு தோழரும் இதற்காக நாள் ஒன்றுக்கு 15 அல்லது 20 நிமிடங்கள் செலவழித்தால் போதும் - இந்தக் கடமையைக் கண்டிப்பாக ஆறிவு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


நம்முடைய தோழர்களுக்கு ஒரு நெருக்கடி, பொருளாதார உதவி தேவைப்படும் நிலை ஏற்பட லாம். அதற்காக ஒரு நிதியத்தை நாம் உருவாக்க வேண்டும். இதுபற்றி யோசிக்குமாறு நமது பன்னாட் டுப் பகுத்தறிவாளர்களை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.


கரோனாவால் மதவாத சிந்தனைகளுக்கும், கடவுள் சமாச்சாரங்களுக்கும் பலத்த அடி விழுந் திருக்கிறது. இந்த நேரத்தில் நமது பகுத்தறிவுப் பணி மேலே ஓங்கி நிற்க வேண்டும். கூட்டு மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும்.


முதலில் குடும்ப நலனில் அக்கறை செலுத்துங்கள் பொருளாதாரத்தை உயர்த்துங்கள் - பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துங்கள் - பெற்றோர்களைப் பேணுங்கள்.


உடல் நலம், மனநலம், கொள்கை நலம், பொருள் நலம் இவற்றைச் செப்பனிடுவோம் - மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம்.


 பெரியாரை உலகமயமாக்குவோம் - உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்  என்று அணி வகுக்கும் கருத்துப் பூக்களை மணக்கச் செய்தார் கழகத் தலைவர்.


இதே போன்ற காணொலி கூட்டம் மலேசிய கழகத் தோழர்களுடனும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


பெரியார் பன்னாட்டமைப்பு ஒருங்கிணைத்த காணொலியில் பங்கேற்றோர்


அமெரிக்கா: மருத்துவர் சோம. இளங்கோவன், (இயக்குநர், பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) முனைவர்கள்  இலக்குவன் தமிழ், தண்டபாணி குப்புசாமி, பிரபாகரன், கோபாலன், நாஞ்சில் பீட்டர், அரசு செல்லையா, சங்கரபாண்டி, அய்யா பால் பாண்டியன், சித்தாநந்தம், அருள், சரவணன் மணியம், ரவி, அறிவுப்பொன்னி, எழி லன், கனிமொழி, மயிலாடுதுறை சிவா, செந்தில் முருகன், சோம.வேலாயுதம்,  சிகாகோ பாபு.


மலேசியா: மு.கோவிந்தசாமி, கே.ஆர்.ஆர்.அன்பழகன்.


பஹ்ரைன்: சிவக்குமார்.


மேலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, முனைவர் நல்.இராமச்சந்திரன், புதுச்சேரி மாநில தி.க.தலைவர் சிவ.வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் காணொலிக் காட்சியில் பங்கேற் றனர். இந்நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சி மூலம் யூ டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் நேரலை செய்யப்பட்டது.


No comments:

Post a Comment