படித்ததில் பிடித்தது - தமிழர் தலைவர் ஊட்டிய தன்னம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

படித்ததில் பிடித்தது - தமிழர் தலைவர் ஊட்டிய தன்னம்பிக்கை

இளைஞர்களே. தோழர்களே.


இன்றைக்கு கரோனா தொற்றால் ஊரடங்கில் முடங் கியிருப்பினும் தமிழர் தலைவரின் ஆணைக்கிணங்க இயக்க நூல்களைப் படிப்பதும். கழகத்தோழர்களுடன் உரையாடுவதும். எழுத்துப்பணிகளை மேற்கொள்வது மாக இருக்கும் வேளையில் சில நாள்களுக்கு முன் எனது நூல்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற் கொண்டிருந்தபோது முப்பத்தாறு ஆண்டுகட்கு முன் குமுதம் இதழிலிருந்து எடுத்து வைத்திருந்த அந்தத் தாள்கள் கிடைத்தன.


தமிழர் தலைவர் ஆசிரியர் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததையொட்டி குமுதம் இதழ் எழுத்தாளர் திருமதி சிவசங்கரியை ஆசிரியரிடம் பேட்டி   காண  4-11-1983 அன்று பெரியார் திடலுக்கு அனுப்பியிருந்தது.  பேட்டியினைக் குமுதம் ஆறு வாரங்களாக பிரசுரித் திருந்தது.


சில ஆண்டுகள் கழிந்தபின் சிவசங்கரியும் எழுத் தாளர் இந்துமதியும் சந்தித்துக்கொண்ட ஒரு நிகழ்வை 15-2-1987 குமுதம் இதழ் வெளியிட்டிருந்தது. 


இந்த இரு நிகழ்வுகள் தொடர்பானத் தாள்கள்தான் அவை. நீண்ட இடைவெளிக்குப்பின் அவைகளைப் படித்தபோது ஆசிரியரின் கருத்துகளுக்குள்ள வலிமை யைக் கண்டு வியந்துபோனேன்.


வாருங்கள் ஆவலோடு இருக்கும் நீங்கள் சுவைத் திட அதிலிருந்து சில பகுதிகளைப் படைக்கின்றேன். பேட்டி இப்படியாகத் தொடங்குகிறது.


சிவசங்கரி: திராவிடர் கழகத்தலைவர்  வீரமணி யைச் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வே இல்லா மல் திறந்த மனத்துடன் பல விசயங்களை அவரிட மிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளவே வந்திருக்கிறேன்.


வீரமணி: இங்கே ஒளிவு மறைவு ஒன்றும் கிடை யாது. நான் சொல்லுகின்ற செய்திகள்தான் முக்கியம். நீங்கள் அல்லாமல் வேறு ஒரு பிராமணரல்லாத எழுத் தாளர் வந்து என்னை சந்தித்திருந்தாலும் உங்களுக்குச் சொல்லுவதையே அவரிடமும் சொல்லுவேன்.


சிவசங்கரி: பிரித்துப்பேசுவானேன். எங்கள் வீட்டில் வீட்டு வேலை செய்ய தண்ணீர் கொண்டுவர மற்றும் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் ஒரு அரிசனப் பையனையே (இந்தமாதிரி தனியாகப் பேர் சொல்லி இந்த விசயத்தைக் கூறுவது எனக்குச் சங்கடமாக இருக்கிறது) வைத்திருக்கிறோம். உங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் அப்படி வைத்திருக்கிறீர்களா?


வீரமணி: திராவிடர் இயக்கத்தில் எவர் வீட்டிலும் எந்நேரத்திலும் சாதி, மத, இன உணர்வுகள் கிடையாது.


சிவசங்கரி: அரிசனங்கள் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இனத்தாரை தனியே வாழச் சொல்லுவதும், அவர்களுக்குத் தனியாகக் குடியிருப்புகள் அமைத்துத் தருவதும் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்காத விசயம்.


வீரமணி: அச்சாக அப்படியே தந்தை பெரியாரின் கருத்துகளையே நீங்களும் சொல்லி விட்டீர்கள்.


வெளிநாட்டுப்பயணம் தொடர்பான பேட்டி என்பதால் ஆசிரியர் சென்று வந்த நாடுகள் பற்றிய பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் பாரீஸ் நகருக்கு அவர் சென்று வந்தது பற்றி கேட்டதில் ஒன்று.


சிவசங்கரி: என்னை மன்னிக்க வேண்டும். பாரிசுக் குப் போய் வந்தவர்களிடம் ‘அங்கே நைட்கிளப்புகள் எப்படி’  என்றுதான் கேட்பார்கள்.


வீரமணி: என்னுடைய போக்கு. சிந்தனை ஓட்டம். எண்ணங்கள் எல்லாவற்றையும் நன்கு தெரிந்து வைத் திருக்கும் என் நண்பர்கள் அப்படிக் கேட்க மாட்டார் கள்.


பேட்டி என்ற நிலை திசைமாறி கடவுள் பற்றிய விவாதமாக மாறுகிறது. அதில் பெரியார், பிள்ளையார், ராமன் பற்றிய சுவையான விவாதங்கள். ஓரிடத்தில் ஆசிரியர் இப்படி சொல்கிறார்,


வீரமணி: இந்த நாட்டில் ‘எதுவும் நம் கையில் இல்லை’ என்று பெரும்பாலான மக்கள் நினைப்பதால் தான் எல்லாம் இப்படிக் குட்டிச்சுவராகிப் போகிறது. அதற்காகவே மக்களிடம் பகுத்தறிவு வளர வேண்டும் என்று போராடி வருகிறோம். ஒரு ஜப்பான்காரன் தலையெழுத்தை நம்புவதில்லை. தன் சிந்தனையை உபயோகித்ததுத் தானே உயருகிறான்.


சிவசங்கரி: கடவுளை எல்லா நாட்டிலும் நம்புகிறார் களே?


இதற்கு விளக்கம் தந்த ஆசிரியர் மற்றொரு இடத் தில் இவ்வாறு கூறுகிறார்.


வீரமணி: உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியா சம் என்றால், எனக்குக் கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. என்னுடைய முயற்சிகள் என் சிந்தனை. நான் எடுக்கிற முடிவுக்கு நானே கட்டுப்பட்டவன், பொறுப்பு என்று தெளிவாக நினைக்கிறேன். நீங்கள் அப்படியில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் கடைபிடித்துவரும் கடவுள் நம்பிக்கைதான் காரணம் என்று நினைக்கிறீர்கள்.


சிவசங்கரி: எனக்குக் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை கடவுள் நம்பிக்கை உண்டு.


வீரமணி: அது இல்லாமல் இருந்தால் நீங்கள் இன்னமும் சிறப்பாக விளங்குவீர்கள் என்பது என் கருத்து. உங்களுடைய சிந்தனையில் இன்னமும் நீங்கள் மேலே செல்ல முடியாமல் தடையாக இருப்பதே உங்களுடைய இந்தக் கடவுள் நம்பிக்கைதான்.


சிவசங்கரி: கிடையவே கிடையாது.


வீரமணி: நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது என்றால் என்னைச் சுற்றி நான் ஒரு வளையம் போட் டுக்கொண்டிருக்கிறேன். எப்படி விளையாடுகிறேன் பார்த்தீர்களா? என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. ஆனால் அது உங்கள் சாமார்த்தியத்தைத் தான் காட்டுகிறது. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? இந்த வளையத்தை விட்டு நீங்கள் வெளியே வந்து விட்டீர்களானால். இன்னமும் சிறப்பாக விளங்குவீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.


சிவசங்கரி: நீங்கள் நினைக்கிற மாதிரி நான் எந்த வளையத்திற்குள்ளும் இல்லை.


வீரமணி: அந்த வளையம் உங்களுக்குத் தெரியாது. என்னைப் போன்று உள்ளவர்களால்தான் அதைப் பார்த்துச் சொல்ல முடியும்.


சிவசங்கரி: சார், சார், என்னைத் தவறாக எண்ணாதீர் கள். ஒரு சின்ன வார்த்தை இருக்கிறது. அதைச் சொல் கிறேன். அடாவடி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே? எனக்குள் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் எப்படி சார் தீர்மானம் செய்து சொல்ல வரு கிறீர்கள்?


வீரமணி: எல்லாம் அவன் செயல் என்று நம்பு கிறீர்கள் இல்லையா?


சிவசங்கரி: உங்களையே நான் திரும்பவும் உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. பெரியாரை நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்களோ அப்படித்தான் நான் கடவுளை வைத்திருக்கிறேன்.


வீரமணி: கிடையாது


சிவசங்கரி: நீங்கள் எப்படி கிடையாது என்று சொல் லலாம்? நான் உறுதியாக நம்புகிற ஓர் விஷயத்தை நீங்கள் எப்படி இல்லை என்று சொல்லலாம்?


வீரமணி: அய்யாவோடு நான் பழகியிருக்கிறேன். பெரியார் அவர்கள் ‘எனக்கு ஒரு அந்தராத்மா சொல்லு கிறது’ என்று எனக்குச் சொல்லியிருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். பெரியார் என்பது ரியாலிட்டி. கடவுள் என்பது கற்பனை. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல.


சிவசங்கரி: (சிரித்தபடி) என்னதான் வாதிட்டாலும் நீங்கள் ஒப்புக் கொள்ளப்போவதில்லை. கடவுள் உங்களுக்குக் கற்பனை. எனக்கு ரியாலிடி.


வெளிநாட்டு அனுபவங்களைக் கேட்க வந்த பேட் டியாகத் தொடங்கி விவாதமாக வளர்ந்து  திசைமாறிச் செல்வதை அறிந்த நிருபர் வெளிநாட்டு அனுபவங்கள் பற்றிப் பேசுமாறு நினைவு படுத்துகிறார். பேட்டி அது தொடர்பான கேள்விகளுடன் தொடர்ந்து இறுதியாக முடிகிறது.


ஆண்டுகள் சில கழிந்த நிலையில் திருமதி சிவசங்கரியின் கணவர் எதிர்பாராமல் மறைகின்றார். தனிமையில் வாழும் சிவசங்கரி வீட்டுக்கு ஒரு நாள் எழுத்தாளர் இந்துமதி என்பவர் குமுதம் பேட்டிக்காக வருகின்றார்.


இந்துமதியை வரவேற்ற சிவசங்கரி தன் உரையாடலில் ‘கணவர் எதிர்பாராமல் இறந்துபோனால் மனைவி தற்கொலை செய்துகொள்வதைக் காட்டிலும் உயிரோடு இருந்து பிரச்சினைகளை சமாளிப்பதுதான் அர்த்தமுள்ள செயல். கணவரோடு வாழ்ந்த வாழ்க் கைக்கோ, காதலுக்கோ முழுமையான விசுவாசம் காட்டுகிற மாதிரி பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும்’ என்கிறார். பேச்சு தொடர்கிறது.


இந்துமதி: சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள்.


சிவசங்கரி: அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அயோவா பல்கலைக் கழ கத்தில் நடைபெறும் எழுத்தாளர் முகாமிலிருந்து இது மாறுபட்டது. நான்கு வாரம் அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு தந்தார்கள். சின்ன வயதிலிருந்தே அப்பா. அம்மாவுடன் இருந்துவிட்டு கல்யாணம் 19 வயதில் ஆகிவிட்டதால் தனிமையில் ஒருபோதும் வாழ்ந்து பழக்கப்பட்டது இல்லை. முந்தைய தடவை களில் வெளிநாடு சென்ற போதும் கணவருடன்தான் போனேன். இந்தத் தடவைதான் ஒரு மாறுதல். எனக்கென்று ஒரு தனி அறை, மற்ற எழுத்தாளர்களோடு கலந்து பேசிப் பழகினது, ஒன்றாகப் பயணம் செய்தது எல்லாம் நூதனமான அனுபவமாக இருந்தது.


அப்போது கி. வீரமணி அவர்கள் பற்றி (விடுதலை ஆசிரியர்) நினைத்துக் கொண்டேன். குமுதம் இதழுக்காக அவருடன் ஒரு உரையாடல் சந்திப்பு நிகழ்த்தினார்கள். தெய்வ நம்பிக்கை பற்றி எங்கள் இருவரிடையே பேச்சு வந்தது. வீரமணி. ‘தெய்வ நம்பிக்கை இருந்தால். தன்னம்பிக்கை குறையும்’ என்று வாதாடினார். நானும் விடவில்லை. ‘எனக்கு இப்போது என்ன குறைந்து போய்விட்டது. தெய்வ நம்பிக்கை உள்ள நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று எதிர் வாதம் செய்தேன். வீரமணியும் விடவில்லை. ‘ நானே துணை என்று (தெய்வத்தை நம்பியிராமல்) நினைத்துப் பாருங்கள். அப்படி நினைக்க நினைக்க உங்கள் தன்னம்பிக்கை கூடும்’ என்றார். என்றைக்காவது அவரைச் சந்தித்து. ‘நீங்கள் சொன்னது சரி’ என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்.


 கணவர் சந்திரா இறந்த பிறகு நான் யார் மீதும் சாயக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறேன். கடவுள்மீது கூட ஓரளவு நான் சாயறதில்லை. கசப்போ. வெறுப்போ கிடையாது. என்பேரில் உறுதியாக நிற்க நான் பழகிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி நினைக்கும்போது எனக்கு இப்போது தன்னம் பிக்கை நிறையக் கூடி இருக்கிறது. முன்பெல்லாம் இருட்டிலே போக மாட்டேன். தனியாகப் பயணம் செய்தால் பயமாக இருக்கும். அதெல்லாம் மாறி எல்லா வற்றையும் அதனதன் இயல்போடு எடுத்துக் கொள்கிற பக்குவம் வந்திருக்கிறது.


இந்துமதி: எனக்கு இரவு பத்து மணியானாலே பயம் வந்துவிடும். இருட்டிலே பயணம் செய்ய பயம். யாராவது துணைக்கு வந்தே தீரவேண்டும். எனக்கு உங்கள் வயதாகும்போது இந்த பயம் எல்லாம் விட்டுப்போய்விடும் என்று நினைக்கிறேன்.


சிவசங்கரி: அப்படியில்லை இந்துமதி. சூழ்நிலை தான் எல்லாவற்றுக்கும் காரணம். என் கணவர் இருந்திருந்தால் இந்த வயதிலும் இந்த எண்ணம் வந்திருக்காது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சந்திரா சிறுசிறு பயணங்கள் தான் போவார். இரவு 1 மணியானா லும் திரும்பி விடுவார். எல்லா விளக்குகளையும் எரிய விட்டுக் கொண்டு நான் விழித்துக் கொண்டிருப்பேன் என்பதற்காகவே திரும்புவார். பக்கத்து அறையில் இரண்டு ஆட்கள் துணைக்காகப் படுத்துக் கொண்டிருப் பார்கள். இப்போது இவ்வளவு பெரிய கட்டடத்தில் தனியாக இருக்கிறேன். ஏன் இந்த மாற்றம் என்று எனக்கே தெரியவில்லை. நிச்சயமாக இன்றைக்கும் என் மனதில் கடவுளைப் பற்றியோ. வேறு எதைப் பற்றியோ, எனக்கு இது இல்லையே என்கிற ஏக்கமோ, வருத்தமோ, ஆதங்கமோ, பொறாமையோ கண்டிப்பாக இல்லை. எப்படி முதுமையை எதிர்நோக்க நாம் தயாராக இருக்க வேண்டுமோ? அந்த மாதிரியே தனியாக இருப்பதற்கும் (பெண்கள்) தயார்செய்து கொள்ள முன்வர வேண்டும். உண்மை நிலையை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள வேணடும். அடிபட்டுச் சிதறி, உடைந்து போன பிறகும் நாமாகவே எழுந்தால் தான் உண்டு.


இதனைத் தொடர்ந்து ஒரு சிலவற்றை இருவரும் பேசியபின் பேட்டி முடிகிறது.


தோழர்களே கிட்டத்தட்ட முப்பத்தாறு ஆண்டு கட்கு முன்னர் நம் ஆசிரியர் ‘ஒருவனின் முன்னேற்றத் திற்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை தன்னம்பிக் கைதான்; தேவை’ என்று சொன்னது எப்படி முழு கடவுள்  நம்பிக்கையுள்ளவராக இருந்த ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தில் உண்மையாகியிருக்கிறது என்பதைக் கண்டீர்களா?


கடவுளை மற! மனிதனை நினை!


- ஞான. வள்ளுவன்


பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்


மயிலாடுதுறை மாவட்டம்


செல்பேசி 9443985889


No comments:

Post a Comment