மிக எளிதாக வருணாசிரம தர்மத்தை மீட்டுருவாக்கம் செய்யவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

மிக எளிதாக வருணாசிரம தர்மத்தை மீட்டுருவாக்கம் செய்யவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய பிஜேபி அரசு

பேபி - காரைக்குடி


"கள்ளன் பெரியவனா காப்பான் பெரியவனா?" கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் தனக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத பணம் நகையோடு பயணம் செய்யும் ஒரு நபரை அவ்வளவு கூட்டத்தில் சரியாக அடையாளம் கண்டு அவர் சற்றே கவனக்குறைவாக இருக்கும்போது  அவருக்குத் தெரியாமல் அதை திருடிவிட்டு இறங்குவது பற்றி ஊடகங்கள் மூலமாக கேள்விப்பட்டிருக்கின்றோம் .


இங்கே திருடிய கள்ளன் பெரியவனா? பணம் நகை பொருள் இழந்த உரிமையாளர் பெரியவனா? என்றால் திருடியவன் தான் பெரியவன்! பொருளுக்கு உரியவன் தன்னிடம் பொருள் பத்திரமாக உள்ளது என்பதைவிட தான் பொருளை கொண்டு செல்வது யாருக்கும் தெரியாது என்ற தன்மீதான தன்னம்பிக்கையில் இருப்பான்.


பல மணிநேர பயணத்தில் யாராக  இருந்தாலும் பொரு ளின்மீதே கவனமாக இருக்க முடியாது! கவனக்குறைவும் சிந்தனைச் சிதறலும் மனிதனின் இயல்பு .  ஆனால் திருடனுக்கு? கவனக்குறைவும், சிந்தனை சிதறலும் இருக் காது!  இருக்கவும் கூடாது!! திருடுபவனின் சிந்தனையும் செயலும் கவனமும் நம்பிக்கையும் பொருளுக்கு உரியவன் நடவடிக்கையில் மட்டும் தான் இருக்கும்,  பொருளுக்கு உரியவன் நிச்சயமாக நொடிப் பொழுதேனும் சற்றே கண் களை மூடுவான், அந்த நொடிப் பொழுதுதான் தனக்கான நேரமும் என்பதில்  மிக கவனமாக இருப்பான். ஒருவேளை பொருளுக்கு உரியவனிடம் சிந்தனை சிதைவோ, கவனச் சிதைவோ, கண்ணயர்வோ ஏற்படாவிட்டால்?! "கள்ளன் "செயற்கையாக அவற்றை ஏற்படுத்தி தன் காரியத்தை முடிப்பான்.


திருடர்கள் போன்றவர்களே...


பொருளுக்கு உரியவன் பொருள் இழந்த பிறகு யார் எடுத்தார், ஏன் எடுத்தார், எப்படி எடுத்தார், எப்போது எடுத் தார் என்று பல கேள்விகளுக்கு பதில் தேடி சுதாரிப்பதற் குள்ளாக வெகு தொலைவுக்கு நேரம் கடந்திருக்கும்.  அந்த திருடர்கள் போன்றவர்களே பார்ப்பனர்கள்!  நமது உரி மைகளை யார் பறித்தார்கள்? எப்போது பறித்தார்கள்?எப்படி பறித்தார்கள்? ஏன் பறித்தார்கள்? என்று நாம் சுதாரிப்ப தற்குள்ளாக எல்லாம் முடிந்து போயிருக்கும். 


எப்போதும் வருணாசிரமதர்மத்தின் மூலமாக தங்களின் ஜாதிய ஆதிக்கத்தை  நிலை நிறுத்திக் கொள்ள நாம் கவனக் குறைவாக  இருக்கும் ஒவ்வொரு நொடிக்காகவும் அடுத்து என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று காத்திருப் பார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அதே சிந்தனையுடன் இருந்ததால் தான் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை இன்றும்  தீண்டத்தகாதவர்களாக அடிமைகளாக வைத்திருக்க முடிகிறது. 


நாடு சுதந்திரம் பெற்ற இந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வரும் அதேவேளை தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் சமூக ,  பொருளாதார வளர்ச்சியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றி வந்திருக்கின்றன. தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்சிக்கு பொதுத் துறை நிறுவனங்கள் எந்தளவுக்கு பங்காற்றி இருகின்றன வோ அதே அளவுக்கு சற்றும் குறையாத  பங்களிப்பை தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ளனர். 


அதாவது நாட்டின்  தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியும்,  பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியும்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியும் ஆகிய இவை இம்மூன்றும் ஒன் றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை!  பிரிக்க முடியாதவை!! ஆனால், நாட்டில் அனைத்து நிலைகளிலும்  வருணாசிரமதர் மத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்களால் நாம் ஆளப்படுவதால் அல்லது அவர்கள் நம்மை ஆள்வதால் அவர்களுக்கு பொதுத்துறை  நிறுவனங் கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்ற சமூக பொருளாதார வளர்ச்சியானது வருணாசிரம மனுதர்மத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மிகப்பெரும் தடையாக உள்ளது.


பொருளாதார வளர்ச்சியை தடுக்க...


ஏனெனில், வருணாசிரமதர்மம்  தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு  எதிரானது. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுத்து மீண்டும்  வருணாசிரமதர்மத்தை நாட்டில் நடை முறைப்படுத்த வேண்டுமானால் இட ஒதுக்கீடு மூலம் அவர் களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வரும் பொதுத்துறை நிறுவனங்களின்  இப்போதுள்ள நிர்வாக நடைமுறையில் மாற்றம் கொண்டுவராமல் எதுவும் செய்ய முடியாது. 


எனவேதான்,  பொதுத்துறை நிறுவனங்களின்  இப்போ துள்ள நிர்வாக நடைமுறையியிலிருந்து முதலில் மாற்றம் கொண்டு வந்து அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற் படுத்தப்பட்ட மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பொருளாதார தன்னிறைவு அடைவதை தடுத்து வருணாசிரமதர்மத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி  வருகிறது. 


வேலைவாய்ப்பைத் தடுத்து நிறுத்தி...


பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய இட ஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப் பட்ட  மக்கள் இதுவரை பெற்று வந்த வேலை வாய்ப்பை தடுத்து நிறுத்தி அடுத்த 50 ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு வேலை வாய்ப்பின்றி பார்ப்பனர்களை சார்ந்து இருந்தார்களோ அதே போன்ற சார்பு நிலை இருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் என்று திட்டமிட்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக  மத்திய பிஜேபி அரசு  மிக நேர்த்தியாக செய்து கொண்டு இருக்கிறது !


தனியார் மயம்


பழைய  மன்னராட்சி முறையின் நவீன வடிவமே தற் போது கார்ப்பரேட் என்று  சொல்லப்படுகின்ற  தனியார் மயம் . இந்த தனியார் மயத்தை பார்ப்பனமயம் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்ததற்கு முன்பு நடந்த மன்னராட்சியில்  பார்ப்பனர்கள் மன்னர்களிடம் அமைச்சர்களாகவும், ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும்  அருகில் இருந்து கொண்டு அவர்களை பின் நின்று இயக்கி வருணா சிரம மனுதர்ம சட்டத்தை ஏற்க வைத்து அதன் பிறகு மன்னர்கள் மூலமாக அதை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து அடிமைகளாக்கி தாங்கள் மட்டுமே படித்து அனைத்து அரசு வேலைகளிலும் அமர்ந்து கொண்டு தங்களின் ஜாதிய மேலாதிக்கத்தை நிறுவியதுபோல தற் போது அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்டு  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் அரசியல் பொருளாதார சமூக  வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும்   பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்குவதன் மூலமாக மன்னர்களை இயக்கியதுபோல தனியாரையும் பின்னின்று இயக்கி இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து அனைத்து உயர் பதவிகளையும் தங்களே ஆக்கிரமித்துக் கொண்டு - இதுவரை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலம் பெற்ற  கல்வி அரசியல் சமூக பொருளாதார வளர்ச்சியை தடுத்து வருணாசிரம ஜாதிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று திட்டமிட்டு பிஜேபி அரசு செயல் படுகிறது.


இடஒதுக்கீட்டைப் பின்பற்றி...


ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார் மயமான பின்பு அந்நிறுவனம் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.  எனவே தற்போது இட ஒதுக்கீடு மூலமாக  தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலமாக  தாழ்த் தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெறு வதையும் உயர் பதவிகளில் அமருவதையும் தடுத்து பார்ப்ப னர்களே அனைத்து உயர் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அடிமைகளாக்கி மிக எளிதாக வருணாசிரமத்தை மீண்டும் தினித்து தங்கள் ஜாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும். 


BSNL மற்றும் MTNL ஆகியவை இந்திய தொலை தொடர்புத் துறையில் அளப்பரிய பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்கள்.   அந்நிறுவனத்தில் அகில இந்திய அளவில் லட்சக்கணக்கான பிற்படுத்தபட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட   மக்கள் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பு பெற்று தகுதி யின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று  உயர் பதவி களையும் அதன் மூலம் தங்களின் தனி மனித தகுதியையும்   சமூக பொருளாதார நிலையையும்  உயர்த்திக் கொள்ள மிக முக்கிய அங்கம் வகித்த  நிறுவனங்கள்.


கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி...


இந்த BSNL, MTNL நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட் ட மக்கள் வேலை வாய்ப்பு பெற்று தங்கள் தனி மனித அரசியல் சமூக பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதை தடுக்க நினைத்து  அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க முடிவு செய்த மத்திய பிஜேபி அரசு, சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மத்தியஅரசு துறையிலும் இல்லாத வகையில் அந்நிறுவனத்தில் வேலை செய்த (MTNL உட்பட) ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ஊழியர்களில்  80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை அதாவது சுமார் 70% ஊழியர்களை ஒரே ஒரு அறிவிப்பின் மூலமாக விருப்ப ஓய்வில் செல்லும் கட்டாய  சூழ்நிலையை ஏற்படுத்தி வெளியேற்றி விட்டது. தனியார் மயமாகிவிட்டால் புதிதாக ஆள்சேர்ப்பு (recruitment) நடக்கும்போது லட்சக் கணக்கான பிற்படுத்தபட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக் களுக்கு இட ஒதுக்கீடு மூலமாக இனி வேலை வழங்க வேண் டிய அவசியம் தனியாருக்கு இல்லை. இவ்வாறு அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலமாக பிற்படுத் தப்பட்ட மற்றும்  தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதை தடுத்து அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தனியார்மய ஏற்பாடு. 


இனிவரும் காலங்களிலும் தொடரும்...


இவ்வாறு வங்கித்துறை காப்பீட்டுத்துறை தொடர்வண்டித் துறை, NLC, விமான போக்குவரத்து என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கிவிட்டால் இனிவரும் காலங்களில் கோடிக் கணக்கான பிற்படுத்தப்பட்ட மற்றும்  தாழ்த்தப்பட்ட மக்கள்   வேலை வாய்ப்பு  பெற்று அதன் மூலம் பெற்றுவந்த அரசியல் சமூக பொருளாதார  வளர்ச்சியை  தடுத்து நிறுத்தி விடலாம்.  அதன் பிறகு  சுதந்திரம் பெற்று இந்த 70 ஆண்டுகளில் இட ஒதுக்கீடு அறிமுகமான பின்பு தற்போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியால் சிதைந்து போயுள்ள  வருணாசிரம மனுதர்மத்தை மீட்டுரு வாக்கம் செய்து கொள்வது மிக எளிது.


1969ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தனியார் மயமாக இருந்த போது ஒரு வங்கிக்குள் நுழைந்தால் ஏதோ  சங்கர மடத்துக்குள் நுழைவது போல  ஊழியர்கள் அனை வரும் நாமம், குடுமியும்-மாக ஒரே  பார்ப்பனமயமாக இருக் கும். 1969இல் திருமதி இந்திரா காந்தி வங்கிகளை தேசியமய மாக்கினார்.


இதர பிற்படுத்தப்பட்ட மக்களும்...


இதனால் நாடு முழுவதும் வங்கிகள் தங்களது புதிய கிளைகளை துவக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால் பட்டியல் இன மக்களும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீடு மூலம் வங்கிப் பணிகளில் சேர்ந்து பார்ப்பனர்கள் மட்டுமே வகித்து வந்த வங்கிப்பதவிகளில் அமர்ந்து  தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டு பதவி உயர்வு மூலம் உயரதிகாரிகளாக பதவிகளில் அமர்ந்து கடந்த 50 ஆண்டுகளில் தங்களின் அரசியல்,  சமூக, கல்வி பொருளாதார வளர்ச்சி  பெற்றனர். 


தற்போது அந்த வளர்ச்சியை தடுத்து வருணாசிரமத்தை நிலை நிறுத்த வங்கிகளை இணைத்து அதன்மூலம் வங்கிக் கிளைகளை குறைத்து வங்கிக் கிளைகளை குறைத்ததன் வாயிலாக ஊழியர்களை குறைத்து தொழிற் சங்கங்களை வலுவிழக்கச்செய்து அதன் பிறகு தங்கள் ஆட்சிக்காலம் முடிவதற்குள் வங்கிகளை தனியார் மயமாக்கிவிட்டால் மிக எளிதாக வருணாசிரம தர்மத்தை மீட்டுருவாக்கம் செய்து அடுத்த 50ஆண்டுகளில் அதாவது 2070ஆம் ஆண்டுக்குள் வங்கிக்குள் நுழைந்தால் மீண்டும் சங்கரமடத்தில் நுழைவது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விட முடியும் என்று திட்டமிட்டு பார்ப்பனர்கள் காரியமாற்றி வருகின்றனர்.


No comments:

Post a Comment