இரயில்வே துறை இழைத்த கொடுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

இரயில்வே துறை இழைத்த கொடுமை

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, பொது முடக்கத்தினால் சொந்த மாநிலங்களில் இல்லாமல் ஏதோ ஒரு இடத்தில் சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது


அதன்படி, ஷ்ராமிக் எனும் சிறப்பு ரயில்கள் மே  ஒன்றாம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இது வரை 3,000 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக 40 லட்சம் புலம்பெயர்வு தொழிலாளர்கள் பயணித்திருப்பதாகவும், அடுத்த 10 நாட்களில் 36 லட்சம் புலம்பெயர்வு தொழி லாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக கூடுதலாக 2,600 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படும் என வும் ரயில்வே தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், புலம்பெயர்வு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய ஷ்ராமிக் ரயில் கருநாடகாவுக்குச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சூரத்தில் இருந்து பீகார் செல்ல வேண்டிய ஷ்ராமிக் ரயில் ஒடிசா சென்றுள்ளது. இதேபோன்று பீகார் மாநிலம் பாட்னா செல்ல வேண்டிய இரண்டு ஷ்ராமிக் ரயில்கள் மேற்குவங்க மாநிலத்துக்கும், கயாவுக்கும் சென்றுள்ளன.


இதையடுத்து ரயில்வேயின் செயல்பாடுகளும், திட்டங்களும் தடம் புரண்டு விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கிழக்கு, மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ்குமார், தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.


இதே போல் மும்பையிலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா சென்று நின்றுவிட்டது, சூரத்திலிருந்து பீகார் மாநிலம் கயா செல்லவேண்டிய ரயில், மேற்குவங்க மாநிலம் புருலியா சென்று நின்றுவிட்டது,


மே 16ஆம் தேதி சூரத்திலிருந்து புறப்பட்ட ரயில் பீகார் மாநிலம் கயாவிற்கு 18ஆம் தேதி சென்றிருக்க வேண்டும். ஆனால் அது 26ஆம் தேதி பெங்களூரு வந்து நின்றுவிட்டது.


மும்பையிலிருந்து புவனேஷ்வர் நோக்கிப் புறப்பட்ட ரயில் டில்லி அருகில் உள்ள காசியாபாத் சென்று நின்று விட்டது. அகமதாபாத்தில் இருந்து லக்னோ செல்லவேண்டிய ரயில் கிழக்கு நோக்கி செல்வதற்குப் பதிலாக வடக்கு நோக்கி ஜம்மு வழிப் பாதையில் சென்றது. 12 மணி நேரம் கழித்து இது தொடர்பாக ஜெய்ப்பூருக்கு அருகில்  பயணிகள் ஓட்டுநரிடம் கூற, "அந்தப்பாதை நெரிசல் உள்ளது. ஆகவே ரயில்வே நிர்வாகத்தினர் எங்களுக்கு இந்தப் பாதையில் செல்ல அறிவுறுத்தினர்" என்றார். வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை, குடிநீர் இல்லாமல், உணவு இல்லாமல் எரியும் அடுப்பிற்கு அருகில் இருப்பது போன்ற சூழலில் மக்களை மத்திய அரசு இப்படி கொடூரமாகத் துன்புறுத்தி வருகிறது. இவ்வாறு பயணித்த ரயிலில் வெப்பத்தினால் உடல் நிலை மோசமாகி 22 பேர் வரை மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது என்ன நிர்வாக ஒழுங்கு! ஏற்கெனவே கரோனா என்னும் எரிமலைக் குழம்பில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மாணவர்கள், பயணித்த மக்களை இப்படி அவதிக்கு ஆளாக்குவது நியாயம்தானா? மனிதாபிமானம் என்னும் ஈரம் முற்றிலும் வறண்டு விட்டதா?


எங்கிருந்து புறப்படுகிறோம் - எங்கே போகிறோம் என்ற இலக்குக்கூட இல்லாமல் இப்படி தாறுமாறான மத்திய அரசின் இரயில்வே துறையின் இந்த நடவடிக்கை மன்னிக்கப்படவே முடியாத குற்றமாகும். இவர்களுடைய தகுதி திறமையின் யோக்கியதை இதுதான். இதன்மீது என்ன நடவடிக்கை? நாடே எதிர்பார்க்கிறது.


No comments:

Post a Comment