புலம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்சினை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

புலம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்சினை!

உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தன்னுடைய அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். கூட்டத்துக்குப் பிறகு, "இனி உ.பி-யிலிருந்து எந்த ஒரு மாநிலத்துக்காவது புலம்பெயர்வு தொழிலாளர்கள் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட மாநிலம் உ.பி அரசுக்கு விண்ணப்பித்து கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் அனுப்புவோம்" என்றிருக்கிறார்.


மேலும், அப்படி விண்ணப்பித்து அழைத்துச் செல்லப்படும் புலம்பெயர்வு தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பும் - காப்பீடும் ஏற்பாடு செய்யப்படும் என்கிறார்.


உத்தரப்பிரதேச தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. புலம்பெயர்வு தொழிலாளர் பிரச்சினை பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. ஏற்கெனவே, பிரியங்கா ஆதித்யநாத் யோகியின் மக்கள் விரோத நடவடிக்கையை மக்களிடையே எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அடுத்து புலம்பெயர்வு தொழிலாளர்கள் மீதான இந்த அக்கறை போன்று வேடம் போட்டுக் காட்டுகிறார்.


ஆனால், இது ஏற்படுத்தப்போகும் தேசிய அரசியல் விளைவு சாதாரணமாக இருக்காது. ஏனெனில் ஊரடங்கு முடிந்தபிறகு, புலம்பெயர்வு தொழிலாளர்களின் தேவை மிகப்பெரிய அளவில் இருக்கும். ஏற்கெனவே, கருநாடகத்தின் பல பகுதிகளில் புலம் பெயர்வு தொழிலாளர்களை தக்கவைப் பதற்கான நடவடிக்கைகள் நடக்கின்றன. தமிழகத்திலும் திருப் பூர் போன்ற பகுதிகளில் அப்படியான முயற்சிகள் நடக்கின்றன.


ஆனால், உடனடி எதிர்வினை மகாராட்டிரத்திடம் இருந்து வந்துள்ளது. "உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் எங்கள் மாநிலத்துக்குள்ளே நுழைய வேண்டும் என்றால், எங்களிடம், எங்கள் அரசிடம் அனுமதி வாங்கட்டும்' என எச்சரிக்கை குரல் எழுந்துள்ளது.


மராட்டியத்தில் வட இந்தியர் எதிர்ப்பு என்பது எளிதில் ஊகிக்கக் கூடியது. 'நாம் மராட்டியர்' என்ற குரலை  1990-களில் இருந்தே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எழுப்பி வருகின்றன. புலம்பெயர்வு தொழிலாளர் சிக்கலை மிகப்பெரிய அளவில் எதிர்கொண்டது மராட்டிய மாநிலம் ஆகும்.


மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து புலம் பெயர்வு தொழிலாளர் பிரச்சினை மகாராட்டிரத்துக்கு பெரும் தலைவலியானது. அரசு கண்காணிப்பில் மட்டுமே லட்சக்கணக்கான புலம்பெயர்வு தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், முறையான உணவின்மை , வசதிகளின்மையால் அரசின் கண்காணிப்பு குறைபாடுகள் மீது ஏகப்பட்ட விமர் சனங்கள். ஒருவழியாக சமாளித்து முடித்தது மகாராட்டிரம்.


மகாராட்டிரத்திலிருந்து தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப வாங்கிக்கொள்ள பல மாநில அரசுகள் மறுத்தது - பெரும் அதிர்ச்சி அம்மாநிலத்துக்கு. மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா, பீகார் என பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைவதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.


இதன் காரணமாகத்தான் பலர் நடைப்பயணமாக செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.


ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் அட்டை, ஒரே சாப்பாடு, ஒரே துணி என்ற இந்த 'ஒரே' என்ற கோமாளித்தனமான பாஜகவின் கொள்கை அவர்கள் வரிந்து கட்டிப் பேசும் தேசிய பிரச்சினைக்குக் கேடாக மாறும்.  


இப்போது, புலம்பெயர்வு என்பது, அடிமை வர்த்தகம் என்ற ஒரு பாதையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, இதனால்தான் உ.பி. முதல்வர் அடிமைகளின் தலைவர் போல் என்னிடம் அடிமைகளை வாங்க வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெறவேண்டும், அடிமைகளுக்குப் பல வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது புலம் பெயர் தொழிலாளர்களை ஒரு அடிமைகளைப் போல் நடத்தத் துவங்கியுள்ளார். அடிப்படையில் இது தேசிய இனப் பிரச்சினையாக வெளிப்படையாக மாறியுள்ளது.


தொழிலாளர் தேவையுள்ள மாநிலங்கள், ஒருவேளை உத்தரப்பிரதேச தொழிலாளர்களைப் புறக்கணித்து ஒடிசா, ராஜஸ்தான், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் என தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாம். அது உத்தரப் பிரதேசத்திற்கு ஆரம்பத்தில் அடியாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் அந்தத் தொழிலாளர்களும் நிர்ப்பந்த அடிப்படையில் அதிக ஊதியம் கேட்பார்கள். திருப்பூர் பகுதிகளில்  கிட்டத்தட்ட சொந்த ஊர் தொழிலாளர்கள் போல் ஊதியத்தைக் கொடுத்து தான் புலம்பெயர்வு தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்கின்றார்கள்.


தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுப்பதில் ஏதும் சிக்கல் இல்லை. ஆனால் அதை ஒட்டி உருவாகும் குடி அமர்வுகள், ரேஷன் தேவை, நீர் போன்ற வளப்பகிர்வு உள்ளிட்டவை மிகமுக்கியமான சிக்கல்கள். ஏனென்றால், ஒரு புலம்பெயர்வு ஊழியருக்கு வேலை மட்டும் தான் நிறுவனம் கொடுக்கிறது. மின்சாரம், வீடு, நீர், உணவு தொடங்கி சகலத்தையும் கொடுப்பது அரசு, சமூகக்கட்டமைப்பு. எந்த அடிப்படையில் பார்த்தாலும் வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலங்களுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.


இப்பொழுது புலம் பெயர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால் மீண்டும் பழைய இடத்திற்கு வருவார்களா? வரா விட்டால் சொந்த மாநிலங்களில் வேலை வாய்ப்புக் கிட்டுமா? தலைக்கு மேல் தொங்கும் இந்த வாளுக்கு இரையாகப் போவது யார்?


No comments:

Post a Comment