தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டங்கள்!

featured image

சென்னை, டிச.31 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

அதன் விவரம் வருமாறு: மேலத்திருப்பூந்துருத்தி

மேலத்திருப்பூந்துருத்தியில் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
தந்தை பெரியார் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் தெருமுனைக்கூட்டம். மேலத்திருப்பூந்துருத்தி யூரில் ச.கண்ணன் திருவையாறு ஒன்றிய தலைவர் தலை மையில், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் வரவேற்புரையாற்றிட, பெரியார் பெருந் தொண்டர் கோ.தங்கவேலு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வீ. கார்த்திகேயன், திருப்பூந்துருத்தி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கி. அகமது மைதீன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ம.கவுதமன் ஆகியோர் முன்னிலை உரைக்குப் பின், கழக மு. அமைப்பாளர் வெ.ஞானசேகரன், திமுக மற்றும் தோழமைக் கட்சித் தோழர்கள் தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி இந்தத் தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடந்து வருகிறது என்று பேசினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தந்தைபெரியார் தன் உடல்நலம் பாராது தமிழரிடையே பீடித்துள்ள அறியாமை, அடிமைத்தன நோயை விரட்டிட இறுதிவரை உங்களுக்காக உழைப்பதே என் கடன் என உழைத்தார். எல்லோருக்கும் எல்லாமும் சமமாய் கிடைத்திட உழைத்தார் எனவும் பா.ஜ.க.வின் பொய்முகத்தை எடுத்துக் காட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றிபெற செய்து நம் எதிர்காலத்தை பாசிச பா.ஜ.க.விடமிருந்து காத்திட வேண்டும் எனப் பேசினார்.
உரத்தநாடு இரா.குணசேகரன் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்கள் தந்தை பெரியார் குறித்த கவிதையை பாடினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் உரையாற்றினார்.
சிறப்புரையாக, சீறும் உரையாக வழக்குரைஞர் பூவை புலிகேசி தந்தை பெரியாரின் பெருவிருப்பமான முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியை கலைஞர் நியமித்தது, ஆன்மீக உலகமும் தந்தைபெரியாரை போற்றியமையை எடுத்துக் காட்டுடன் விளக்கினார்.

நிறைவாக திருவையாறு பேரூர் தலைவர் ஆ.கவுதமன் நன்றி கூறிட இரவு 8.30 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நிறைவுற்றது.
பங்கேற்றோர்

ஒன்றிய திமுக பிரதிநிதி முகம்மது இப்ராகிம், அற்புதக் கோயில் தெரு அற்புதம், பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜி. செந்தில்குமார், மு.விவேக விரும்பி ஒன்றிய துணைத் தலைவர்., இர. மணிகண்டன் மாவட்ட இ. அணி அமைப்பாளர், அழகர் வீரமணி, அல்லூர் பாலு பூதலூர் ஒன்றியத் தலைவர், புகழேந்தி பூதலூர் ஒன்றிய செயலாளர், இரா.பாலசுப்பிரமணியன் மாவட்ட விவசாய அணித் தலைவர், மாஸ் அன்சாரி திமுக, பெரியார் பெருந்தொண்டர் எம்.எஸ்.கலியபெருமாள், தஞ்சை இ. அணி செயலாளர் அ.பெரியார் செல்வம் மற்றும் தி.க.,திமுக தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தொடக்கத்தில் பெரியார் விருது பெற்றவரான தேமுதிக தலைவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தருமபுரி – காமலாபுரம்

தருமபுரி மாவட்டம் காமலாபுரத்தில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரை பொதுக்கூட்டம் 25.12.2023 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் கொள்கை முழக்கமிட கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாலை அணிவித்தார். பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு.சரவணன் தலைமையேற்று நடத்தினார். காமலாபுரம் கிளைக் கழகத் தலைவர் இரா.சின்னசாமி வரவேற்று உரையாற்றினார்.

ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி. ராமசாமி இணைப் புரை வழங்கினார். வருகை தந்த அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
திராவிடர் கழக தலைமை கழகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பை பொதுச்செயலா ளர் துரை.சந்திரசேகரன் வெளியிட,கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பெ. மாணிக்கம், கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர் கதிர் செந்தில்குமார், ஆசிரியர் இர. கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியர் சோபியா ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மல்லிக்குட்டை சண்முகம், அதிமுக கவுன்சிலர் கவிதா சுப்பிரமணி, அதிமுக கிளை செயலாளர் தி. பழனிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், மாவட்ட பிரதிநிதி சண்முகம்,ஊர் தலைவர்கள் ராஜா, மூர்த்தி, கோபால், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பகுத் தறிவாளர் மாநில அமைப்பாளர் ந. அண்ணாதுரை, கிருஷ் ணகிரி மாவட்ட செயலாளர் க.மாணிக்கம், மாநில இளை ஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன், அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ் திலீபன், ஆகி யோர் கருத்துரை ஆற்றினர்.
திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றுகையில்,

காமலாபுரம் சிறப்புக்குரிய கிராமம். நான் பலமுறை இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறேன். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வருகை தந்து ‘பெரியார் புரம்‘ என்று அழைத்த ஊர் காமலாபுரம் ஆகும். மாவட்டத் தலைவர் சரவணன் சொந்த ஊர் காமலாபுரம் என்பது சிறப்புக்குரியது.
இன்று பெரியார் பணியானது ஆசிரியர் தலைமையில் தமிழ்நாடு தாண்டி உலகெல்லாம் போய் சேர்ந்துள்ளது. 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் குடல் இறக்க நோயால் அவதிப்பட்ட பெரியார் உடல்நிலை மோசமான நிலையிலும் கூட இந்த மக்களுக்காக பேசினார். அதுதான் தந்தை பெரியாரின் கடைசி பேச்சாகும். 1917 இல் தொடங்கி இறுதிவரை பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரது இறுதிப் பேச்சில் மரண சாசனமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களே உங்களை சூத்திரராக விட்டு சாகப் போகிறேன் என்று தன் வலியை வெளிப் படுத்தினார். மனிதனின் மானத்தையும் அறிவு மீட்டுக் கொடுத்தவர் தந்தை பெரியார். சமத்துவத்தை உண்டாக்கி கொடுத்தவர் தந்தை பெரியார். ஒழுக்கத்தை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். உலகத்தை கற்பதற்காக தந்தை பெரியார் ஒரு ஆண்டு காலம் உலகில் பல நாடுகளுக்குச் சென்று பயணித்திருக்கிறார். தான் சொன்னதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள், கேள்வி கேளுங்கள் என்று சொன்னவர் பெரியார்.
தமிழ்நாட்டில் சமத்துவத்தை உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார். அவர் இல்லை என்றால் காமராசர் இல்லை, அறிஞர் அண்ணா இல்லை, கலைஞர் இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இல்லை என்றே சொல்லலாம். கல்வி மறுக்கப்பட்ட தமிழனுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்றுத் தந்த பெரியார், அதோடு நில்லாமல் பட்டம் பதவிகளையும் பெற்று தந்தார்.இட ஒதுக்கீட்டுக்காக போராடி இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் பெரியார். என்று தனது உரை யில் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம், ஆசிரியர் அன்பரசு, தர்மபுரி கா.இராமச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட இளை ஞரணி தலைவர் சீனி முத்துராஜேஷ், சி.முனியம்மாள், உமா, ஜோதி, சிவனேசன், மேகநாதன், செல்வம், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்ட மேனாள் இளைஞரணி செயலாளர் இரா. இராஜா நன்றி கூறினார்.

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தை பெரியார் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பரப்புரை கூட்டங்கள் நடைபெற்றன.
22.2.2023 வெள்ளியன்று மாலை மயிலாடுதுறை வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கி. தளபதிராஜ் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழக காப்பாளர் கொக்கூர் சா. முருகையன் மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன் மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பக. தலைவர் இரெ. செல்லதுரை, பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆறாமதி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி திமுக சட்டமன்ற மேனாள் உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி. காமராஜ் மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை, சீர்காழி ஒன்றியத் தலைவர் ச. சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி.பாண்டியன், ஒன்றிய செயலாளர் பி. பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு. இளமாறன், துணைச்செயலாளர் தி.சபாபதி, குத்தாலம் நகரத் தலைவர் சா. ஜெகதீசன், திராவிடர் கழகத் தோழர்கள் ஜி.கே.மணிவேல், பி.இராசேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தங்க. செல்வராஜ், தோழர்கள் சுந்தர்ராஜன் திராவிடமணி, சாமி கணேசன், பெரியசாமி, ராமதாஸ், ஆசிரியர் மதிவாணன், தமமுக சலீம், ஞிசீதிமி விஜய், கருவூலத்துறை அலுவலர் சுமதி, மருத்துவத்துறை ஜோன்பிரதீப், மற்றும் இயக்க தோழர்கள் இன உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஒருமாத தொடர் மழையிலும் அரங்கு நிறைந்த காட்சி பெரும் மகிழ்ச்சியளித்தது. இறுதியாக மாவட்ட இளைஞரணித் தலைவர் க. அருள்தாஸ் நன்றி கூறினார்.
25.12.2023 அன்று சீர்காழி கடவாசலில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி ஒன்றியத் தலைவர் ச. சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சா. செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், கவிஞர் வெண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக பேச்சாளர் யாழ் திலீபன், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.
கூட்டத்தில் கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி. பாண்டி யன், ஒன்றிய செயலாளர் பூ. பாண்டுரங்கன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை, நகர செயலாளர் பூ.சி. காமராஜ், மாவட்ட மகளிர் அணித் தலைவர் கோமதி செல்வம், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் எஸ். ஆனந்தன், டி.நாகராஜன், எம். திருஞானம், ஞானபிரகாசம், தி.மு.க தோழர்கள் அறிவழகன், பண்ணை பாலகுமாரன், மச்ச காந்தன், மக்கள் அதிகாரம் ரவி ஆகியோர் கலந்து கொண் டனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ச. தமிழ்மணி நன்றி கூறினார்.

மன்னார்குடி

மன்னார்குடி நகர திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கள் சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலையில் மன்னார்குடி பந்தலடியில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் விளக்கம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு,திராவிடர் கழக நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்டச் செயலாளர் கோ.கணே சன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக் கடல், மாவட்ட துணைச் செயலாளர் வீ. புட்பநாதன் , பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை. கௌதமன்,பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் பி. ரமேஷ், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மு. தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நன்றியுரை ஆற்றுவதற்காக நகரச் செயலாளர் மு.இராம தாசு ஒலிபெருக்கி முன் வந்த போது கூட்டத்திலே அமர்ந் திருந்த சென்னை நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டு கான் வெண்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், மன் னார்குடி மருத்துவர் வி. அசோக்குமார், பெண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பாளர் அ.புவனேஸ்வரி ஆகியோரது மகளுமான அ.பு.மேகா தனது தோழிகள் ஜி.இ.ஜனரிஷினி , எம்.கே.பவ்யா ஆகிய மூவர் கருப்புடை அணிந்து கலந்து கொண்டனர். மாணவி மேகா, தான் பேச இருப்பதாகவும் எனக்கு அய்ந்து நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தை கழகத் தோழரிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு தோழர்கள் அனுமதி அளித்தவுடன் ஒலிபெருக்கி முன் வந்து நின்று அவர் தனது கன்னிப் பேச்சை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ‘கும்பிடுறேன் சாமி’ என்ற அடிமைச் சொல்லையும், ‘நமஸ்காரம்‘ என்ற வடமொழிச் சொல்லையும் ஒழித்து, ‘வணக்கம்‘ என்னும் சுயமரியாதை மிக்க தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் நம் தந்தை பெரியார். இங்கு ஒரு பெண்ணாய் உங்கள் முன் நிற்பதற்கு பெரும் காரணமாய் இருந்த நம் தந்தை பெரியா ருக்கும், அவரது சிந்தனைக்கும் என்னுடைய முதற்கண் வணக்கம்.
இங்கு பெரியாரின் பெருங்கனவாக கூடியிருக்கும் அனைத்து வாளர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் ஈ.வெ.இராமசாமி என்னும் தனி மனிதர் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மனிதஉரிமைக்கு எதிராக எவையெல்லாம் இருந்தனவோ மக்களை எவையெல்லாம் பாதித்தனவோ அவை அனைத்தையும் எதிர்த்து கேள்வி கேட்டார். மனித உரிமைகளை மீட்க தன் இறுதி மூச்சு வரை போராடினார். தவத்தால், தானத்தால்,தர்மத்தால், அர்ச்சனை யால், ஆராதனையால், ஆடலினால்,பாடலினால் ,அஞ்சுவ தால், கெஞ்சுவதால், அழுவதால் அடைய முடியாதவொன்றை பகுத்தறிவுடன் சுயமரியாதை பாதையில் பயணித்தால் மட்டுமே அடைய முடியும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத மனிதனின் உரிமையை பறிக்கும் எந்தக் கோட்பாடும், எந்த பண்பாடும், கொள்கையும், எந்த தத்துவமும், எந்த சித்தாந்தமும் எனக்கு வேண்டாம் என்று கூறியவர் தந்தை பெரியார் ஒருவர் மட்டும் தான் .
தற்போது இந்தியாவில் இருவகை கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. ஒன்று 1925 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட ஆர்எஸ்எஸ் பிற்போக்குவாதத்தையும் அடிமைத் தனத்தையும் கொள்கையாகக் கொண்டு ஹிந்துத்துவா மற்றும் ஹிந்தி திணிப்பின் மூலம் அதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.
மற்றொன்று 1944 ஆம் ஆண்டு, நம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம். சுயமரியாதையும் பகுத்தறிவையும் கொள்கையாகக் கொண்டு செயல்படும் முற்போக்கு இயக்கம்.

“எங்கள் நோக்கமெல்லாம், நம்முடைய மக்கள் கடவுள், மதம், அரசியல் விஷயங்களில் உள்ள மூடநம்பிக்கையை ஒழித்து அறிவு பெற வேண்டும் என்பதுதான் என்று கூறினார் அய்யா பெரியார்.
அதற்கேற்ப ,இந்தியா முழுவதும் செயலாற்றக்கூடிய நிறுவனம் சார்ந்த அமைப்பாக அமையப் பெற வேண்டும்.
ஏனெனில் சமீபத்தில் நடந்த தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்தியபிரதேசம், போன்ற வட மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் -யின் அரசியல் வடிவமான பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு அங்குள்ள மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். கல்வி ,சமூக , பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளவர்களை நாம் மீட்பதற்கு இது அவசிய மாகிறது. அய்யா பெரியார் காண விரும்பிய பேதமில்லா உலகத்தை நோக்கி தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் பயணிப்போம். திக்கெட்டும் இக் கொள்கை பரவட்டும் திராவிடம் தழைக்கட்டும், வாழ்க பெரியார், நன்றி வணக்கம் என கூறி தனது முதல் மேடை பேச்சினை தங்கு தடையின்றி நீண்ட கால பேச்சாளர் போல் சரளமாக பேசி கழகத் தோழர்கள் பொது மக்களின் பாராட்டு தலை பெற்றார் பெரியார் பிஞ்சு மேகா. அவருக்கு நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டு பெரியார் நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு வழங்கி பாராட்டினர்.
கூட்டத்தில், கோட்டூர் ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.குமார், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் தங்க.வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. இளங்கோவன், பெரியார் பெருந்தொண்டர்கள் மேலத் திருப்பாலக்குடி எம்.கோவிந்தராசு, மேலவாசல் கோ.திரிசங்கு, பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் கோவி. அழகிரி, ஒன்றிய இளைஞரணி தலைவர் பி.இளங்கோவன், கழகத் தோழர்கள் சிவா. வணங்காமுடி, கவிஞர் கோ.செல்வம், எஸ். கோபால கிருஷ்ணன், மன்னை சித்து, திராவிடர் மாணவர் கழக நிர்வாகி பெ.அன்புச்செல்வம், பகுத்தறிவு ஆசிரியரணி ஜெ.அருளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment