‘இந்தியா' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள்!
மாநிலங்களைக் காப்போம் - இந்தியாவைக் காப்போம்! ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!
சென்னை, அக்.31- ‘இந்தியா' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!' என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்” என்ற தலைப்பில் இன்று (31.10.2023) வெளியிட்டுள்ள ‘‘Speaking for India'' பாட்காஸ்ட் சீரிசின் மூன்றாவது அத்தியாயம் வருமாறு:
உங்கள் எல்லோரையும் ‘‘Speaking for India Podcast''-இல் சந்திக்கும் ஸ்டாலினின் வணக்கம். இந்த மூன்றாவது எபிசோடைத் தொடங்குவதற்கு முன்பு, உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோடில், சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டிருந்த பி.ஜே.பி-யின் ஏழு மெகா ஊழல்களைப் பற்றிப் பேசியிருந்தேன். அவையெல்லாம் உண்மை என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொள்வது போன்று, ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இந்த“Speaking for India” ரீச் ஆன பின்பு, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பு என்ன என்றால், ‘‘பா.ஜ.க அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சி.ஏ.ஜி. அதிகாரிகள் செப்டம்பர் 12 ஆம் தேதியே கூண்டோடு மாற்றம்”.
அதுதான் அந்தச் செய்தி!
எவ்வளவு ஸ்பீடாக ஆக்ஷன் எடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? சரி அதே வேகத்தோடு இந்த எபிசோடில் பேசப்போவதையும் உடனே கொடுக் கிறார்களா என்று பார்ப்போம். இந்த எபிசோடில் நான் பேசப்போவது, மாநில உரிமைகள்!
தி.மு.க. தனக்கென்று தனித்துவமான கொள்கை களோடு 75 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிற கட்சி மட்டுமல்ல! இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடுகிற கட்சியும் கூட! அப்படிப்பட்ட தி.மு.க.வின் கொள்கை களில் முக்கியமானது ‘மாநில சுயாட்சி’!
இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம்!
இந்தியா என்பதே, கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழுகிறார்கள். நம்முடைய மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் இருக்கிறது; பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கிறது. அவர்களுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகளும் இருக்கிறது. இத்தனை வேறுபாடு களையும் கடந்து, நாம் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என் றால், இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம்!
அதனால்தான், நம்முடைய நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி நெறிமுறை கொண்ட - மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக் கினார்கள்.
மோடி, பிரதமராகி
மாநில உரிமைகளைப் பறிக்கிறார்!
நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இதற்கு முன்பு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமராகி டில்லிக்கு வந்ததற்கு பின்பு, அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்ன என்றால்,“India, that is Bharat, shall be a Union of States!”.
முதலமைச்சராக மாநில உரிமைகளைப் பேசியவர், இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக் கிறார்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால், முனிசிபாலிட்டிகளாக மாற்றிட வேண்டும் என்று நினைக்கிறது. மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த வரைக்கும் பேசிய தற்கும், பிரதமர் ஆனதும் செய்வதற்கும் இருக்கும் வேறுபாட்டிற்கு, சில எடுத்துக்காட்டுகளை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
* டில்லியை மய்யப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்படும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுக் கருத்து தெரிவிக்கும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத ‘நிதி ஆயோக்’ அமைப்பை உருவாக்கினார்.
* மாற்றுக்கட்சி ஆட்சிகளைப் பழிவாங்கமாட்டேன் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. என்ன செய்கிறது? எங்கு எல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியவில் லையோ, அங்கு இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள்.
முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார்.
* “கூட்டாட்சிக் கருத்தியலை ஆதரிப்பவன் நான். டில்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றுவேன்” என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்றால், மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றக்கூட, ஒன்றிய அரசின் வாசலில் காத் திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
* மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய் வோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன் னார்கள்.
மாநிலங்களின் நிதி நிலைமை ஜி.எஸ்.டி.யால் இப்போது அய்.சி.யூ-வில் இருக்கிறது!
* கூடுதலாகப் பிரதமர், மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார். ஆனால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். மாநிலங்களின் பங்கையும் ஒழுங்காகக் கொடுப்ப தில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜி.எஸ்.டி.யால் இப்போது அய்.சி.யூ-வில் இருக்கிறது!
12 ஆவது நிதிக் கமிஷனில் இருந்து நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டதனால், கடந்த 19 ஆண்டுகளில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படப் போகிறது.
அதேமாதிரி, கிராமப்புற ஏழை - எளிய தாய்மார் களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்ல, வேலை செய்யும் தாய்மார் களுக்கு ஊதியம் கூட ஒழுங்காகக் கொடுக்காமல் பா.ஜ.க. ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள்.
இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு மட்டும் என்று நினைக்காதீர்கள். இதை கேட்டுக்கொண்டு இருக்கும் உங்கள் எல்லோரின் மாநிலத்திலும் இதே தான் நிலைமை!
“மோடி படத்தைப் போடவில்லை என்றால்,
மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தருகிற நிதியை நிறுத்துவார்களாம்!”
எல்லாவற்றுக்கும் மேல், இப்போது ஒன்றிய அமைச்சர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றார், “மோடி படத்தைப் போடவில்லை என்றால், மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தருகிற நிதியை நிறுத்துவோம்” என்று சொல்கிறார்! இதுதான் மாநிலங்களுக்கு அதிக நிதி ஆதாரங்களைத் தருவோம் என்று சொன்ன பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகம்!
மாநிலப் பிரச்சினைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கவுன்சில் அமைத்து, தீர்வு காண்போம் என்று சொன்னார்கள். அந்தக் கவுன் சிலையும் முடக்கிவிட்டார்கள்.
மாநிலங்களின் கருத்தை கேட்கவும் மனசில்லை... அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்திற்குள்ளேயும் மாநிலங்களைச் செயல்பட விடுவதில்லை - ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக் குவதை ஒரு ஆக்ஷன் பிளானாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க.!
அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க பா.ஜ.க. ஆளுநரைப் பயன்படுத்துகிறது. மாநிலங்களின் உரிமையையும் - சட்டமன்றங்களின் மாண்பையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்!
இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னப்படுத்தி சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
இவ்வாறு, படிப்படியாக ஒற்றை கட்சி - ஒற்றைத் தலைமை - ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் - என்று நாட்டை நகர்த்த முயற்சி செய்கிறார்கள் என்று சொல்வதைவிட, உலகத்தின் பெரிய இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னப்படுத்தி சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில், பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசமைப்புச் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது!
இவர்கள் செய்வதில் மிக மோசமானது என்ன என்றால், மாநிலங்களின் கல்வி உரிமையில் தலை யிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடு வதுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பண்பு இருக்கிறது - ஒரு கலாச்சாரம் இருக்கிறது -அவர் களுக்கு என்று தனிப்பட்ட சிந்தனை இருக்கிறது. இதையெல்லாம் அழிப்பதற்கான கொள்கைதான் தேசிய கல்விக் கொள்கை! இவ்வாறு பா.ஜ.க. ஆட்சி பறித்த உரிமைகளை ஒன்று ஒன்றாகப் பட்டியல் போட வேண்டும் என்றால், இன்னும் பத்து எபிசோட் பேசலாம்.
இது எல்லாவற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம், மாநில சுயாட்சிதான்! அதனால் தான், பேரறிஞர் அண்ணாவும் - முத்தமி ழறிஞர் கலைஞரும் மாநில சுயாட்சியை வலியுறுத்தினார்கள். நானும் வலியுறுத்திக்கொண்டு இருக்கிறேன். 1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர், நாட்டுக்கே முன்னோடி யாக, மாநில உரிமைகளுக்கு வலுசேர்க்க இராஜ மன்னார் குழு அமைத்தார்; அந்தக் குழுவின் பரிந் துரைகளைச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானமாக நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தில், முக்கியமான சில வரிகளை மட்டும் சொல்கிறேன்.
“மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும் இராஜமன்னார் குழுவின் பரிந் துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகளை மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மை யான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப் படையில் இந்திய அரசமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது.'' இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டில் அப்போது இருந்த இரண்டு அவைகளிலும் நிறை வேற்றினார்.
“மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!”
இவ்வாறு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தைத் தான், அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களும், “These are important issues and we intend to consult all the Chief Ministers” என்று சொன்னார். தலைவர் கலைஞர் தி.மு.க.வின் கொள்கை களை அய்ம்பெரும் முழக்கங்களாகச் சொன்னார். அதில் அய்ந்தாவது முழக்கம், “மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!”
இந்தக் குரலைத் தெற்கில் மட்டுமல்ல, வடக்கில் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா - கிழக்கில் வங்கத்தில் பொதுவுடைமைத் தோழர், ஜோதிபாசு ஆகியோரும் எதிரொலித்தார்கள்.
அரசமைப்புச் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை;
மாநிலங்களையும் மதிக்கவில்லை!
இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது!. அதனால்தான் அவர்கள் அரசமைப்புச் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை!
மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் ஊதியத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங் களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்.
அய்ந்து மாநில தேர்தல்கள் -
மினி நாடாளுமன்றத் தேர்தல்!
மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், ‘இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராகவேண்டும். வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
‘இந்தியா' கூட்டணியின் கையில்,
இந்தியாவை ஒப்படையுங்கள்!
நிறைவாக, இந்த எபிசோடைக் கேட்ட உங்களிடம் உரிமையோடு நான் கேட்பது, ‘இந்தியா' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!'
நன்றி. வணக்கம்.
- இவ்வாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment