மாப்புலவர் நன்னன் புகழ் வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

மாப்புலவர் நன்னன் புகழ் வாழ்க!

- பாவலர் ப.எழில்வாணன்

மூப்பில்லா  முத்தமிழுக்கு  மாப்புலவர்  நன்னன்

முறையாகப்  படைத்திட்ட   முத்தான நூல்கள்

காப்பளிக்கும்  அரணாகக்  காலமெல்லாம்   நிற்கும்!

கனித்தமிழுக்கு  மெருகூட்டி  மேன்மைதனை  நல்கும்! 

தோப்பென்றால்  மரமிருக்கும்!  நிழலிருக்கும்!  நல்ல

தூயகாற்று  குளிர்ந்தடிக்கும்!  கனிகிடைக்கும்   நாளும்!

மாப்புலவர்  நன்னன்தம்  நூலினிலே  அதுபோல்

மாண்புகளும்  நிறைந்திருக்கும்! தமிழ்ச்சுவையும் துய்ப்பீர்!


நன்னன்நல்  லறிஞர்தம்   நூற்றாண்டு  நிறைவு

நற்றமிழர்  நெஞ்சினிலே  அவரருமை  பதிவு!

பொன்னன்ன  அவர்தொண்டு  பூந்தமிழின்  வேர்க்குப்

புனல்வார்க்கும்!  புத்துணர்வும்  பெரும்புகழும்  சேர்க்கும்!

மன்னன்தன்  மண்காத்து  மாண்புதனைக்  காத்து

மாப்புகழை  எய்தல்போல்  தமிழ்மன்னன்  ஆன

நன்னன்நம்   தமிழ்மரபு   பகுத்தறிவுப் பண்பு

நலங்காத்து  வளஞ்சேர்த்தார்!  அவர்புகழோ  வாழ்க!


நன்னன்தன்  பேர்சொன்னால்  நற்றமிழில்  பிழைகள்

நடுக்குற்று  நரிபோல  ஓடிவிடும்!  பிழிந்த

கன்னலதன்  நறுஞ்சாறாய்த் திருக்குறட்குப்  படைத்த

கருத்துரையால்  புதுப்பொலிவு  தேடிவரும்!  பெரியார்

சொன்னபல  புரட்சிமிகு  மணிமொழிகள்  எடுத்துத்

தொகுத்தளித்த  நூல்பெருமை  கோடிபெறும்!  அவரின்

இன்னுமுள  பெரும்பணிகள்   அருஞ்செயல்கள்  இயம்பின்

எண்ணற்ற  பக்கங்கள்  கூடிவிடும்  அன்றோ!


கண்ணனைய  அன்பர்க்குக்  கண்ணாக   இருந்தார்!

கடமைதனைக்  கதிரவன்போல்  பிறழாமல்  புரிந்தார்!

மண்புகழ  இன்பதுன்பம்  பாராமல்  வாழ்ந்தார்!

மறைமலையார்  போற்றிநிற்க  உரையாற்றி  உயர்ந்தார்!

திண்ணமுடன்  கலைஞர், பேராசிரியர்  புகழச்

செந்தமிழ்க்குச்  சீர்பணிகள்  செய்திங்கே  திகழ்ந்தார்!

எண்திசையும்  இவர்பெயரோ   என்றென்றும்  நிலைக்கும்!

இவர்புகழும்  இவர்குடியும்  இமயம்போல்  வாழ்க!

No comments:

Post a Comment