அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தீர்ப்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு வரவேற்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தீர்ப்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு வரவேற்கிறது!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து   வழங்கப்பட்ட தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு வரவேற்கிறது!

ஆதிதிராவிடர் முதல் ஸ்மார்த்த பிராமணர்வரையிலான அனைத்து ஜாதியினரும் முறையாகப் படித்து, தகுதிப்படுத்திக் கொண்டால் அர்ச்சகர் ஆகலாம்!

அர்ச்சகர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் வாதாடிய தலைமை வழக்குரைஞருக்கு நன்றி!

தமிழக அரசு அர்ச்சகர் பணி நியமனங்களை  உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தனது மனுவில் சுகவ னேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. 

அர்ச்சகர் நியமனத்திற்காக இந்த அறிவிப்பில் கோரப்பட்ட விண்ணப்பம் ஆகமத்தின் அடிப் படையில் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்  தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதி கேசவலு ஆகியோர் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஆகம கோவில்களில் அர்ச்சகர்களை பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கச் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து இந்துக்களின் அர்ச்சகர் நியமனத்தில் முன்னேற்றத்தை காட்டும் தீர்ப்பாகும். 

முறையான அரசியல் சட்டக் கண்ணோட்டத் தோடு,உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சரியான கண்ணோட்டத்தில் தீர்ப்பு அணுகியுள்ளது. மிக நீண்ட காலமாக தெளிவாக்கப் படாத ஆகமத்தின் இருகூறுகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். 

குறிப்பாக,ஆகமத்தின் இரு பகுதிகளில் ஒன்றான பூஜை,சடங்குகள் தொடர்பான விசயங்களில் அரசு தலையிட முடியாதென்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை உறுதி செய்யும் நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். 

அர்ச்சகர் நியமனம் என்பது - மதச் சார்பற்ற நட வடிக்கை, அரசு , கோயில் நிர்வாகம், அறநிலையத் துறை ஆகியோர் ஜாதி வேறு பாடின்றி அர்ச்சகர் நியனத்தை மேற்கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள், சம்பந்தப்பட்ட கோயிலின் ஆகமத்தைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளையும் முறையாக ஆராய்ந்து, சரியான பொருளில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. ஆகமத்தில் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருந்தாலும் அது செல்லாது என்ற தீர்ப்பின் விளக்கமே அர்ச்சகர் நியமனத்தில் முக்கியமானது.

பரம்பரை வழி அர்ச்சகர் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிராகரித்த நீதிபதி, ஜாதியும் தகுதியல்ல என்பதைக் கூறுகிறார்.எளிமையாகச் சொன்னால், ஆதிதிராவிடர், அருந்த தியர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான ஜாதியில் உள்ள எவரும் முறையாக ஆகமம் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகராகலாம் என்பதே தீர்ப்பின் சாரம்.

எனினும் "தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக" கலைஞரால் சொல்லப்பட்ட, அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனம் என்ற கருவறைத் தீண்டாமை பிரச்சினை இன்னும் நிரந்தரத் தீர்வை எட்டவில்லை.மிகக் குறிப்பாக, அதிக வருமானம் வரும் தமிழ்நாட்டின் பெருங்கோயில்களை தங்கள் சொத்துக்களாகக் கருதும் பிராமண அர்ச்சகர்கள், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பரம்பரை வழி, ஜாதி வழி அர்ச்சகர் என வழக்குத் தொடுப்பதில்லை.மாறாக, தாங்கள் தனி மத உட்பிரிவினர் (Religious Denomination) என்றும், நான்கு ரிஷி வழி வந்தவர்கள் என்றும், தாங்கள் மட்டுமே கோயிலில் பூஜை செய்வதென்பது கோயிலின் பழக்கம், வழக்கம், மரபென்றும் சொல்கிறார்கள்.

சேலம் சுகனேசுவரர் கோயில் வழக்கில் தனி மத உட்பிரிவினர் என்ற கோரிக்கை எழாததால், இதற்கு தீர்வு காணப்படவில்லை என்பதுடன் இந்தத் தீர்ப்பிற்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறநிலையத்துறை பணியாளர் விதிகள் 7 & 9 செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் 2022-ஆம் ஆண்டுத் தீர்ப்பிற்கு இன்றுவரை மேல்முறையீடோ, மறு ஆய்வு மனுவோ, இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யாததையும் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது.

இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் - தமிழ்நாடு வர வேற்கிறது. தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்ற அர்ச்ச கர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

- வா.ரங்கநாதன், தலைவர்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 

சங்கம் - தமிழ்நாடு

No comments:

Post a Comment