பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

பிற இதழிலிருந்து...

சனாதனத்தில் இவை உண்டல்லவோ பிரதமரே! 

அருணன்

“சனாதன தர்மம் வெறும் வார்த்தை யல்ல; அது எப்போதும் புதியது; மாற்றங் களை ஏற்கக் கூடியது; தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த விருப் பமுடையது; நித்தியமானது மற்றும் அழிவில்லாதது” (தினமணி 12-5-23) என்று பிரதமர் மோடி முழங்கி யிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “சனாதன தர்மமே பாரதிய தர்மம், அதற்காக அகண்ட பாரதம் அமைப்போம்” என்று அறிவித்தார். ராஜகுருவின் அந்தப் பேச்சை எதிரொலிக்கிறார் ராஜா. இதுதான் சங்கிகளின் கனவு. சனாதனத் தலைவர் சொல்வதைக் கேட்டு நடக்கிற பிரதமர் வேண்டும். அதைச் சாதித்திருக்கிறார்கள்!

சனாதன தர்மம் என்றால் என்ன?

ஒன்றை கவனியுங்கள். இதுகாறும் “இந்து தர்மம், இந்துத்துவா, இந்து ராஷ்டிரம்” பேசி வந்தவர்கள் இப்போது சனாதன தர்மம் என்று பேசுகிறார்கள். இவர்கள் இந்து எனப் பேசுவதெல்லாம் கூட்டம் சேர்க்கவே, சேர்ந்ததும் தங்களது சொந்த லட்சிய மாகிய சனாதனத்தை வளர்க்கவே அரசியல் அதிகார த்தைப் பயன்படுத்துவார்கள் என்றோம். அது உண்மை யாகி வருகிறது. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி சனாதன தர்மத்தைப் புகழ்ந்து பேசி வருவது யதேச்சையானது அல்ல என்பது இப்போது புரிந் திருக்கும். கோஷ்டி கானம் கிளம்பி விட்டது. இப் பொழுது நாம் அந்த அடிப்ப டையான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது: சனாதன தர்மம் என்றால் என்ன?

அது “நித்தியமானது, அழிவில்லாதது” என்கிறார் நாட்டின் பிரதமர். கேட்டால் சொல்வார்கள்: அது துவக்கம் இல்லாதது, ஆகவே முடிவும் இல்லாதது. அது எப்படி தொடக்கம் இல்லாமல் இருக்கும்? மனித னால் உருவாக்கப்பட்ட கருத்தியல் மற்றும் நடைமுறை தானே? மனிதனால் துவக்கப்பட்டதற்கு எல்லாம் முடிவும் உண்டு. மனிதருக்கே, மகாஞானிகளுக்கே முடிவு இருக்கும்போது அவர்கள் துவக்கிய ஒரு கட்டமைப்பிற்கு முடிவு இருக்காதா? இல்லை... இல்லை... இது மனிதர்கள் உருவாக்கியதே இல்லை, பரமாத்மா உருவாக்கியது என்று ஒரு போடு போடுவார்கள். அப்படியெனில் அதில் மாற்றம் செய்ய முடியாது, கூடாது. கடவுள்  சமைத்ததில் மனிதன் எப்படி கை வைக்க முடியும்? ஆனால் பாருங்கள் மோடி சொல்கிறார்: “அது மாற்றங்களை ஏற்கக் கூடியது, தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த விருப்பமுடையது”.

மாறினால் நித்தியமல்ல

இது என்ன கூத்து! ஆதி அந்தம் இல்லாதது எப்படி மாற்றத்திற்கு உட்படும்? சனாதனமானது பரமாத்மாவின் குறைப் பிரசவமா? நித்தியமானது என்பதும்,  மாற்றத்திற்கு உட்பட்டது என்பதும் முரணான விஷயங்கள். நித்தியமானது மாறாது, மாறினால் அது நித்தியம் அல்ல. ஆனாலும் சங்கி குருமார்கள் அடித்து விட, அதை அப்படியே பிரதமர் வாந்தி எடுக்கிறார். நேரு போன்ற அறிவுஜீவிகள் அலங்கரித்த பதவியில் இப்படியொரு தத்தி!

வருமா, வராதா?

சனாதன தர்மம் பற்றிப் பேசும் பிரதமரிடம் நாம்  கேட்கும் கேள்வி இது தான்: இந்த தர்மத்தின் கூறுகள் என்ன? தர்மம் தர்மம் என்று பொதுவாகப் பேசுவது உலகை ஏமாற்றும் வேலை. உங்களது அந்த தர்மத்தில் வருணாசிரம தர்மம் வருமா வராதா? நால் வருணம் பற்றி முதலில் பேசும் ரிக் வேதத்தின் புருஷ சூக்தம் வருமா வராதா? சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் பெண்களையும் இழிவாக நடத்தும் மனுதர்மம் வருமா வராதா? தவம் செய்தான் என்று சூத்திரன் சம்பூகனின் தலையை, பிராமணர் பேச்சை கேட்டு அறுத்த ராம னின் செயல் வருமா வராதா? வித்தை கற்றான் என்று பழங்குடி மகன் ஏகலைவனின் கட்டைவிரலை, ஷத்திரி யருக்காக துரோணர் வாங்கிய அடாவடித் தனம் வருமா வராதா? “சதுர்வர்ண்யம் மயா சிருஷ் டம்” என்று  கிருஷ்ணன் சொன்னதாக பிராமணிய பண்டிதர்கள் எழுதி வைத்த கீதை வருமா வராதா?

இன்றைக்கும் ஜாதிவாரியாக மடாதிபதிகள் இருக்கும் நடைமுறை வருமா வராதா? ஆகமக் கோயில்களில் பிராமணரே அர்ச்சகர் எனும் பழக்கம் வருமா வராதா? பெண்கள் மடாதிபதிகளாகவோ அர்ச்கர்களாகவோ வரமுடியாது எனும் தடை வருமா வராதா? இப்போதும் அனேகமாக ஒரு ஜாதிக்கு ள்ளேயே திருமணம் நடப்பது வருமா வராதா? கர்மா எனும் கோட்பாடு வருமா வராதா? அதன்படி ஒருவர் அதானியாக இருப்பதும், ஒருவர் ஆண்டி யாக இருப்பதும் அவரவர் முன்ஜென்ம வினை எனும் நியாயப்படுத்தல் வருமா வராதா? அதனால் அதானி கள் கொள்ளையடிப்பதும் ஆண்டிகள் பரிதவிப்பதும் இயல்பானது, அதை மாற்ற முடியாது எனும் சிந்தனை வருமா வராதா?

அது தர்மமல்ல, அதர்மம்

சொல்லுங்கள்.. சொல்லுங்கள்.. இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் குருபீடமாம் ஆர்.எஸ்.எஸ்.சி.டம் கேட்டுச் சொல்லுங்கள், பிரதமரே! இவையெல்லாம் இல்லாமல் சனாதன தர்மமா என்பார்கள் அவர்கள்! இவையெல்லாம் உள்ளதுதான் சனாதன தர்மம் என்றால் அது தர்மம் அல்ல அதர்மம். அந்த அநீதி யான கட்டமைப்பு நித்தியமானதாக, அழி வில்லாததாக இருக்குமேயானால் அது இந்துக்களை அப்படியே பல நூற்றாண்டு காலம் பின்னோக்கித் தள்ளுகிற பேராபத்து. அது பால்ய விவாகம், விதவைக் கோலம், பெண்கல்வி மறுப்பு, தீண்டாமை, கறாரான ஜாதியம்  எனும் நிலப்பிரபுத்துவ காலத்திற்கு மக்களை இழுத்துச் செல்லும் கேடுகெட்ட வேலை. வரலாற்றுச் சக்கரத்தை வலிய பின்னுக்குத் திருப்பும் அசிங்கமான காரியம். ஷேக்ஸ்பியர் கூறியது போல “நரகம் காலியாகி விட்டது, பிசாசுகள் எல்லாம் இங்கு வந்து விட்டன” எனும் நிலை முடிவில் வந்து சேரும்.

மனு அதர்ம வாசகம் - 

ஆளுநர் சொந்த வாழ்வு

சங்கிகளின் சனாதன தர்மம் பற்றிய நமது எச்சரிக்கையில் எவருக்கேனும் சந்தேகமிருந்தால் அதை தீர்த்து வைத்திருக்கிறார் மேதகு ஆளுநர் ரவி.  “நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். எனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை.ஆனால் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். உலகத்தையே எதிர்க்கும் திறனை எனது மனைவி அளித்தார்”.(புதிய தலைமுறை 12-5-2023) பால்ய விவாகமானது ஒரு பெண்ணின் கல்லூரிப் படிப்பைக் கெடுத்ததைப் பெருமையாகச் சித்தரிக்கிறார்! பெண் என்றால் அவர் கணவனின் வெற்றிக்குப் பின்னால் இருக்க வேண்டும், அவ்வளவே. அந்தப் பெண்ணுக்கு என்று தனித்த வாழ்வு  கூடாது. மனு அதர்மத்தின் வாசகம் ஆளு நரின் சொந்த வாழ்வாக வெளிப்படுவது மட்டுமல்ல, அதில் உள்ள ஆணாதிக்க பெருமிதத்தை நோக் குங்கள். இதுதான் சனாதன தர்மம், சமதர்மத்திற்கு நேர் எதிரானது! இதுவே நித்தியமாய், நிரந்தரமாய் இருக்க வேண்டும் என்கிறார் மோடி. எவ்வளவு கேடு கெட்ட புத்தி. சங்கிகளின் ராஜ்ஜியம் சனாதன ராஜ்ஜியம். அது முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல ஹிந்துக்களுக்கும் எதிரானது, மனித குலத்திற்கே எதிரானது என்பதை உலகறியச் செய்வோம்.

நன்றி: 'தீக்கதிர்' - 15.5.2023


No comments:

Post a Comment