ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி உத்தரவு!

பொதுத்துறை நிறுவன ஓபிசி பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் மறுக்கப்படுவது குறித்து நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பின் சார்பில் 10.8.2022 தேதியிட்ட கடிதம் பெறப்பட்ட நிலையில், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு 4.9.2022 தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டது.

நமது கூட்டமைப்பின் கடிதத்தில்,‘‘தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையில், ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினரை (கிரிமிலேயர்) நீக்கம் செய்திட குறிப்பிட்டுள்ள பணியாளர் வகைப்பாட்டில் (service category), (பத்தி 2- வீவீ)” பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்” என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் அனைத்து நிலை ஓபிசி பணியாளர்கள் பிள்ளைகளுக்கு ‘ஓபிசி சான்றிதழ்’ பெறுவதில் பெரும் சிக்கலும் தடையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 24.8.2021 இல் குறிப்பிட்டுள்ள ஒன்றிய அரசின் இரு ஆணைகளிலும், (இந்திய அரசின் அலுவலக குறிப் பாணை எண்: 361012/22/93-Estt.SCT, நாள்: 8.9.1993 மற்றும் இந்திய அரசின் அலுவலக குறிப்பாணை எண்:36033/1/2013-Estt-(Res), நாள் 13.9.2017) பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓபிசி பிரிவினர் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையையும், அதே போன்று அந்த ஆணையை வழி மொழிந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் பிறப்பித்த வருவாய் நிருவாக ஆணையரகத்தின் 24.9.2021 தேதியிட்ட ஆணையையும் திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றிய அரசின் அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதையும், தற்போதைய 24.8.2021 தேதியிட்ட ஆணை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தமிழ்நாடு ஓபிசி பிரிவினர் வாய்ப்பை மேலும் குறைத்திடும் என்பதையும் கருத்தில் கொண்டு, மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஆவன செய்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என கடிதம் எழுதப்பட்டது. கடிதத் தின் நகல் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் அவர் களுக்கும் அளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ 11.10.2022 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், நமது கூட்ட மைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டது.

நமது கூட்டமைப்பின் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம், நாம் கோரிய கோரிக்கை, அதாவது, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாடு அரசின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் பார்வை 7 இல் நமது கூட்டமைப்பின் 4.9.2022 தேதியிட்ட கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய 30.3.2023 தேதியிட்ட கடிதம் காரணமாக, ‘பொதுத் துறை நிறுவன ஊழியர்கள்’ அனைவருக்கும் கிரிமிலேயர் என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லாத பதவிகளில் உள்ள ஓபிசி பிரிவினர் ஒன்றிய அரசின் குரூப் சி-க்கு இணையான பதவிகள் என்பதாலும், குரூப் சி பதவிகளுக்கு ‘கிரிமிலேயர்’ முறை பொருந்தாது என்பதாலும், ஒன்றிய அரசு, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் பதவிகளில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது பிள்ளை களுக்கு ஓபிசி சான்றிதழ் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது பிற்படுத்தப்பட்டோர் துறையின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓபிசி சான்றிதழ் வழங்கிடும் துறைகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய் துறை கூடுதல் முதன்மை செயலாளர் /ஆணையருக்கு கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) குறித்த சிக்கலை நமது கவனத்திற்கு கொண்டு வந்த என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பிற்கும் அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது நன்றி. பாராட்டுகள்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருவாய் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தம்பி மருத்துவர் நா.எழிலன் அவர்களுக்கு நன்றி! 

 நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு கடிதத்தின் அடிப்படையில் உரிய தீர்வினை மேற்கொண்டு, ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் கிடைத்திட வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கும், சமூக நீதி கண்காணிப்புக் குழு அரசு செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்!

- கோ.கருணாநிதி

பொதுச்செயலாளர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment