“கோலி மாரோ” விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? - டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

“கோலி மாரோ” விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? - டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஏப்.23- ‘கோலி மாரோ' விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டில்லியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியின் போது ஷாஹீன் பாக் மற்றும் சிஏஏ  எதிர்ப்பு போராட்டக்காரர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா. தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒருபடி மேலே சென்று “கோலி மாரோ தேஷ் கே கடாரோ” (“துரோகிகளை சுடுங் கள்”) என்று கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்.  

இந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்திலேயே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் டில்லி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஆனால் டில்லி காவல்துறை,”பாஜக தலைவர்கள் பயன்படுத்திய “துரோகி” என்ற ஹிந்தி வார்த்தை,  குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எவரையும் குறிப்பிட்டு பேசியதாக இருக்க முடியாது என்றும்,  பர்வேஷ் வர்மாவின் பேச்சு வன்முறைச் செயல்களைத் தூண்டிவிட முடியாது எனவும் விசாரணை அறிக்கை யுடன் விளக்கம் அளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுத்தது. 

டில்லி காவல்துறை அளித்த விசாரணை அறிக்கை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு ஆதரவாக இருந்ததால் பிருந்தா காரத் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரதாரி சிங், சட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்குத் தகுதியான அதிகாரியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று கூறி, டில்லி காவல்துறை விசாரணை அறிக்கை உத்தரவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பு வழங்கினார்.

டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கே.எம். திவாரியுடன் இணைந்து, பிருந்தா காரத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகி யோர் அடங்கிய அமர்வில் 17.4.2023 அன்று விசா ரணைக்கு வந்தது. 

அரசு ஊழியர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யும் நோக்கத்தில் நிலவும் நீதித்துறை தீர்ப்புகள் குறித்து விவாதித்த பிருந்தா காரத் தரப்பு வழக்குரைஞர், ‘‘மேற்கண்ட அரசியல் தலைவர் களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத வரை பாதிக்கப்பட்டோரின் கடந்த கால காயங்கள் ஆறாது. குற்றப் பிரிவு 153 மற்றும் 153-ஏ (அய்பிசி)யின் கீழ் வருவதற்கு அறிக்கைகள் மதச் சார்புடையதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பேச்சின் மூலம் வன்முறையை  தூண்டுபவர்களாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலே போதுமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்க்கும் அனைத்து நபர்களும் “துரோகிகள்; அவர்களை சுடுங்கள்” என்று பொது வெளியில் நடந்த பேரணியில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு மதத்திற்கு எதிராக அல்லது மற்ற மதங்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பேச்சு ஆகும். சோதனைகள், இன்னல்கள் பல இருந்த போதிலும் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை”என வாதிட்டார். 

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும் என டில்லி அரசுக்கு தாக்கீது அனுப்பி உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment