வைக்கம் நூற்றாண்டு தொடக்கநாள் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது! - கி.தளபதிராஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

வைக்கம் நூற்றாண்டு தொடக்கநாள் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது! - கி.தளபதிராஜ்

18ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் கேரளத்தில் ஆண்டு கொண்டிருந்த சின்னச்சின்ன குட்டி ராஜாங்கங்களையெல்லாம் அழித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கினான் மார்த்தாண்டவர்மா. அப்போரில் சில பார்ப்பனர்களும் கொல்லப்படவே அதற்குப் பரிகாரமாக ‘முறைஜெபம்‘ நடத்துமாறு நம்பூதிரிகள் ஒன்று கூடி அரசனுக்கு ஆலோசனை கூறினர். முறைஜெபம் என்பது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்பூதிரி பார்ப்பனர்களை எல்லாம் அழைத்து பூஜை செய்து அவர்களுக்குத் தேவையான ‘அனை’த்தையும் செய்து கொடுத்து மகிழ்விப்பதாகும். இது தொடர்ந்து அறுபது நாட்கள் நடக்கும். அந்த நாட்களில் அவர்களுக்குத் தேவையான பொன், பொருளோடு பெண்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி  இருபத்து அய்ந்து முறை இந்த முறைஜெபம் நடத்தப்பட வேண்டும் என்று நம்பூதிரிகளால் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த நேர்த்திக் கடன் அதையும் கடந்து இருபத்து எட்டாவது முறையாக கோட்டை வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது. தெருவை அடைத்து மிகப் பெரிய பந்தலிடப்பட்டு நம்பூதிரிகள் கூடி ஏக களேபரத்துடன் பூஜை நடந்தது.

முறைஜெபம் நடந்துகொண்டிருந்த மேற்படி கோட்டை வளாகத்தில்தான் நீதி மன்றமும் செயல்பட்டு வந்தது. நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவரான பி.என்.மாதவன் என்ற ஒரு வழக்குரைஞர் தனது வழக்கில் ஆஜராக நீதி மன்றம் செல்ல வேண்டி முறைஜெபம் நடந்து கொண்டிருந்த சாலையைக் கடந்து  சென்றார். அதனால் தீட்டுப்பட்டு விட்டதாக சொல்லி பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாவட்ட நீதிமன்றத்தின் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த சி.கோவிந்த பிள்ளை அப்போது முறைஜெப நிகழ்ச்சியின் தனி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். முறைஜெபம் நடைபெற்ற சாலை வழியாக வந்த வழக்குரைஞர்  பி.என்.மாதவனை கண்டித்த மேற்படி நீதிபதி, அவரை நீதி மன்றத்தை விட்டே வெளியேற உத்தரவிட்டார். வழக்குரைஞர் பி.என்.மாதவன் அவமதிக்கப்பட்ட செய்தி அறிந்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.மாதவன் மிகுந்த கவலையுற்றார் . காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அது தொடர்பாக குரல் எழுப்பினார். ‘இந்தியாவிலுள்ள தீண்டாமை ஜாதி மக்கள் விடுக்கின்ற வேண்டுகோள்!’ என தலைப்பிட்டு தான் எழுதிய சிறு புத்தகத்தை அங்கு கூடியிருந்த தலைவர்களிடத்தில் வழங்கினார். வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டதன் பொறி இது தான்.

1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திட்டமிட்டபடி கேசவமேனன், ஏ.கே.பிள்ளை, வேலாயுத மேனன், டி.கே.மாதவன், போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு சில நாட்களிலேயே ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்படவே போராட் டத்திற்கு. தலைமையேற்க தலைவர்களை அனுப்பும்படி காந்தியாரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. வைக்கம் போராட்டத்தை அகில இந்திய போராட்டமாக பெரிதுபடுத்த விரும்பாத காந்தியார் தலைவர்கள் யாரையும் அனுப்பாத நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி கேரளத்திலிருந்து கே.நீலகண்ட நம்பூதிரிபாத், உடனே புறப்பட்டு வரும்படி தந்தை பெரியாருக்கு தந்தி கொடுத்தார்!

வைக்கத்தில் பெரியார்!

ஏப்ரல் 6ஆம் தேதி ஜார்ஜ் ஜோசப்பிடமிருந்து பெரியாருக்கு அழைப்பு வந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்ததால் உடனடியாக தந்தை பெரி யாரால் வைக்கம் செல்ல இயலவில்லை. திருச்சி குளித்தலை மாநாட்டில் கலந்துகொண்டு அங்கிருந்து மதுரை ஜில்லாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெரியாருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட, ஈரோடு திரும்பிவிட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 12 ஆம் தேதி நம்பூதிரிபாத், “சத்தியா கிரகத்தின் நிலைமைப் பற்றி யோசிக்க கூட்டம் கூடுவதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்!” என மீண்டும் பெரியாருக்கு தந்தி அடித்தார். அதே சமயம் கொச்சியிலிருந்தும் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரும், “நீங்கள் இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனே புறப்பட்டு வாருங்கள்!” என பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்பினார். இரவு 7 மணிக்கு பெரியாருக்கு வந்த மற்றொரு தந்தியில், “வைக்கத்தில் நிலைமை பயங்கர மாக இருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப் பட்டு விட்டனர். நானும் வைக்கத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு நான் கைது செய்யப்படுவதும் நிச்சயம். இயக்கத்திற்கு தலைமை வகித்து நடத்த வாருங்கள். தந்தி மூலம் யோசனை கூறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடும் வயிற்றுப்போக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பெரியார் நாகம்மையாரிடம், தனக்கு உடல் நலம் சரியாகிவிட்டது என்று பொய் சொல்லி மூட்டை முடிச்சுகளுடன் அன்று இரவே புறப்பட்டு 13ஆம் தேதி வைக்கம் சென்றடைந்தார்!

பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைப் போலவே இராஜாஜிக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. திருவிதாங் கூர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டில் முக்கியமான பணிகளில் இருக்கும் முக்கியஸ்தர்களை இந்த வேலைக்கு இழுப்பதும் சரியில்லை என்று கூறிவிட்டார். போராட்டத்திற்கு மூல வித்தாக செயல்பட்டுவந்த ஜார்ஜ்ஜோசப்பையும் மாற்று மதத்தவர் என்பதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என தடுத்தார் காந்தியார்.

பெரியாரின் குடும்பமே போராட்டக் களத்தில்!

வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது திருவிதாங்கூர் மன்னர் அளிக்க இருந்த வரவேற்பை மறுத்து தான் இங்கு போராட வந்திருப்பதாகச் சொல்லிக் களம் புகுந்தவர் பெரியார். இந்தப் போராட்டத்தில் பெரியார் மட்டுமின்றி, அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள், மற்றும் உறவினர்களான லட்சுமியம்மாள், மாரக்காயம்மாள் எனப் பலரும் பங்கெடுத்திருக்கிறார்கள்!

1924 மார்ச் 30இல் தொடங்கி 1925 நவம்பர் வரை நடந்த வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் பெரியார் ஒருவரே. 74 நாட்கள் சிறையிலும், 67 நாட்கள் போராட்டக் களத்திலுமாக.141 நாட்கள் தொடர்ந்து போராடியவர்.

பெரியாரின் பேச்சும் எழுச்சியும்!

“சில இந்துக்கள் சில குறிப்பிட்ட வேலையை செய்வதால் தீண்டத்தகாதவர் ஆகிவிடுவர் என்பது உண்மையா? வலது கை சாப்பிடுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உடம்பின் கழிவுகளை சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை இருக்கிறது. ஒவ் வொரு கைக்கும் தனித்தனி தந்தை தாய் உண்டா? இடது கையை தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளை தொழும்போது வலதுகையுடன் மட்டும் செல்கிறோமா? கோவிலுக்கு செல்லும்போது நமது இடது கையை விட்டு விட்டு செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தை விட உயர்வானது என்றால், இடது கண்ணால் நம்மை பார்ப்பவரை குற்றம் சொல்லுகிறோமா? அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா? வெவ்வேறு வேலைகளை செய்தாலும் சமத்துவமாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம்! அது போலவே ஒவ்வொரு இந்துவும் சமத்துவமாக நடத்தப்பட உரிமை உடையவர்கள்.

பிராமணனாக இருக்கட்டும்; புலையராக இருக்கட் டும்; இறந்த கால்நடைகளை அறுக்கும் பறையர் தீண்டத்தகா தவர்கள் எனில், மனித உடலை அறுக்கும் பிராமண டாக்டர்களிலும் நாயர் டாக்டர்களிலும் எவ்வளவு அதிக மான தீண்டத்தகாதவர்கள் உள்ளனர்?

கள்ளை இறக்குவதால் தீய தாழ்ந்த ஜாதியினர் எனப்படுகிறார் எனில், அதை குடிப்பவர் எந்த அளவு மோசமானவர்? கள்ளை இறக்க மரங்களை குத்தகைக்கு விடுபவர் இவர்களை விட எந்த அளவு கூடுதல் மோசமா னவர்? கள்ளிலிருந்து வருவாய் அதிகரிக்கும் அரசாங்கம் இவர்களையெல்லாம் விட கூடுதல் மோசமானது அல்லவா? உயர்வு என்பது ஒருவர் செய்யும் வேலையிலா இருக்கிறது? கையூட்டு பெரும் காவல் அதிகாரியும் தவறான சாட்சியம் சொல்லும் வக்கீலும் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறது?” என்று கேட்டார்

பெரியாரின் உரை பொதுமக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை கண்டு அதிர்ந்த அரசாங்கம் திருவிதாங்கூரில் பெரியார் பேசுவதற்கு தடை விதித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து கோட்டயம் மாவட்டத்திலும் எந்த ஒரு பகுதி யிலும் வருகை தரவோ தங்கவோ கூடாது என்றும் 3.5.1924 ஆம் தேதி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தடை விதித்தார் தடையை மீறி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரியாரை திருவிதாங்கூர் அரசு கைது செய்து சிறை வைத்தது.

ஒரு மாத கால சிறைத் தண்டனையை முழுமையாக முடித்து 21.6.1924ஆம் தேதி ஆறுக்குட்டி சிறையில் இருந்து பெரியார் விடுதலை ஆனார். பெரியார் விடுதலை ஆனதும் மறுநாளே வானவில்லில் நடைபெற இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி நேராக வைக்கம் புறப்பட்டார்.  படகுத்துறையிலிருந்து தொண்டர்களின் பெரிய ஊர்வல வரவேற்புடன் பெரியார் ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்டார். கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய தடை ஆணை நடைமுறையில் இருந்த போதிலும், ‘பிரவேச தடை ஆணைக்கு பணியப் போவதில்லை’ என்று அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை மீறியதால் 18.7.1924இல் பெரியார் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டார். இந்த முறை நான்கு மாத கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் கேரள தலைவர்கள் எல்லாம் அரசியல் கைதிகளாக கவனிக்கப்பட, பெரியாருக்கு மட்டும் கைதி உடை அணிவித்து காலில் விலங்கு பூட்டி சாதாரணக் கைதியாக நடத்தியது சிறை நிர்வாகம். சிறையில் பெரியார் கொடுமையாக நடத்தப்பட்டதை ராஜாஜி கண்டித்து அறிக்கை விடுத்தார். நவசக்தி பத்திரிகையும் எச்சரித்தது.

ராஜாஜி தனது அறிக்கையில். “தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரக கைதியாக இருக்கும் ஈ.வி.ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகரமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளிடமிருந்து ரொம்ப தூரத் தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவரு டன் நன்றாகப் பழகி இருக்கிறேன்; அவருடன் பலகாலம் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளி விட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல; உண்மையிலேயே தம்மை தூய்மைப்படுத்தும் இந்த செயல்களை அவர் வரவேற்கிறார்.

நாயக்கர் விஷயத்தில் ஏதோ காரணங்களுக்காக திருவி தாங்கூர் தவறு செய்து விட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதியைப் பற்றிய அறியாமை அதற்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அதை மன்னிக்க முடியாது. அவரை கடுங்காவல் சிறை தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட்டி ருப்பதும், அவருக்கு சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரக கைதிகள் சரியாக பெற்றுள்ளவைகளை அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியா தவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தைரியமிக்க தலைவருக்கு என் பாராட்டுகள்!” என்று எழுதியிருந்தார்.

பெரியார் அனுபவித்த சிறைக்கொடுமையை எடுத் துரைத்து அவரை இப்படி துன்புறுத்துவதால் அவர் மூட்டிய எழுச்சி அடங்கிவிடுமா? எனக் கேட்டது நவசக்தி!

“நாயக்கர் செல்வத்தில் சிறந்த சீமான்; செழிய நிலையில் வாழ்க்கை நடத்தினவர்; தேசத்தின் பொருட்டு எல்லா வற்றையும் தியாகம் செய்து மிக எளிய வாழ்க்கை மேற் கொண்டு தேச சேவை செய்து வந்தார். அத்தகைய பெருமை வாய்ந்த அவர் திருவனந்தபுரம் சிறையில் இடுப்பில் சிறை உடையோடும், கரத்தில் விலங்கோடும், மற்ற சத்தியாகிரக சிறைக் கூட்டத்தினின்றும் பிரிக்கப்பட்டு, தனி அறையில் உறைகின்றாராம்!

நாயக்கர் சத்தியாகிரக தர்மத்தை உணர்ந்தவர் ஆதலால் எந்த கஷ்டத்தையும் சகிக்கும் சக்தி வாய்ந்தவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தர்மமோ? என்று கேட்கிறோம். ஸ்ரீமான் நாயக்கர் என்ன குற்றம் செய்துவிட்டார்?

மக்கள் சமரச உரிமை குறித்து போராடி அதை ஒடுக்க எழுந்த அரசாங்கக் கட்டளையை இரண்டாம் முறை மீறியது பெரும் குற்றமாக அரசாங்கத்தால் கருதப்படுகிறது. மனச்சான்று வழி நடப்பதை சிறந்த ஒழுக்கமாகக் கொண்ட ஒருவரை துன்புறுத்துவதோ மனுநீதி? திருவிதாங்கூர் அரசாங்கத்தார் சத்தியாகிரகச் செயலாளரை நன்கு பாது காத்து வந்தார் என்று எழுந்த நற்பெயர் வீழ்ந்து விடும் போலும். திருவிதாங்கூர் அரசாங்கத்தார் தமது நற்பெயரை காக்க முயல்வாராக. ஒரு தலைவரைத் துன்புறுத்துவதால் எழுந்த கிளர்ச்சி ஒடுங்கி விடுமோ? (நவசக்தி:29.8.1924)

பெரியாரின் சிறை வாழ்வைப் பற்றி பல்வேறு தலை வர்களும் கவலை கொண்டு கண்டிக்க, பெரியாரோ சிறை யில் தான் நடத்தப்பட்ட விதத்தையோ, அனுபவித்த தொல்லையையோ, இன்னலையோ சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாகர்கோயிலில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் தன் சிறை அனுபவத்தை இப்படித்தான் பகிர்ந்தார்.

“சிறையில் இருந்தபோது என்னைக் கடுமையாக நடத்தியதாக மக்கள் நினைக்கக் கூடாது. அமைதியான வாழ்கையையே நான் சிறையில் நடத்தினேன்.  விடுதலை ஆனதுதான் எனக்கு கவலை அளித்துவிட்டது.  வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளிலும், பாதைகளிலும் ஜாதி இன வித்தியாசமில்லாமல் அரசாங்கம் மக்களை நடத்த விடவில்லை எனில் மீண்டும் சிறை செல்லத் தயாராகவே இருக்கிறேன்!” என்று தெரிவித்தார். பெரியாரின் அந்த உள்ள உறுதியை எப்படி எடுத்துரைப்பது? அதனால் தான் பெரியாரை அப்போதே ‘வைக்கம் வீரர்’ என்று எழுதியது நவசக்தி!

பகவானுக்கே பவர் குறைந்துவிட்டதாக கூறிய பார்ப்பனர்கள்!

வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். ஜாதி இந்துக்கள் வைக்கம் கோயிலில் வைக்கத்து அப்பனுக்கு அபிஷேகம் செய்து பூ கட்டி வைத்து,  “தாழ்த்தப்பட்ட வகுப்பினரை கோயிலைச் சுற்றிய வீதிகளில் விடலாமா?” என்று உத்தரவு கேட்க முடிவெடுத்தனர், அபிஷேகம் செய்து பூ கட்டி உத்தரவு கேட்டார்கள். வைக்கத்து அப்பன் ‘விட்டு விடலாம்‘ என உத்தரவு கொடுத்ததாம்.  உடனே அங் கிருந்த பார்ப்பனர்கள் “வைக்கத்து அப்பனுக்கு சக்தி குறைந்துவிட்டது! ஹோமம் செய்து நாளை மீண்டும் உத்தரவு கேட்கலாம்" என்று சொல்லி மறுநாள் ஹோமம் வளர்த்துக் கேட்டார்கள். இப்படி தொடர்ந்து மூன்றுநாள் கேட்டிருக்கிறார்கள். வைக்கத்து அப்பனும் மூன்றுநாளும் சத்தியாகிரகிகளை சாலையில் அனுமதிக்கலாம் என்றே உத்தரவு கொடுத்திருக்கிறது. அதைக் கண்டு வெறுப்படைந்த பார்ப்பனர்களும் நாயர்களும் சத்தியாகிரகிகள் நாசமாக வேண்டி கோயிலிலேயே சத்துரு சங்கார யாகம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்!

பெரியாருக்கு எதிராக யாகம் நடத்தப்போய் மன்னர் மரணம் அடைந்தது எல்லோரும் அறிந்த செய்தி. மன் னரின் மரணம் அறிந்த பெரியார், “இந்த யாகத்தினால் எனக்கு ஏதேனும் கேடு உண்டாக்கி விடலாம் என்று எண்ணியது எப்படி மூடத்தனமோ அதே போன்றதுதான் அந்த யாகம் திருப்பி மன்னரை தாக்கிவிட்டது எனக் கருது வதும்“ என்று சொன்னதுதான் இங்கு ஹைலைட்!

கோயில் நுழைவே இலட்சியம்!

அரசாங்கம். பெரியாரிடம் சமாதானம் பேச  ஏற்பாடு செய்யும்படி இராஜாஜிக்கு தூதுவிட இராஜாஜியோ சாதுர் யமாக அதில் காந்தியாரை நுழைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பெரியாரை பஞ்சாயத்திற்கு விட்டால் அது கோயில் நுழைவில் தான் கொண்டுபோய் விடும். பெரியார் சாலை அனுமதியோடு நிறுத்த மாட்டார் என இராஜாஜி நினைத்திருக்கக் கூடும்! அந்த கிரடிட் பெரியாருக்கு கிடைத்துவிடக் கூடாது எனக் கருதியே காந்தியாரை அழைத்தார் ராஜாஜி என்றும் சொல்லப்படுகிறது!

வைக்கம் போராட்டம் தொடர்பாக மகாராணியை சந்தித்துப் பேச வேண்டி அரசு விருந்தினராக கலந்து கொள்ளும்படி காந்தியாருக்கு மகாராணி சார்பில் திவான் அழைப்பு விடுத்தார். போராட்டத்தில் பெரியார் முழு மையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்ததால் அவரோடு கலந்தாலோசித்து விட்டு மகாராணியை சந்தித்துப் பேசினார் காந்தியார். மகாராணியோ, “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கோயிலுக்குள் நுழையப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறார். கோயில் நுழைவுக் கிளர்ச்சி செய்ய மாட்டார்கள் என்றால் இப் பொழுதே சாலைகளுக்கான தடையை நீக்கி விடுகிறேன்!” என்றார்.

காந்தியார் பெரியாரிடம் இது குறித்து கேட்க பெரியாரோ, “நமது இலட்சியம் கோயில் நுழைவுதானே! தெருவிலே போவதால் என்ன ஆகும்? இந்த பேதம் ஒழியத்தானே கிளர்ச்சி செய்கிறோம். ஆனால் இப்போது நான் அதற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. மக்களை பக்குவப் படுத்திவிட்டுத்தான் செய்யவேண்டும்!” என்றார். ‘அப்படியே சொல்லி விடலாமா? என்று காந்தியார் கேட்க, ‘நன்றாக சொல்லி விடுங்கள்!’ என்றார் தந்தை பெரியார். பின் கோவில் நுழைவு இப்போது இல்லை என்று அரசிடம் தெரிவித்தார் காந்தியார். வைக்கம் சென்றபோது “வெளிநாடு சென்று திரும்பியவர்”  எனக் காரணம் காட்டி அந்த காந்தியாரையும் கர்ப்பகிரஹத்திற்கு வெளியே தான் நிறுத்தினார்கள்.

தமிழ் பிராமணர்களை கேரளாவை விட்டே விரட்ட வேண்டும்!

வைக்கம் போராட்ட வெற்றிக்கூட்டம் தந்தை பெரியார் தலைமையில் 29.11.1925 அன்று நடைபெற்றது. அதில் பேசிய மன்னத்து பத்மநாபன்..

“திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திலுள்ள நாயர்கள் எல்லாம் சத்தியாகிரகத்துக்கு அனுகூலமாய் இருந்தார்கள். மலையாள நம்பூதிரிகள் அறியாத் தனத்தினாலும், குருட்டு நம்பிக்கையாலும் சத்தியாகிரகத்தை எதிர்த்து நின்றபோதிலும் அவர்களால் அவ்வளவு கெடுதிகள் ஏற்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தங்களுடைய சோம்பேறி மடத்துச் சாப்பாடு போய் விடுமே என்று பயந்துகொண்டு வேண்டுமென்றே பல அக்கிரமங்களையும், கொடுமைகளையும் சத்தியா கிரகத்துக்கு எதிராக செய்துவந்தார்கள்.  வெட்டிச் சோற்றை தின்பதற்காக இங்கு வந்திருக்கும் ஊட்டுப்புரை தமிழ் பிராமணர்கள்தான் கொடுமை செய்கிறார்கள். அந்த தமிழ் பிராமணர்களை கேரளத்தை விட்டு தமிழ்நாட்டிற்கே ஓட்டிவிட்டால் திருவாங்கூர் ராஜ்யத்தில் ஒரு கலகமும் இருக்காது!” என்றார்.

பெரியார் தன் தலைமை உரையில், “சத்தியாகிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டும் என்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்பது தான் அந்தத் தத்துவம். இந்தத் தெருவில் நடப்பதோடு அது முடிந்து விடவில்லை. ஆகையால் தெருவில் நிரூபித்த சுதந்திரத்தைக் கோயிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை!” என்றார்.

கருத்தொருமித்த களப் போராளிகள்!

வைக்கம் போராட்டத்தில் இரண்டுமுறை கைது செய்யப்பட்டு தமிழ்நாடு திரும்பிய பெரியார் அந்த போராட்டத்தில் மீண்டும் கலந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறை புகுமுன் பெரியார் நாகம்மையாரிடம், “இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது!” என்று சொல்லி விடைபெற்றார்.

பெரியார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகம்மையார் ஒரு அறிக்கை விடுத்தார். அதில், “இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, பெரியார் என்னிடம் விடைபெற்றுச் சென்றிருக்கிறார். அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்!” என்று குறிப்பிடுகிறார்.

பொதுக் காரியத்திற்காக சிறைத் தண்டனை அனுபவிப்பது தனது பாக்கியம் என்கிறார் பெரியார்! அவர் திரும்பத் திரும்ப சிறைபுகும் அந்த பாக்கியத்தைப் பெறவும் அதற்கான ஆயுள் வளரவும் கடவுளைப் பிரார்த் திப்பதாக அறிவிக்கிறார் நாகம்மையார். அடடா! என்ன ஒரு ஒற்றுமை!! பெரியாரின் போராட்ட உணர்வையும் தொண் டுள்ளத்தையும் நன்குணர்ந்தவரல்லவா அன்னையார். அதனால் தான் அவரிடமிருந்து அப்படி ஒரு அறிக்கை! நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. பெரியார் தான் பேச நினைத்ததைத்தான் தன் இணையரும் பேச வேண்டும் என்று கருதுபவரில்லை. ஆனாலும் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார் அன்னை நாகம்மையார்.

நாகம்மையார் மறைவு குறித்து தந்தை பெரியார் விடுத்த இரங்கல் அறிக்கையோ உச்சம்!

“நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?

ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?

உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா?

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே?

என்று எழுதினார். அந்த வரிகளில் புதைந்து கிடக்கும் வலியை இப்போதும் நம்மால் உணர முடிகிறது! அதனால் தான் அந்த இரங்கல் அறிக்கை இன்றளவும் இறவா இலக்கியமாக விளங்குகிறது. கருத்தொருமித்த களப் போராளிகளாய் அவர்கள் களத்தில் போராடியது கண்டு உள்ளபடியே மனம் பூரித்துப்போகிறது. 

பெரியார் வைக்கம் வீரரா? என்று சில அநாமதேயங்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றன. வைக்கம் வரலாற்றைப் படியுங்கள். அந்த வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு துளியிலும் அவர் முகம் தெறிக்கும்!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க நாள் மார்ச்  - 30 - 2023.

No comments:

Post a Comment