மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு!

 சனாதனமே சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடூரம்!

தந்தை பெரியாரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்து கொண்ட முதல் மனித உரிமைப் போர், வைக்கம் சத்தியாகிரகம்!

மயிலாடுதுறை, மார்ச் 31 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பயணத் தின் 29 ஆம் நாளில் 55, 56 ஆம் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தமிழர் தலைவர் வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா நாளில், ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

மயிலாடுதுறையில் தமிழர் தலைவர்!

மயிலாடுதுறை சின்னக்கடை வீதி நகராட்சி அலுவலகம் முன்பு 30.03.2023 அன்று நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பாளர் வள்ளுவன், நகர தலைவர் முத்து,  குத்தாலம் ஒன்றிய தலைவர் முருகை யன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் இளங்கோவன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பாண்டியன், செம் பனார்கோவில் ஒன்றிய தலைவர் கனகலிங்கம், சீர்காழி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பின ருமான குத்தாலம் கல்யாணம் ஆகியோர் உரையாற் றினர்.

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

இந்தியாவின் முதல் மனித உரிமைப் போர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், “வர்ணாஸ்ரம தர்மம் புதிய புதிய அவதாரங்கள் எடுக்கக்கூடிய இந்நாளில், நம்முடைய மக்கள் ஏமாறக் கூடாது. விழிப்போடு இருக்க வேண்டும். ஏமாந்தால் இதுவரை பெற்ற வெற்றிகள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போய்விடும்” என்று எச்சரிக்கை விடுத்துத் தொடங்கினார். தொடர்ந்து, எம். தியாகராஜன், கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, நா.சாமிநாதன், தன்னோடு படித்த தி.மு.க. வைச் சேர்ந்த அய்யா முருகு மாணிக்கம், அருமை நண்பர் டாக்டர் சவுந்தரராஜன் - அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பல்கலைக் கழக பேராசிரியராக இருந்து அண்மையில்தான் மறைந்தார் என்று பழைய தோழர்களை நினைவு கூர்ந்து பேசிவிட்டு, “இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இன்றைக்குத்தான் இந்தியாவின் முதல் மனித உரிமைப் போர் வைக்கத்தில் தொடங்கிய நாள்!” என்றதும் மக்கள் எதிர்பாராத இன்பம் போல படபட வென்று கைகளைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

தொடர்ந்து வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை விவரித்தார். அதில் கேரளாவில் போராட்டம் முடங்கிப் போனதையும், தமிழ்நாட்டிலிருந்து மக்கள் கேரளா வுக்குப் போய் போராடியதையும், குறிப்பாக மயிலாடு துறையில் இருந்து மாயவரம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான எஸ்.ராமநாதன் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கிறார்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லிவிட்டு, 6.6.1924 இல் ‘சுதேசமித்திரன்' பத்திரிகையில் இந்த செய்தி உள்ளது என்று ஆதாரத்தையும் சேர்த்துச் சொன்னார். “இரண்டு நாளைக்கு முன்னால் கூட, மயிலாடுதுறையில் இருந்து சபரிமலைக்கு போய் விபத்தில் இறந்திருக் கிறார்கள். பக்தி அவர்களைக் காப்பாற்றவில்லை. பக்தி யாளர்களா, பகுத்தறிவாளர்களா என்பது முக்கியமில்லை. அவர்கள் மனிதர்கள் என்பதுதான் முக்கியம். 

திராவிடர் இயக்கமே ஒரு மனிதநேய இயக்கம் தான்! அதனால் தான், பெரியார் ’கடவுளை மற! மனிதனை நினை!’ என்றார், என்ற ஒரு முக்கியமான தகவலைக் குறிப்பிட்டார். தொடர்ந்து, வெளிநாட்டுக்காரர் 

தயா சின்க்கன் எழுதிய ”The Caste System in Kerala”  என்ற புத்தகத்தில் கேரளாவில் இன்னின்ன ஜாதி இவ்வளவு தூரம் நிற்கணும் என்று எழுதி இருப்பதைச் சுட்டிக்காட்டி, “சனாதனமே, சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூரில் ஜாதிக் கொடுமை தலைவிரித்து ஆடியதை'' எடுத்துரைத்தார். 

நீதிபதிகளின் நியமனங்களில் 

சமூக நீதி வேண்டும்!

மேலும் அவர், “இப்படிப்பட்ட சூழலில் 100 ஆண்டு களுக்கு முன்பு, வைக்கத்தில் கோயில் தெருவில் நடமாடக் கூடாது என்றிருந்த சனாதனக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் ஒருவருக்காக காங்கிரசில் இருந்த மாதவன் போன்றோர் போராடி சிறைப்பட்டதும், தமிழ்நாட்டிலிருந்த பெரியாருக்கு கடிதம் அனுப்பி வரவழைத்தார்கள். பெரியார் உடனே புறப்பட்டுச் சென்றார். கிடைக்கவிருந்த அரசு மரியாதையை ஏற்க மறுத்து, போராடி சிறைப்பட்டார். பெரியார் சிறையி லிருக்கும் போது, அவரது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் தலைமையேற்று போராடியிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, “இந்தியாவின் வரலாற்றில் பெண்கள் ஒரு மனித உரிமை போருக்கு தலைமையேற்று நடத்திய முதல் போர் வைக்கம் சத்தியாகிரகம்” என்று முக்கியமான வரலாற்றுக் குறிப்பைச் சொன்னதும், எதிர்பார்த்திராத மக்கள், அட! என்ற உணர்வுடன் பலமாக கைகளைத் தட்டி மகிழ்ந் தனர். காந்தியார்கூட பெரியாரை போக வேண்டாம் என்று தடுக்க முனைந்திருக்கிறார். பின்னர் கடிதம்மூலம் பெரியார் கேட்ட கேள்வியால் வேறு வழியில்லாமல் விட்டிருக்கிறார் என்றும், ஜார்ஜ் ஜோசப் கிறித்துவர் என்ற காரணமாக ஹிந்துக்களின் பிரச்சினையில் நீங்கள் தலையிடாதீர்கள் என்றும் தடுத்திருக்கிறார் என்று, காந்தியாரின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டினார். கே.பி.கேசவமேனன் என்பவர் தன் சுயசரிதையில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த கேரளாவில் உள்ள மக்களுக்காக போராடி சிறை சென்று துன்பப்பட்டதை மனம் கசிந்து எழுதியிருப்பதை நினைவுபடுத்தினார். பெரியார் சட்டத்திற்கு அடங்க மறுக்கிறார் என்பதற்காக அவரை ஒழித்துக் கட்ட ‘சத்ரு சம்ஹார யாகம்’ செய்தும் பல னில்லாமல், ராஜா இறந்ததால் விடுதலை பெற்றதையும், ஈரோடு வந்ததும் உடனடியாக பழைய பேச்சுக்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இரண் டாண்டு தண்டனை பெற்றதையும், அந்த சமயத்தில் நாகம்மையார் விடுத்த வரலாற்று பெருமை வாய்ந்த அறிக்கையை படித்தும் காட்டினார். 1924 ஆம் ஆண்டில் ‘குடிஅரசு', ‘நவசக்தி' ஆகிய இதழ்களில் வந்துள்ளதை இதற்கான ஆதாரமாகக் காட்டினார். 

நிறைவாக, ”வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் இன்னமும் ஜாதி ஒழியவில்லை. கோயிலில் பதுங்கி இருக்கிறது. அதை நிறைவேற்றி வரலாறு படைத்திருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று கூறிவிட்டு, சில நாள்களுக்கு முன்பாக அதே முதலமைச்சர், “நீதிபதி களின் நியமனங்களில் சமூக நீதி வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ”சமூக நீதியுடன் பாலியல்  நீதியும் தேவை! சமூக அநீதியாக கொடுக்கப்பட்டிருக்கின்ற 10% இட ஒதுக்கீட்டில் இருக்கின்ற உயர்ஜாதி ஏழைகளில் ஒரு பாப்பாத்தியாவது 100 நாள் வேலைத் திட்டத்தில் வரிசையில் வந்ததுண்டா?” என்று கேள்வி கேட்டு, ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு தொல்லை தரும் பி.ஜே.பி. தலைவர்களுக்கு ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர் பிருப்பதை நாளிதழ்களைப் படித்துக்காட்டி, “இதை யெல்லாம் ஏன் சொல்கிறோம்? உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற் காக” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.பி.கே. சித்தார்த்தன், வி.சி.க. மாவட்ட செயலாளர் பால.அறவாழி, சி.பி.அய். மாவட்ட செயலாளர் பி.துரை, சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் தி.மணிவாசகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.என்.குணசேகரன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, கடலூர் மாவட்ட செயலாளர் ம.எழிலேந்தி, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் பெருமாத்தூர் பழநியாண்டி, அமுதவள்ளி இராதாகிருஷ் ணன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் இரா.பொய்யாமொழி நன்றி கூறினார். 

சிதம்பரத்தில் தமிழர் தலைவர்!

மயிலாடுதுறையிலிருந்து தமிழர் தலைவரின் தலை மையிலான பயணக்குழு சிதம்பரம் வந்து சேர்ந்தது. அங்கு ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப் பட்டது.  சிதம்பரம்  போல் நாராயணன் தெருவில் நடை பெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேரா. பூ.சி.இளங் கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இணை செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தலைவர் பெரியார்தாசன், மாவட்ட அமைப் பாளர் கா.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்துரை வழங் கினார். 

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

மனித சுதந்திரத்தின் 

நூற்றாண்டு வெற்றி விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், ‘‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் நான் சிதம் பரத்தில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது” என்று தொடங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முக்கிய பிரமுகர்களை விளிக்கை யில் ஆசிரியர், 95 வயது நிறைந்த என்னுடைய அருமை நண்பர், சுயமரியாதைக்காரர் அய்யா நமச்சிவாயம், 89 வயதான புவனகிரி பழனியாண்டி, 84 வயதான வல்லம் படுகை அமுதவல்லி ராதாகிருஷ்ணன்  ஆகிய சுயமரி யாதைத் தோழர்களைப் பாராட்டினார். பிறகு, “என்னு டைய கல்லூரிகள் இரண்டு” என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படி தன்னுடைய உரையைத் தொடங்கினார். “ஒன்று தந்தை பெரியார் பல்கலைக்கழகம்! மற்றொன்று நான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகம்! ஒன்று கல்வி! மற்றொன்று பகுத்தறிவு!” என்று எடுத்த எடுப்பி லேயே பலத்த கைதட்டல்களை பெற்றார். 

தொடர்ந்து, ”இன்று முக்கிய நாள்” என்று மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ”100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் வரலாற்று சிறப்பு பெற்ற நாள்” அதே எதிர்பார்ப்பை எகிற வைத்து, “வைக்கத்தில் வைக்கத் தப்பன் கோயிலில் சுற்றுப்பாதையில் கீழ்ஜாதி மக்கள் நடக்கக் கூடாது என்பதை எதிர்த்துத் தந்தை பெரியார் போராடி வெற்றி பெற்ற நாள் இந்த நாள்!” என்றதும் பலத்த கைதட்டல்கள் எழுந்து அடங்கின. “பாராமை? நெருங்காமை? தீண்டாமை? என்றிருந்த சமூகத்தை மாற்றிக்காட்டிய நாள் இந்த நாள்” என்று தொடர்ந்ததும், கைதட்டல்களும் தொடர்ந்தன. உழைக்கும் சகோதரர் களான தீயர்கள், ஈழவர்கள், பறையர்கள் சாலையில் நடக்கும் போது மேல் ஜாதிக்காரர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ’ஊஊஊ..’ என்று ஊளையிட வேண்டும் என்ற இதுவரை வெகு மக்கள் அதிகம் தெரிந்து கொண்டிராத ஓர் அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி, ஜாதியின் கொடூரம் எத்தகையது என்பதைப் புரிய வைத்தார். ‘‘அப்படிப்பட்ட கொடுமையை எதிர்த் துப் போராடிய மனித சுதந்திர போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா நாள் இன்று!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, எப்பேர்ப்பட்ட வெற்றி இது என்பதை முழுமையாக உணர வைத்தார்.

சிதம்பரம் கோயிலுக்கும் 

தீட்சிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து, ”அவர்களிலேயே சிலருக்கு நமது நியா யங்கள் புரிந்திருக்கின்றது” என்று சொல்லிவிட்டு, “அக்ர காரத்து அதிசய மனிதர்'' என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட வா.ரா. வைப்போல், இன்று கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பெருமாள் முருகன் தான் பெரியாரைப் பற்றி எழுதிய ஒரு பாடலைப் பாடி யிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு, “நீண்டநேரம் நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான்கு நிமிடம் ஓடக்கூடிய இந்த பாடலை நீங்களும் கேளுங்கள்” என்று சொல்லச் சொல்ல, ”சிந்திக்கச் சொன்னவர் பெரியார்! தந்தை பெரியார்! சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்! தந்தை பெரியார்!” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பொதுக்கூட்டம் இசைக்கூட்டமாக மாறியது அனை வருக்குமே வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தொடர்ந்து, வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். 

‘‘பெரியாருக்கு வைக்கத்திற்கு அழைப்பு வந்தபோது, அடுத்த மாநிலத்தில் நடப்பதற்கு நாமா பொறுப்பு? என்று எண்ணாமல் பெரியார் உடனடியாக புறப்பட்டார். காரணம், திராவிடர் இயக்கம் என்பது மனிதநேய இயக்கம்!” என்று திராவிடர் கழகத்தின் உண்மையான நோக்கத்தை மக்கள் முன் எடுத்து வைத்தார். போராட் டத்தில் ஈடுபட்ட பெரியார் இரண்டு முறை சிறை சென்ற தையும், அதிலும் இரண்டாம் முறையாக கடுங்காவல் தண்டனை பெற்று கைகளில், கால்களில் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமைச்சிறையில் இருந் ததையும், இதைக் கண்டு வேதனைப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கே.பி.கேசவமேனன் தன் வாழ்க்கை வரலாற்றில் பெரியாரைப் பற்றி கசிந்துருகி எழுதியிருந்ததை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். ‘‘இப்படிப்பட்ட இயக் கத்தைத்தான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சிலர், சொந்தக்கால் இல்லாமல் மிஸ்டு காலில் நிற்கும் சிலர் திராவிடர் இயக்கத்தை அழித்து விடுவோம், ஒழித்துவிடுவோம் என்று பேசுகிறார்கள்” என்று பூடக மாக சொன்னாலும், மக்கள் சரியாகப் புரிந்து கொண்டு, ஆசிரியர் கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் பலமாக கைகளைத் தட்டினர். 

சிதம்பரம் கோயில் கீழவீதியில் பேசிக்கொண்டிருந் ததால் அது குறித்த சில தகவல்களை எடுத்து வைத்தார். “சிதம்பரம் கோயிலுக்கும். தீட்சிதர்களுக்கும் என்ன சம்பந்தம்? இது ஆகமக் கோயிலே கிடையாது! ஜாதி யைக் காப்பாற்ற கடவுளை நுழைக்கும் போதுதானே நாங்கள் எதிர்க்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் இல்லாத கடவுளோடு எங்களுக்கு என்ன பிரச்சினை? இருந்தால்தானே?” என்று கடவுள் இல்லை என்று சொன்னதையும் புரிந்துகொண்ட மக்கள், அதற்கும் பலமாக கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். மேலும் அவர், “சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம்?” என்ற புத்த கத்தை மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து இங்கேயே ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அதில் வெளியிடுவோம்!” என்று அறிவித்ததும் கைதட் டல்களுடன் ஒரு பெருத்த ஆரவாரம் எழுந்தது. 

நிறைவாக, ‘‘நாங்களும், இடதுசாரிகளும் போராடுவது எதற்கு? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு தானே? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் பிள்ளைகளும் படிக்க வேண்டாமா? நாங்கள் யாரையும் புண்படுத்துவதற்காக வரவில்லை! மாறாக பண்படுத்த வந்திருக்கிறோம்!” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அத்தோடு ஊடகவி யாளர்களை மேடையிலேயே சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு தங்கும் இடத்திற்கு தோழர்கள் புடைசூழ சென்றார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் மயிலாடுதுறை நகர தி.மு.க. செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான எம்.செல்வராஜ், திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் வீ.மோகன்,  திருவாரூர் மாவட்ட செயலாளர் கோவிந்த ராசு, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் நாகரத்தினம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment