ஆணாதிக்கத்தோடு மனு ஸ்மிருதியையும் எதிர்க்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

ஆணாதிக்கத்தோடு மனு ஸ்மிருதியையும் எதிர்க்க வேண்டும்

சென்னை, மார்ச் 9-- உலக மகளிர் தின விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  அலுவலகக்  கிளை மற்றும் சமூக வலை தளக் குழு சார்பில் நேற்று  (8.3.2023) நடைபெற்றது.  

இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “சமூகத்தில் தற்போது நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிய ஒடுக்குமுறைகள் மனித சமூகம் தோன்றிய  காலத்தில் இல்லை. குடும்பத்திற்கு பெண்கள்தான் தலைமை தாங்கியிருக்கிறார்கள். தாய்வழி சமூகம் தான் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால்தான் தாய்மாமன் என அடையாளப்படுத்தினார்கள்” என்றார்.

விவசாயத்தை கூட  பெண்கள்தான் துவக்கினார்கள். ஆனால், அது  நாளடைவில் மாறி ஆணா திக்க சமூகத்தின் சொத்தாக மாறி விட்டது என்றும் அவர் தெரிவித்தார். தனி உடைமை, சொத்து போன்ற அம்சங்கள் தோன்றிய பிறகுதான் பெண்கள், ஆண்களுக்கு அடிமை என்ற நிலை உருவானது. இந்தியாவில் வர்ணாஸ்ரமம், மநு தர்மம் தோன்றிய பிறகுதான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது என்றும் கூறினார். பிறந்தவுடன் தந்தை, பிறகு  சகோதரர், கணவன், மகன்  என காலம் முழுவதும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தி ருக்கும் நிலைதான் உள்ளது.

ஆண்களுக்கு இணையாக சங்க இலக்கியங்களில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள். பெண்கள் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாவது மட்டு மல்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள். பொதுவுடைமை சமூகம் அமைந்த இடங்களில்  ஆணுக்கு பெண் சமம்  என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டுள்ளன. சமூக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே  ஆணாதிக்கம் ஒழிந்து ஆணுக்கு பெண் சமம் என்ற  நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டார். 

டில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், சிறுமிகள் மீதான  பாலியல் வன்கொடுமைகளும், தாக்குதல் களும் அதிகரித்துள்ளன. அதற்கு காரணம், அந்தக் கட்சி கடைப்பிடிக்கக் கூடிய மனு  தர்மம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே,  ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்த்தால் போதாது, அதற்கு காரணமான மனு ஸ்மிருதியையும் சேர்த்து எதிர்க்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். 

No comments:

Post a Comment