கடவுளும் மதமும் 16.04.1949 - குடிஅரசிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

கடவுளும் மதமும் 16.04.1949 - குடிஅரசிலிருந்து...

குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)

ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படியெனில், சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி சாமி என்றும், அதைக் கைகூப்பிக் கும்பிடு என்றும் சொல்லிக்கொடுத்த பிறகே, குழந்தை சாமியைக் கும்பிட அறிகின்றது. அதுபோல, ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகு தான் அவன் மனதிற்குக் கடவுள் நினைப்புத் தோன்றியிருக்கவேண்டும்.

அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்புத் தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது - கடவுள், ஸ்வாமி அல்லா, காட் என்ற தமிழ், சமஸ்கிருதம்; அரபி, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும், குறிபிட்ட அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும், அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால், அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக்கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும், ஏதாவது ஒரு சக்தி இருந்துதானே ஆகவேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன், அல்லா, காட் என்று சொல்லப்படுகின்றது என்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனதிற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாய் இருக்கின்றது. ஆகவே, அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவையென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், பயங்கரமான மிருகங்கள் ஆகியவைகளெல்லாம் கடவுளாகக் கருதப்படுகின்றன. இவைகளெல்லாம், இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள். அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளிமலையாகவும், அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும், கருதப்பட்டதோடு, இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாளலோகம், நரகலோகம் என்றும், இப்படிப் பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும் போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவைகளைக் கடவுளென்றும், அவற்றின் இயங்குதலைக் கடவுள் சக்தி என்றும் சொல்லவேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக, முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வ சக்தி என்றும், உபாசனா சக்தி என்றும் கருதுகிறார்கள். சிறுவனாயிருக்கும் பொழுது நாமும் அப்படியே கருதியிருந்தோம். இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்று சொல்லுகின்றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திரசக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ, சொல்லாமல் இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை; ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க நம்மால் முடியவில்லை என்று சொல்லி விடுகிறோம். எனவே, ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால், அது அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சியின் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வ சக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல்நாட்டாருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய, சந்திர கிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து, சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி, அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து, அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல், அதன் காலஅளவு ஆகியவைகளைக் கண்டுபிடித்தபின், சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம். அதுபோலவே எங்கிருந்து எப்படி மழைத் தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம் மனதைவிட்டு மறையத் தொடங்கிவிட்டன.

அதுபோலவே, வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூற்று ஆராய்ச்சியும் நமக்குத் தெரியவந்த பின்பு பேதி, மாரி, அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. துப்பாக்கி, பீரங்கி முதலிய ஆயுதங்கள் கண்டுபிடித்தபின் யானை, புலி, சிங்கம் முதலிய தெய்வங்களைப் பற்றிய பயமும் மறைய ஆரம்பித்துவிட்டன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமேயானால், காரணகாரியம், ஆதாரம் முதலிய விவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயல் என்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள், மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.

ஏன் இருக்கிறது?

இப்போதும் நம் மனதிற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார் செய்யும்போது நாம் அதிசயப்பட்டாலும், அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியம் பெற்றுவிட்டோம் என்றாலும், நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும் வாழ்க்கையில் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி சிறிது காலம் வரை இருந்தே தீரவேண்டியதாயும் இருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும், ஈடு செய்யமுடியாத நஷ்டமடைந்தவனுக்கும் கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும், திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்குக் காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்யமுடியாத இடத்திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு தான் திருப்தி அடைகின்றார்கள்.

அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித்தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள், எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும், தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதித் திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். 

எனவே சாதாரண மக்களின் கடவுளுக்கும், சற்று அறிவுடைய மக்களின் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்களின் கடவுளுக்கும், பக்கு வமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் வித்தி யாசங்களுண்டு. ஒருவருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள் மீது சுமத்தும் பொறுப் பிலும் வித்தியாசங்களுண்டு.

No comments:

Post a Comment