மதுரை, மார்ச் -5 கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.3.2023) திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள நதிகளில் மிகவும் பழைமையானது வைகை. இதன் நதிக் கரைகளில் ஒன்றிய தொல்லியல் துறையின் துணைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் வைகை ஆற்றின் இருபுறமும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மக்கள் வாழ்ந்த தற்கான அடையாளம் இருந்த 100 இடங்கள் அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் ஒன்றிய தொல்லியல் துறையினர் அகழாய்வைத் தொடங்கினர்.
7,818 தொல் பொருள்கள்
கடந்த 2014 முதல் 2017ஆ-ம் ஆண்டு வரை கீழடியில் ஒன்றிய தொல்லியல் துறை 3 கட்டங் களாக மேற்கொண்ட அகழாய் வில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு அங்கு சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட் டன. அதன்பின் தமிழ்நாடு தொல்லியல் துறை 4, 5ஆ-ம் கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்டது. இதில் 6,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன.
செங்கல் கட்டுமானங்கள்
இதன்மூலம் கீழடியில் 2,600 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் நிலவியது தெரிய வந்தது. மேலும், கங்கை சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சம காலமானது என்பதும் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, கீழடி மற்றும் அதைச் சுற்றிய மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், மூடிய வடிகால், சுருள் வடிவ சுடுமண் குழாய், உறை கிணறு, பானை ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், இரும்புப் பொருட் கள், வெள்ளிக் காசுகள், எடைக் கற்கள், சக்கரம், முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஒரு தொழில் நகரமாகவும்...
இதுதவிர கீழடி அகழாய்வில் 1,500-க்கும் மேற்பட்ட குறியீடு களும், 60-க்கும் மேலான 'தமிழி' எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவை, 6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றுகளாகும். இது தவிர ரோம் நாடு, குஜராத், கங்கை சமவெளி உட்பட பல்வேறு பகுதிகளுடன் வாணிபத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக கீழடியில் கிடைத்த பொருட்கள், கட்டமைப்புகளை வைத்து, இது ஒரு தொழில் நகரமாகவும் இருந்திருக்கலாம் எனவும் அறிய முடிகிறது. இவ்வாறு பழங்கால தமிழ்ச் சமூகம் கிமு 6-ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கள அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
6 காட்சிக்கூடங்கள்
அதன்படி 2 ஏக்கர் பரப்பில் (31 ஆயிரம் சதுரடி) ரூ.18.8 கோடி நிதியில் தமிழ்நாடு மரபுசார் கட்டடக்கலையின்படி கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் 6 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
‘மதுரையும் கீழடியும்’ என்ற முதல் காட்சிக் கூடத்தில் பழங்காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள், மதுரையின் பழைமை, கீழடி அகழாய்வு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் 15 நிமிட ஒலி ஒளிக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை
இரண்டாம் காட்சிக் கூடத்தில், வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 3-ஆம் காட்சிக் கூடத்தில் தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான பானை ஓடுகள், மண்பாண்ட தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், 4-ஆம் கூடத்தில் இரும்பு, நெசவு, கைவினைத் தொழில்கள் நடந்ததற்கான சான்றுகளும், 5-ஆம் கூடத்தில் கடல் வணிகம் செய்த சான்றுகளும் வைக்கப்பட்டுள்ளன. 6-ஆம் கூடத்தில் பொழுது போக்கு, வாழ்வியல் சார்ந்த கலைகள் மற்றும் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
கடல் வழி வணிகம், எழுத்தறிவு
இத்தகைய சிறப்புமிக்க கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.3.2023) திறந்து வைக் கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென் னரசு, கே.ஆர்.பெரிய கருப்பன், சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன ரெட்டி மற்றும் தொல்லியல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர அருங்காட்சியகத்தில் வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள் ளும் வசதி உருவாக்கப்பட் டுள்ளது. வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல், கடல்வழி வணிகம், எழுத்தறிவு போன்ற மேம்பட்ட தமிழ் சமூகம் குறித்து விளக்கும் 2 நிமிட காட்சிப் பதிவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை தத்ரூபமாக அறி யும் வகையில் சிறப்பு மெய்நிகர் காட்சிக்கூடமும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. அதேபோல், சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக் கல்லின் மாதிரி, சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. கடல்சார் வணிகத்தை பிரதிபலிக்கும் சங்ககால கப்பல், அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், செங்கற் கட்டுமானங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொடு திரையில்...
குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான தொல் பொருட்களை முப்பரிமாண வடிவில் காணும் வசதியும் உள் ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை தொடுதிரையில் எழுதினால் தமிழ் எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவகம் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தமாக கீழடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கள அருங்காட்சியகம், வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றாக மட்டுமின்றி தமிழர்கள் பண்பாட்டின் தொன்மையை உலகுக்கு பறை சாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment