'தினமலர்', 8.2.2023, பக்கம் 8
தாழ்த்தப்பட்டவர் களுக்கு அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுதான். 'தினமலர்'கள் தூக்கிப் பிடிக்கும் ஜாதியும், தீண்டாமையும் என்பது அவர்கள் கூறும் ஹிந்துத்துவாதானே!
அதனை எதிர்த்துத் தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிதான் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஹிந்து மதத்தின் ஜாதியை, அதன் ஆணிவேரை வீழ்த்துவது எளிதல்ல; அதேநேரத்தில், மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
சேரன்மாதேவி, வைக்கம் போராட்டங்களை காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கி, கடும் விலை கொடுத்து வைக்கம் வீரராக வெளிவந்தார்.
ஈரோடு நகராட்சித் தலைவராக தந்தை பெரியார் இருந்தபோது கொங்குபறைத் தெரு என்பதை வள்ளுவர் தெரு என்று மாற்றினார்.
ஆனால், 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று கூறும் சங்கராச்சாரியார்களை மகான் என்றும், மகா பெரியவாள் என்றும் இன்றுவரை தூக்கிப் பிடிக்கும் 'தினமலர்'க் கும்பல் ஏதோ திராவிட இயக்கம் தீண்டாமையை ஆதரிப்பதுபோல, கண்டுகொள்ளாததுபோல பம்மாத்துப் பண்ணுவது வெட்கக் கேட்டுக்குப் பிறந்த வெட்கக்கேடு அல்லாமல் வேறு என்னவாம்?
சங்கரமடத்துக்கு சுப்பிரமணியசாமி சென்றால், சரிநிகர் சமானமாக சங்கராச்சாரியார் பக்கத்தில் ஆசனம் போட்டு உட்காருகிறார். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சென்றால், கீழே தரையில் உட்கார வைக்கப்படுகிறார்.
இதைப்பற்றி எல்லாம் தினமலரோ, குருமூர்த்திகளோ, சங் பரிவார்களோ வாய்த் திறப்பது உண்டா?
அதேநேரத்தில் பெண் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்குத் 'திராவிட மாடல்' அரசு நிதி உதவி செய்தால், வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வானேன்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவானேன்?
பெண்கள் திரண்டெழுந்துதான் பாடம் கற்பிக்கவேண்டும்!
- மயிலாடன்