சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி!

எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலையில் 

அவர்கள் தீவிரம் காட்டுவதாகக் கேள்வி கேட்கிறீர்களே!

சென்னை, ஜன.23 ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி - எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலை யில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகக் கேள்வி கேட்கிறீர்களே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

 பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த 

ஓர் இடைத்தேர்தல்

அடுத்த மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் என்பது பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடைத்தேர்தலாகும்.

இந்தியாவே எதிர்பார்க்கக்கூடிய முடிவு வரும்.

'திராவிட மாடல்' ஆட்சி எவ்வளவு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை இந்த இடைத்தேர்தல் உலகத்திற்கே எடுத்துக்காட்டக் கூடிய அளவிற்கு, அதனுடைய முடிவு சிறப்பாக இருக்கும்.

ஏற்கெனவே அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற திருமகன் ஈவெரா அவர்கள் செய்த பணி, மிக ஆழமான பணி. எல்லா மக்களையும் தழுவிய - அனைவருக்கும் அனைத்தும் தந்த பணி! அந்தப் பணி தொடரவும், அதேநேரத்தில், மதச்சார்பின்மை, ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

ஒரு நல்ல சிறப்பான முயற்சி

அந்த வகையில், சரியான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தகுந்தது. எல்லோருக்கும் அறிமுகமான பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவர் நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். நிரம்ப, பழுத்த அரசியல் அனுபவம் உள்ள வர். அவருக்கு ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம், வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே, பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பது ஒரு நல்ல சிறப்பான முயற்சி.

மற்ற கட்சியினர், முடிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இப்பொழுது வெற்றி பெறவேண்டியது அவசியம் என்பதைவிட, யார் மக்களுக்கு உண்மை யாகத் தொண்டாற்றக் கூடிய இயக்கத்தவர் என்று புரியும்.

ஈரோட்டு மக்கள் நன்றாக உணருவார்கள்

அதேநேரத்தில், அரசியலில் எதிர்க்கட்சியாக இருக் கக்கூடியவர் யார் என்பதை அவர்களுக்குள்ளே இன்னமும் முடிவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கக் கூடிய சூழலில், அப்படிப்பட்டவர்கள் சட்ட மன்றத்திற்கு அழைக்கப்பட்டால், என்ன சூழ்நிலை உருவாகும் என்பதைத் தெளிவாக ஈரோட்டு மக்கள் நன்றாக உணருவார்கள்.

எனவேதான், ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி என்பது, அந்தத் தொகுதியினுடைய வெற்றி மட்டுமல்ல - தமிழ்நாட்டினுடைய தெளிவற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான அரசியலை மீண்டும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு இடைத்தேர்தலாகும். எனவே, இந்த இடைத்தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், நிச்சயமாக காங்கிரசின் வெற்றி சிறப்பாக இருக்கும்.

செய்தியாளர்: எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றார்களே - இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு?

தமிழர் தலைவர்: எது எதிர்க்கட்சி என்பது முதலில் முடிவாகட்டும்; பிறகு தீவிரம் காட்டட்டும்.

எதிர்க்கட்சி எது என்றே அவர்களுக்குள் இன்னும் முடிவாகவில்லை. அதை முடிவு செய்யட்டும்; அதற்குள் தேர்தலும் முடிந்துவிடும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment