காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு

 மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் என்பவர் வாக்கி டாக்கியில் "ஜெய் பீம், குட்மார்னிங், ஜீசாகேப்" என்று சொல்லக்கூடாது, இனிமேல் "ஜெய் சிறீராம், ஜெய் பைரவ், ஜெய் மகாகாள்" என்று மட்டுமே கூற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்களுள் ஒன்று மகாகாள், கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்று இந்த மாவட்டத்தில் தலைமைக் காவல் ஆணையராக பொறுப்பேற்றவர் மனோஜ் குமார் சிங்.

தீவிர பைரவ பக்தரான இவர் காவல்துறை சீருடையிலேயே லாக்டவுன் காலத்தில் கோவிலின் முன்பு தாண்டவம் (பக்தியில் ஆடுதல்) செய்தார். மேலும் கோவிலுக்கு முன்பு சாலைக்கு மத்தியில் சீருடையோடு விழுந்து வணங்குவார். அந்தக் கடவுளின் மீது எல்லையில்லா பக்தி வைத்துள்ளதாக முன்பே நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

 இந்த நிலையில்  காவல்துறை அதிகாரிகளிடம் இவர் பேசும் போது வாக்கி டாக்கியில் 'ஜெய் பீம்' என்றும், 'குட்மார்னிங், ஜி சாஹேப்' என்று எல்லாம் யாரையும் கூப்பிட அனுமதிக்காதீர்கள்.  இனிமேல் 'ஜெய் சிறீராம்', 'ஜெய் மகாகாள்', 'ஜெய் பைரவா' என்றே கூப்பிட வலியுறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட உயரதிகாரிகளில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு ஆணையரின் இந்த உத்தரவு குறித்து தகவல் தெரிவிக்க, அவர்களும் உடனே அதை அச்சில் ஏற்றி விட்டனர்.  இதனைத் தொடர்ந்து மாநில காவல் தலைமை இயக்குநர் அவரிடம் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

 இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனோஜ் குமார் சிங் "நாளிதழில் வந்த செய்தி உண்மையானது அல்ல, நான் கலாச்சாரத்தைப் பின்பற்ற பொதுவாக நட்பு ரீதியில் பேசி இருக்கலாம்,  ஆனால் இப்படி உத்தரவு இட்டதாக எனக்கு நினைவில்லை. நான் பாபாசாகேப் அம்பேத்கரை மதிக்கிறேன்" என்று கூறினார். 

மேலும் "நான் கடவுள் பக்தி உள்ளவன் அதே நேரத்தில் பணியின் போது கோவிலுக்குச்சென்று கும்பிட நேரம் இல்லை. ஆகவே வெளியிலேயே முறைப்படி வணங்கிச்செல்கிறேன், மேலும் நான் அந்தக்கடவுளிடம் எதுவுமே கேட்பதில்லை. எனக்கு என்ன தேவையோ அது எல்லாமே அந்தக்கடவுள் தருகிறார்.   நான் பொதுவாகப் பேசியதை எல்லாம் பிரச்சினைக்குரியதாக ஆக்கி எனது பணிக்கு இடையூறு ஏற்படுத்தவேண்டாம், ஆகவே இனி இதோடு விட்டுவிடுவோம், ஊடகத்தினர் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள். காவல்துறை என்றுமே ஊடகத்துறையினரோடு துணை நிற்கும்" என்றும் கூறியுள்ளார்.

இந்தக் காவல் துறைக் கண்காணிப்பாளர் கூறுவதிலிருந்தே, அவரின் மனப்போக்கு எத்தகையது என்பது பச்சையாக வெளியாகி விட்டது. ஒரு காவல்துறை அதிகாரி விளையாட்டாகவும், பொதுவாக நட்பு ரீதியாகவும் பேசுவது என்று இதனை  எடுத்துக் கொள்ள முடியுமா?

அப்படி எல்லாம் நடந்து கொள்வது அலுவலக நடைமுறைக்கு உகந்ததா? எதிரானது அல்லவா? சீருடையில் இருந்து கொண்டு கோயிலுக்கு முன்னால் குட்டிக் கரணம் அடிப்பது எல்லாம் ஆரோக்கியமானது தானா? (படம்: இதே பக்கத்தில் பார்க்கவும்). 

ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் இந்த ஆபாச அநாகரிகங்கள் நிர்வாணமாக தலை விரித்து ஆடுகின்றன. அசல் வெட்கக் கேடு!


No comments:

Post a Comment