பெரியார் விட்டுச் சென்றதை காப்பாற்றும் திறன் உடையவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

பெரியார் விட்டுச் சென்றதை காப்பாற்றும் திறன் உடையவர்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்

"ஒரே பதில் - வீரமணியார்! 

வீரமணியார்!! வீரமணியார்!!!"

இந்த இயக்கத்தை சுலபமாக யாரும் வளர்த்து விடவில்லை. இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஏதோ சொன்னோம், எழுதினோம், பேசி னோம் என்ற அளவோடு யாரும் இருந்து விடவில்லை. அடிகள் பட்டிருக் கிறோம், தாக்குண்டிருக்கிறோம், காயப்பட்டிருக்கிறோம், கல்லடி பட்டிருக்கிறோம், இன்னும் சொல்லப் போனால் நாம் கண்ணெனப் போற்றிப் பாராட்டுகின்ற தந்தை பெரியார் அவர்கள் மீது சில காலிகள் கடலூரிலே செருப்பையே வீசினார்கள். அந்தச் செருப்பை எடுத்து தந்தை பெரியார் அவர்கள், இன்னொரு செருப்பையும் தேடிப் பாருங்கள், கிடைத்தால் இரண்டையும் சேர்த்து. மாட்டிக் கொள்ளலாம் என்று சொல்கின்ற அளவிற்கு தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார்கள். ஜாதி வெறியர்களை அடையாளம் காட்டினார்கள்.

இப்படியெல்லாம் இந்த இயக்கத்தை நாங்கள் வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட இந்தப் பேரியக்கம் இன்றைக்கும் மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால், பெரியார் இல்லாவிட்டாலும் என்னுடைய இளவல் வீரமணியைப் போன்றவர்கள் (கைதட்டல்) இருக்கின்ற காரணத்தினாலேதான். பெரியார் விட்டுச் சென்ற எந்த உடைமை களையும், கொள்கை உள்பட எதையும் காப்பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் - வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்!

- "விடுதலை" - 26.8.2012

***

மகிழ்கின்றேன்!

திருச்சியிலே, ஈரோடு நகரத்திலே, வல்லத்திலே இப்படியெல்லாம் பல இடங் களில் மாணவர்களைப் பயிற்றுவித்து, அவர்களை யெல்லாம் எதிர்கால தமிழகத் தினுடைய ஒளி விளக்குகளாக ஆக்குவதற்கு அவர் அரும் பாடுபடுவதையும், அதற்கு அவர் வகுத்துள்ள ஏற்பாடு களைக் கண்டும் வியந்து போயிருக்கின்றேன். திருச்சியிலே பேசும் போது, ஒரு நிகழ்ச்சியிலே குறிப்பிட்டேன். நான் காலையிலே இருந்து இளவல் வீரமணி அவர்களுடைய நேர்த்தியான இந்த அறப்பணிகளையெல்லாம் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். இவைகளையெல்லாம் காணும்போது, பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை யார் வளர்ப்பார்கள்? யார் வலிமையோடு இந்த இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள்? என்று இருந்த அச்சம் நீங்குகின்ற  அளவிற்கு அதற்கு  ஒரு வழித்தோன்றல் கிடைத்து விட்டார், அவர்தான் வீரமணி என்று நான் அன்றைக்கு புகழாரம் சூட்டினேன். அப்படிப்பட்ட அற்புதமான நிர்வாகத் திறனும், நேர்மைத் திறனும் கொண்டவர் வீரமணி அவர்கள்.

நான் ஏன் அவைகளையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால், பெரியா ருக்குப் பிறகு, அவர் வைத்துவிட்டுப் போன சொத்துகள் எல்லாம்; இப்படிப் பட்ட அறக்கட்டளைகள் எல்லாம் என்ன ஆகுமோ? என்று இருந்த கேள்விக் குறிக்கு ஒரே பதில் ``ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஒளிமிகுந்த முகத்தைக் காட்டியவர் தான் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் ஆவார்கள்! அவர்களைப் பெற்றிருக்கின்ற இந்த இயக்கத்திற்கு  திராவிட இயக்கத்திற்கு எந்த அழிவும் எப்போதும் நேர்வதற்கு இடமில்லை. அவரை தமிழகத்திலே மாத்திரமல்ல. 

நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்றிருந்த பொழுது டில்லியிலே  “பெரியார் மாளிகை” ஒன்று திறக்கப்பட வேண்டும், ஏற்கெனவே ஒரு பகுதி திறக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் இன்னொரு பகுதியை திறக்க வேண்டும் என்று சொன்னபோது, அதைக் காண வேண்டும் என்று ஆதங்கத்தோடு நான் உடனடியாக டில்லிக்குச் சென்றேன். டில்லியிலே அவர் கட்டி யிருக்கின்ற அந்த மாளிகை,  அந்த வட்டாரத்திலே உள்ள பெரியவர்கள் எல்லாம், வித்தகர்கள் எல்லாம், அங்கே இருக்கின்ற பொதுநலத்திலே அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எந்தளவிற்கு வந்து பார்த்து மகிழ்கிறார்கள் என்பதை எல்லாம் காணும்போது நான் பெருமை பெற்றேன். நானே இந்தக் காரியங்களை பெரியாருக்குப் பிள்ளையாக  இருந்து செய்ய வேண்டுமென்று ஆணை யிடப்பட்டிருந்தால், என்னால் செய்திருக்க முடியாது. என்னையும் வெல்லக் கூடிய அளவிற்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நானே மூக்கில் விரல் வைக்கின்ற அளவிற்கு மிக அற்புதமான அறப்பணிகளை தந்தை பெரியார் அவர்களின் பெயரால், அன்னை மணியம்மை அவர்களின் பெயரால் ஆங்காங்கு  ஆக்கியிருக்கிறார். அங்கிங் கெனாதபடி எங்கெங்கும் வீரமணி அவர்களுடைய ஆற்றல் பளிச்சிடுவதை, ஒளிவிடுவதை, பிரகாசித்துக் கொண்டிருப்பதை  நான் காணுகின்றேன். அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் இன்றைக்கு எதிர் காலத்தைப்  பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர் அதற்கான ஏற்பாடுகளையும் திறம்படச் செய்திருக்கிறார் என்பதை நான் அறிந்து மகிழ்கின்றேன். 


கேடயம்

திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விட வேண்டுமென்று  எதிரிகள்  இன்றைக்கு முற்படு வார்களேயானால்,  அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய  கேடயமாக திராவிடர் கழகம்,  தளபதி வீரமணி அவர்களுடைய தலைமையிலே இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது  (கைதட்டல்). ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டுமென்று விரும்பு கின்றவர்கள்  ஜாக்கிரதை  என்று தான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

- "விடுதலை" - 3.12.2012


No comments:

Post a Comment