பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,  சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

காசி தமிழ் சங்கம் கூட்டம் இல்லை, காசி தமிழ் சங்கிகள் கூட்டம்!

நா.கமல்குமார்

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

நாம் எல்லாரும் ஒரு மாத இடைவெளியில் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்திருப்பதாக நினைத்த காசி தமிழ் சங்கமம், ஒரு மாதம் நடந்திருக்கிறது. இந்த செய்தியே மிக ஆச்சரியமான ஒன்று. எப்படி இவ் வளவு இரகசியமாக ஒரு நிகழ்ச்சியை முடிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பயிற்சி பெற்றவர்கள்தானே அவர்கள், அவர்களுக்கு எதையும் வெளிப்படையாக செய்து பழக்கமே இல்லை அதுபோல்தான் இதையும் நடத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு ஒரு விழா, தமிழ்நாடு அரசுக்கும் அதில் அழைப்பில்லை, தமிழறிஞர்களுக் கும் அதில் அழைப்பு இல்லை.

ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதில், ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்பார்கள். நாம் பா.ஜ.க.காரர் களிடம் கேட்பது அய்யா ஏதாவது நிறை இருந்தால் சொல்லுங்கள் என்றுதான். ஏன் என்றால் நிலை அப்படித்தான் இருக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அய்யோ அதுவே பெரிய நகைச்சுவை. தமிழ்த்தாய் வாழ்த்தை தங்கள் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட மறுத்து, இது எங்களின் மரபு இல்லை என்று கூறிய சென்னை அய்.அய்.டி.யும், தமிழ் இருக்கையை செயல்படாமல் வைத்திருந்த காசி பல்கலைக்கழகமும்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

தமிழ் சமூகத்தில் தமிழ் அறிஞர்கள் என்று அனை வரும் ஏற்றுக்கொண்ட ஒருவர்கூட அங்கு இல்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு அண்ணா மலையும், எச்.ராஜா, பொன்.இராதாகிருஷ்ணன் மற் றும் ஆர்.என்.ரவியும்தான் தமிழறிஞர்கள். இளைய ராஜாவின் முதல் பாடல் ஜனனி, ஜனனி பாடல், அடுத்த பாடல் ஹரஹரஹரஹர மாகாதேவ். இது காசி தமிழ் சங்கமமாம்!, தமிழின் பெருமை பற்றி பாடலோ, பேச்சோ அவர் நிகழ்ச்சியில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களையாவது அழைத்திருக்கலாம். பொன்னாடை, பயனாடை, துண்டு இப்படி பல வார்த்தைகள் தமிழில் இருந்தும் அவர் பயன்படுத்திய சொல் அங்கவஸ்திரம். இந்த நிலையில்தான் எல்லா மும் அங்கு இருந்தன.

இதற்கெல்லாம் மேல் அங்கு இருந்த அறிவிப்புப் பலகைகளில்கூட தமிழ் சரியாக இல்லை. அதில் ஒரு எழுத்துக் கூட சரியாக இல்லை என்பதே உண்மை. அங்கு தண்ணீர் பாட்டில்கள் கொடுத்தார்கள். அதில் தண்ணீர் என்றோ நீர் என்றோ எழுதவில்லை, பாணி என ஹிந்தி வார்த்தையைத் தமிழில் எழுதியிருந்தனர்.

இதற்குப் பின்னால் ஓர் உளவியல் காரணமும் உண்டு. ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தண்ணீர் என்று கேட்டு கிடைக்காத பொருள், பாணி என்று கேட்டவுடன் கிடைத்தால் உங்கள் சிந்தனையில் சிறிய மாற்றம் உருவாகும். எளியவர்கள் "ஓ இதுதான் நாட்டின் நிலை போல, ஹிந்தி முக்கியம்தான் போல என எண்ணத் தொடங்கிவிடுவார்கள்" பின் அதை அவர்கள் பயணத்தை பற்றிக் கூறும்போதெல்லாம், அந்த நிகழ்வை கூறுவார்கள். அதுவே மறைமுக பிரச்சாரமாக மாறும். இது சாத்தியமா என்றால் ஒரு கேள்வி உங்களுக்கு - சமூக ஊடகங்களில் பிறருடன் தொடர்பு கொள்ள தமிழ் எளிமையானதாக இருக் கிறதா அல்லது தங்லீஸ் எளிமையானதாக இருக்கிறதா. கைபேசி வந்த புதிதில் தமிழ் இல்லை, அதனால் இரண் டையும் கலந்து நாம் தொடர்புகொள்ள பயன்படுத்திக் கொண்டோம். ஆனால் அது இன்னமும் தொடர்கிறதே.

இந்த ஒரு மாத நிகழ்வில் விளையாட்டுப் போட்டி களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமாக நடை பெற்றது, "தமிழர்களின் மிகப் பழைமையான விளை யாட்டுகளான..." என்று சொல்லத்தான் ஆசை ஆனால் அவர்கள் விளையாடியது கிரிக்கெட்டும், டேபிள் டென்னிசும்தான்.

பாரதிக்கும், காசிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பிரதமர் சொல்கிறார். காசிக்கு வந்த பின்னர்தான் அவருக்கு தேசம், விடுதலை, போராட்ட நோக்கம் வந்ததாம். அது என்னவோ உண்மைதான், ஏனென் றால் பார்ப்பனராய் இருந்த பாரதியையே பாடாய் படுத்திய ஊர் காசி.

"காசியில் அந்தணருக்கேற்ற ஆச்சாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும், காலில் பூட்ஸும் அணிந்திருந்தும் அலைந்தார்... இத்தனை அநாசாரத்தோடு அந்தணருக்கு அத்யாவசியமான குடுமியை - சிகையை - எடுத்துவிட்டு வங்காளி போல கிராப் செய்து கொண்டு வகிடு எடுத்து வாரி விட்டு, மீசையையும் வைத்துக் கொண்டு காட்சி அளித்தார். இதனால் வீட்டில் சில காலம் தனியாக உட்கார வைத்து சாப்பாடு போட்டு வந்தார்கள்" இதை எல்லாம் அறிந்து பயந்து போய், பாரதிக்கு செல்லம்மாள் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் கடிதம் எழுதிய பாரதி, 'நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வா' என்று எழுதினார் என்று செல் லம்மாள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவருக்கு காசி கொடுத்த அனுபவம். சமஸ்கிருதம், ஹிந்தி கற்றதுக்கு பின் இன்னொன்றும் பாரதி சொன்னார், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று.

ஒன்றியத்தின் நிதியமைச்சர் மாண்புமிகு. நிர்மலா சீதாராமன் பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி தமிழ் என்றார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சிவனின் வாயிலிருந்து வந்த மொழி தமிழ் என்று கூறுகிறார்.

பிரதமர் தமிழ் மொழி மிகப்பழைமையானது, அதை காக்க வேண்டும் என வழக்கமாக செயலுக்கும், சொல்லுக்கும் தொடர்பில்லாதது போலவே செயல் பட்டிருக்கிறார். அதில் தமிழைப் புறக்கணிப்பது தேசத்திற்கு செய்யும் பெரும் அவமதிப்பு என்றும் கூறியுள்ளார் அப்போது, அவர் முன்பு யாரும் கண்ணாடியை காட்டியிருப்பார்கள் போல.

இவர்கள் அனைவருக்கும் சில கேள்விகள். உத் தரப் பிரதேசம், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க 32 ஆண்டுகளாக போராடி வருகிறார்களே அங்கிருக்கும் தமிழ் ஆர்வலர்கள், அதற்கு ஏன் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை? திருவள்ளு வர் சிலை வைக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகியின் உத்தரவு அவசியம் என்று கூறி ஆணை யம் தடை விதித்துள்ளதே - அதன் பின்னணி என்ன? கடந்த 6 ஆண்டுகளாக முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், தமிழ் ஆர்வலர்களை சந்திக்க மறுக்கிறாரே - இந்த வன்மம் ஏன்? தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஆற்றிய பங்கு என்ன? ஒதுக்கிய நிதி என்ன, தமிழ் வரலாற்றை மூடிமறைக்கும் சதி அல்லவா! இத்தனைக் காலம் நடந்துகொண்டு வருகிறது. இதனால்தான் அவர்கள் பேசுவதற்கும், செயலுக்கும் தொடர்பில்லை என்று கூறுகிறோம்.

இவர்களுக்கு அன்றே திருவள்ளுவர் ஒரு குறள் எழுதிவைத்துவிட்டார். "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்".

இந்த காசி சங்கம விழா முழுக்க, முழுக்க நடந்தது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத்தான். இதை வைத்தே பாஜக பிரச்சாரம் செய்யும். இங்குள்ள சிலர் இதை காசியில் நடத்துவதால் என்ன தேர்தல் ஆதாயம் வரும் என்று கூறுகின்றனர். இப்படி கூறி ஆதாயம் தேடுவதற்காகத்தான் அது நடந்துள்ளது.

அவர்களெல்லாம் ஆன்மீகவாதிகள், குறைந்த பட்சம் ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும் உள்ள தொடர் பையாவது சரியாகக் கூறினார்களா, சைவ நூல்களை மட்டுமே கூறி முழுக்க, முழுக்க அவர்களின் ஆதாயத் திற்கு அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். சமண, வைணவ நூல்களை அறவே நீக்கியதின் காரணம் என்ன? அதை காசியில் நின்று கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. (அவர்கள் என்ன பெரியாரா வைக்கத்தில் நின்று கடவுள் இல்லை என்று கூறியதுபோல உண்மைகளை நெஞ்சுரத்துடன் பேச)

நாடாளுமன்ற அலுவல் மொழி குறித்து ஆராய அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது. அனைத் தும் ஹிந்தி, ஹிந்தியைத் தவிர வேறில்லை என்று! இவர்கள் தான் காசியில் தமிழ்ச் சங்கமம் கூட்டு கிறார்கள்

சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643 கோடி. தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 23 கோடி ரூபாய்க்கு 6 லட்சம் குறைவு! இவர்கள் தான் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள்!

ஆக இது காசி தமிழ் சங்கம கூட்டமாகவும் நடக்கவில்லை, தமிழ் ஆன்மீக சங்கம கூட்டமாகவும் நடைபெறவில்லை. மொத்தத்தில் இது காசி தமிழ் சங்கி கூட்டமாகத்தான் நடந்துள்ளது. முழுக்க, முழுக்க பாஜகவின் கட்சிக் கூட்டத்தை அரசு பணத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் அங்கு தமிழும் இல்லை, தமிழறிஞர்களும் இல்லை...

பெரியார், "ஒருவன் திடீரென நல்லவன்போல் செயல்களை செய்கிறான் என்றால் உடனே நம்பாதே, அதில் அவனுக்கான ஆதாயம் இருக்கும், அதனால் அவன் இதுவரை செய்தவற்றை எடுத்துப்பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். காலங்காலமாக தமிழை நீஷ பாஷை என்றவர்கள், இந்த நொடி வரை தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாதவர்கள் திடீரென தமிழை தூக்கிப் பிடிக்க என்ன காரணமாக இருக்கும்? 

வேறென்ன 2024 நாடாளுமன்ற தேர்தல்தான்.

No comments:

Post a Comment