Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பதிலடிப் பக்கம்
November 28, 2022 • Viduthalai

சாவர்க்கர் யார்? - 'ஆனந்த விகடன்' படப்பிடிப்பு

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)


சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் ஏதோ குற்றம் சொல்லி விட்டாராம். அவர்மீது வழக்காம் - இதோ ‘ஆனந்த விகடன்' (18.10.2021) சாவர்க்கரைப் பற்றி எழுதிய விரிவான கட்டுரையைப் படியுங்கள்:

25.11.2022 பதிலடி பக்கத்தின் தொடர்ச்சி...

அடுத்து, ஜனவரி 20ஆம் தேதி, காந்தியைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது, மதன்லால் பஹ்வா. `விஷ்ணு கர்கரேவால் சாவர்க் கரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் அவன்’ என்பது, சாவர்க்கரின் உதவியாளர்களான ராமச்சந்திர காசரும் விஷ்ணு தம்லேவும் அளித்த வாக்குமூலம். ஆனால், அந்த முயற்சி தப்புகிறது. பஹ்வா கைது செய்யப்படுகிறான். ஜனவரி 30ஆம் தேதி காந்தியார் கொல்லப்படுகிறார். கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் அதைச் செய்கின்றன.

பாட்ஜேவை `நம்பகமான சாட்சி (Trustful Witness)’’ என்றே வரையறுக்கிறார், விசாரணை நீதி மன்றத்தின் நீதிபதி ஆத்ம சரண். ஆனால், அவரது சாட்சியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், கிடைக்காமல் போகின்றன. இதன் அடிப்படையிலேயே, சாவர்க்கர் விடுவிக்கப்படுகிறார்.

உண்மையில், கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த உறவு குரு - சிஷ்யன் வகையிலானது. ஹிந்து மகாசபா கூட்டங்களுக்கு, கோட்சேவையும் ஆப் தேவையும் அழைத்துச் செல்வதில், அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார் சாவர்க்கர். ஆனால், காந்தியார் கொலைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது. காரணம், சாவர்க்கரின் சந்தர்ப்பவாத வாக்குமூலம்!

கோபால் கோட்சேவின் வழக்குரைஞர் இனாம்தார், நாதுராமின் அப்போதைய மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார். `நாதுராம் சிறையில் தனிமைப்பட்டுக் கிடந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டது அவரது கையை அன் பாகத் தொட்டு உரையாடக்கூடிய அவரது குருவின் சொல். ஆனால், அது நடக்கவில்லை. அந்த வருத் தத்தை சிறையில் என்னைச் சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார் நாதுராம்’ என்கிறார் அவர்.

தண்டனைக்குப் பயந்து தற்கொலை

1964, அக்டோபரில் கோபால் கோட்சே விடுதலை யானார். அடுத்த மாதமே, அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடக்கிறது. அதில், `காந்தியாரைக் கொல்வதன் அனுகூலங்களை எனக்கு விளக்கினான் நாதுராம்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. விவகாரம் மீண்டும் வெடிக்கிறது. நீதிபதி ஜேஎல் காபூர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தியார் கொலை மறு விசாரணை செய்யப்படுகிறது. இது நடந்தது 1965 மார்ச் மாதம்.

அடுத்த வருடம், பிப்ரவரி மாதம் சாவர்க்கர் இறக் கிறார். உணவையும் தண்ணீரையும் மறுத்து வலுக் கட்டாயமாக அவர் அந்த மரணத்தைத் தேடிக் கொள் கிறார். அவர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம், காபூர் கமிட்டியால் அவர் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டிருந்தார் என்பது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காபூர் கண்டிப்பாக சாவர்க்கர் கையில் விலங்கு மாட்டியிருப்பார். காபூர் அறிக்கை யின் ஆறாம் அத்தியாத்தில், `Background of the accused’   என்றொரு பகுதி இருக்கிறது. அதில், காந்தி யார் கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு, விரி வாகவே பேசப்படுகிறது.

இவ்வளவு ஏன்? 1966இல் கோபால் கோட்சேவின்`Gandhi’s murder and I’   என்ற புத்தகம் வெளியானது. அதில், `1929 ரத்னகிரியில் இருந்தபோதிலிருந்தே சாவர்க்கருக்கும் நாதுராமுக்கும் நல்ல பழக்கம். தனிப்பட்ட முறையில் தினமும் நிறைய பேசிக் கொள்வார்கள்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. ஆகவே, காந்தியார் கொலைக்கு சாவர்க்கர் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பது உறுதி யாகிறது.

காந்தியார் மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழு துமே,`Hindu Masculinity (ஹிந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசு வழிபாட்டைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்குப் பின்னால் இருந்தது, பன்முகத் தன்மையைப் பேணும் அக்கறை என்று தவறாக நினைக்க வேண்டாம். `பசுவை வணங்கினால் பசு வைப் போலவே நாமும் சாந்தமாகிவிடுவோம்’ என்று அவர் எண்ணியதே, அதற்குக் காரணம். அந்த அள வுக்கு அகிம்சை அவருக்கு ஆகாத ஒன்றாக இருந்தது.

அவர் ஆரம்ப காலத்தில் அங்கம் வகித்த, அபினவ் பாரத் அமைப்பு, அடிப்படையிலேயே வன்முறையைப் போற்றும் அமைப்பு. அதிலிருந்து கிளைத்து எழுந்து வந்தவர் அவர்! ஹிந்துக்களை வீரம்மிக்க ஒரு சமுதாயமாகவே அவர் உருவகித்தார். `பள்ளிகளில் படிப்பைவிட உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று அவர் குரல் கொடுத்தது, அதற்காகவே. கனவு வெளியில், வேதகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர் அவர். ஆகவே, அகிம்சை அவருக்கு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்டவர், வீரம்செறிந்த நேதாஜியுடன் இணைந்திருக்கலாமே என்ற கேள்வி, சிலருக்கு எழலாம். அந்தக் கேள்வி நியாயமான ஒன்று. ஆனால், அங்கேதான் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, காந்தியாரைப் போலவே, நேதாஜியும் உடையாத, மதச்சார்பு இல்லாத ஒரு இந்தியாவை கனவு கண்டவர். நேதாஜியின் அகிம்சையைக் காந்தியார் சந்தேகித்தாரே ஒழிய, அவரது மதச்சார்பற்ற தன்மையை அவர் எப் போதுமே சந்தேகித்ததில்லை. நேதாஜியின் படையில் இஸ்லாமியர்களும் அதிகளவில் பங்கெடுத்ததற்கு, அவரது மதச்சார்பற்ற தன்மையே காரணம். அது, சாவர்க்கரின் பிரித்தாளும் கொள்கைக்கு உவப்பான தாக இல்லை. அதுவும் இல்லாமல், சாவர்க்கர் கள வீரரும் அல்ல. அவர் எப்போதுமே பின்னால் இருந்து இயங்குபவர். தூண்டிவிடுவதில் சமர்த்தர். `Man in the chair’ என்போம் அல்லவா, அதே போன்றவர்.

இன்னொன்று தெரியுமா? அவர், இந்தியாவில் வைத்து கைது செய்யப்படவில்லை. லண்டனில் வைத்துதான் கைதானார். வில்லியம் கர்சனின் கொலையாக இருக்கட்டும், ஜாக்சனின் கொலையாக இருக்கட்டும், அவர் நேரடியாகச் செயலாற்றவே இல்லை. அதற்குரிய அத்தனை உதவிகளையும் செய்தார், திட்டங்களை வகுத்தார். `20 துப்பாக்கிகளை அவர் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்’ என்கின்றன, தரவுகள். ஆனால், எங்குமே காட்சிக்கு வராமல் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார் சாவர்க்கர். அந்தமான் சிறையிலும்கூட தூண்டிவிடும் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சக கைதி களை உண்ணாவிரதத்துக்குத் தூண்டிவிட்டு விட்டு, அவர் உணவருந்த சென்ற நிகழ்வும்கூட நடந்திருக் கிறது.

ஆகவே, இதுதான் சாவர்க்கர்! இவைதான் அவரது அரசியல்! மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தம், களத்துக்கு வராமல் பின்னே இருந்து இயக்குவது, மாட்டிக்கொண்டால் சீடனாகவே இருந்தாலும் கழட்டிவிடுவது என்று இருந்தவர் சாவர்க்கர். அவரது சித்தாந்தத்தாலோ, அவரது செயற்பாடுகளாலோ இந்தியாவுக்கும் எந்தப் பயனுமில்லை.

இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், `சாவர்க் கருக்கு பாரதரத்னா கொடுத்தால் என்ன தப்பு’ என்று கேட்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் ஒன்றை மட்டுமேனும் உணர்வோம். சாவர்க்கர் முன்னே எழுந்துவரும் ஒவ்வொருமுறையும் அசோகர் புதைக்கப்படுகிறார், அவரது தத்துவம் புதைக்கப்படுகிறது. ஒன்றை யோசிப்போம். அகிலத் தின் எத்தனையோ நாடுகளில் ஜனநாயகம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் சூழலில், இந்தியா மட்டும் எப்படி அதை இன்னும் தக்கவைத்திருக்கிறது? காற்ற டித்தாலும் மழையடித்தாலும், இந்தியாவின் ஜனநாயக தீபம் மட்டும் தொடர்ந்து ஒளிர்வது எப்படி? காரணம் எளிது. ஏனென்றால், இந்தியாவின் மரபிலேயே ஜன நாயகப் பண்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டியவர், அந்த மகா சக்கரவர்த்தி அசோகர்! அவரும் ஓர் அரசர்தான். ஆனால், மற்ற அரசர்களிடம் இருந்து அசோகர் எங்கே வேறுபடுகிறார் தெரியுமா. மக்களின் மீதான அபிமானத்தில் வேறுபடுகிறார். மரபை சீரமைத்து முன்னெடுத்துச் சென்றதில், வேறுபடுகிறார். கலிங்கத்தின் தயா நதிக்கரையில் இறந்து மிதந்த மனித உடல்களைக் கண்டு, ‘என்ன செய்துவிட்டேன் நான்...’ என்று வருந்திய குரலில், வேறுபடுகிறார்.

ஆம். இத்தேசம் அசோக தத்துவத்தால் கட்டமைப் பட்டது! `வரலாற்றை நிறைத்து நிற்கும் எத்தனையோ பேரரசர்களின் பெயர்களின் மத்தியில், அசோகர் மட்டுமே ஒரு வீழாநட்சத்திரமென தனித்து ஒளிர் கிறார்’ என்று ஆய்வாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் விழிவிரித்து கூறினாரே, அந்த அசோகரின் தத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது! இதை உணர்ந்தே, சிவாஜியை இடதுபக்கமும் அக்பரை வலது பக்கமும் ஒதுக்கிவிட்டு, அசோகரை இந்தியாவுக்கு அடையாளமாக்கினார் நேரு. தர்ம சக்கரம் சுழலும் அந்தச் சிங்கச்சிலையை இந்திய சின்னமாக்கி, `எழுக அவர் வேதம். எக்குடியும் என்குடியே என்றுரைக்கும் அசோகவேதம்’ என்று நேரு அறிவித்தபோது, இந்திய அன்னை துள்ளிக் குதித்து கூத்தாடினாள். சாவர்க்கர் வழிபாடு, அவளின் அந்த சந்தோஷத்தைக் கண்டிப்பாக நிர்மூலமாக்கும். 2000 ஆண்டுகளாக இந்த மண்ணில் ஊறி நின்றிருக்கும் மகத்துவத்தை, அது 20 வருடங்களுக்குள் அழித் தொழிக்கும்.

அறிக... அசோகரே புதைகிறாரென்றால் காந்தியா ரும் இருக்கப்போவதில்லை. நேருவும் அகன்றிருப்பார். அம்பேத்கரும் கூட கைவிட்டிருப்பார். இது உருவாக் கப்போகும் விளைவை, நம்மால் இப்போது உணர முடியாது. ஹிட்லரின் ஜெர்மனியாக, நத்தேன்யாஹூ வின் இஸ்ரேலாக இத்தேசம் மாற்றப்பட்ட பிறகுதான், நமக்கு அந்த உணர்வு எழும். ஆனால், அப்போது எல்லாமே கையைமீறிப் போயிருக்கும். நமக்கான கங்கைகளைத் தேடி நாம் அலையத் தொடங்கியிருப்போம். நாசிக்குள் புகுந்து நம்மை நிலைகுலையச் செய்யும் ரத்தத்தின் வீச்சத்தை நம்மால் கடக்கவே முடியாமல் இருக்கும். அது வீடோ, அலுவலகமோ, பேருந்தோ, ரயிலோ, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுமனே அமர்ந்திருப்போம். உண்ணச் சென்றால், தட்டில் இஸ்லாமிய குழந்தையின் உடைக் கப்பட்ட வெள்ளெலும்பு உணவென நெளியும். உறங் கச் சென்றால், கிறிஸ்துவ குழந்தையின் உரிக்கப்பட்ட தோல், படுக்கை விரிப்பென விரியும். அரண்டு ஓடி வந்து வெட்டவெளியில் நின்று, வான்நோக்கி இறைஞ்சுவோம், `அய்யோ... அப்போதே உணரத் தவறிவிட்டோமே...’ என்று. அதைக் கேட்கவும் அப்போது நாதியிருக்காது. தனித்து விடப்பட்டிருப்போம். அறத்தால் தள்ளி வைக்கப்பட்டிருப்போம். மனி தர்களை மதத்தாலும், இனத்தாலும் பிரித்து அரசியல் செய்த அரக்கர்களின் பின்னால் நின்ற அத்தனை பேருக்கும் கடைசியில் எஞ்சுவது, தீரா பழிச்சொல்லும், விலகா பெரும் பாவமுமே!

அது நமக்கு உவப்பென்றால், சாவர்க்கருக்கு பாரதரத்னா அளிப்போம். அடுத்து, கோல்வால்கருக்கும். கடைசியாக, கோட்சேவுக்கும்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn