முதல் மக்கள் திரள் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

முதல் மக்கள் திரள் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 10 சதவிகித இட ஒதுக்கீட்டை (EWS) எதிர்த்து அனைத்து மாநிலங்களையும் இணைத்துப் போராடுவோம்!

நீதிமன்றம் ஒரு பக்கம் - மக்கள் மன்றம் மறுபக்கம்!

இறுதி வெற்றி மக்கள் எழுச்சிக்கே - போராட்டத்துக்கே!

முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் தலைமையில் போராடி வரவில்லையா?

சென்னை, நவ.16  உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது; ஒரு பக்கம் சட்டப் போராட்டம்; மறுபக்கம் மக்கள் போராட்டம் - இறுதி வெற்றி மக்களுக்கே - முதல் மக்கள் திரள் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கப்படும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (15.11.2022) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிவேகள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் கூட்டத்தின்  முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியின ருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அடிப் படையில் சமூகநீதி தத்துவத்திற்கு, கல்வியிலும், உத்தி யோகத்திலும் இட ஒதுக்கீடு என்று சொல்லக்கூடிய மனுநீதியால் ஏற்பட்ட அநீதியைப் போக்கக்கூடிய ஒரு தத்துவத்திற்கு விரோதமான அளவிற்கு இந்தப் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஒரு தொடக்கமாக இருக்கின்ற காரணத்தினால், சமூகநீதிக்கு இது மிகப்பெரிய பேரியடியாகும்.

முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பின்னடைவு, அதைத்தாண்டியும் ஒரு பேரடைவு.

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாதான் இது!

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாக்களில் மிக முக்கிய மான அஜெண்டாவான சமூகநீதியை ஒழிப்பதற்கான முதல் கட்ட, முதல் முயற்சி என்பதாக இந்த சமூகநீதியாளர்கள் கலந்துகொண்ட ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப் புகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அந்தத் தீர் மானம் செய்தியாளர்களான ஊடக நண்பர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தீர்மானத்தின்படி, இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள், ஏற்கெனவே பங்கேற்றவர்கள், மற்றவர்களும் சேர்ந்து மறு சீராய்வு மனு போடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

மறு சீராய்வு தேவை!

இது மிக முக்கியமான ஒரு பொதுநலப் பிரச்சினை; நூற்றாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒரு பெரிய போராட்டத்தினுடைய வடிவத்தையே மாற்றக்கூடிய, அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்று என்ற காரணத்தினால், பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போடவேண்டும் என்று சமூகநீதியில் ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஒருமித்த முடிவெடுத்திருக்கின்றோம்.

நீதிமன்றம் ஒருபுறம் - 

மக்கள் மன்றம் மற்றொருபுறம்!

தமிழ்நாடு அரசு - முதலமைச்சர் அவர்கள் உடனடி யாக கடந்த 12 ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை இந்தக் கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.

அதை உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்ற முறையிலே, அவர்களோடு இணைந்து, மறுசீராய்வு என்பதை எல்லா அமைப்புகளும் சேர்ந்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்; நீதி கேட்கவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதைவிட மிக முக்கியம், நீதிமன்றத்தில்சட்டப் போராட்டத்தை நடத்துவதைப்போல, மக்கள் மன்றத் திலே, இது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய கேடு செய்யக்கூடியது; அவர்களுடைய உரிமையைப் பறிக்கக் கூடியது என்பதை எடுத்துச் சொல்லி, இன்னும் சிலரை ஏமாற்றுவதற்காக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிரிப்பதற்காக, புதிய சட்டத்தில் 79 ஜாதிகள் இருக்கின்றன என்பதைப் போல, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுகின்றனர். ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய சமுதாயத்தைப் பிளக்கக்கூடிய ஏற்பாட்டை அவர்கள் செய்துகொண்டிருப்பதினுடைய அந்த உள்நோக் கத்தையும் அம்பலப்படுத்தக் கூடிய வகையிலும், தெளிவாக மக்கள் மத்தியில் இது எப்படி சமூகநீதிக்கு விரோதமானது என்பதை எடுத்துச் சொல்ல நாடு தழுவிய போராட்டத்தை, எப்படி 1950 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் வகுப்புரிமை செல்லாது என்று வந்த நேரத்தில், அதை எதிர்த்து ஒரு பெரிய கிளர்ச்சி,போராட்டங்களை நடத்தினார்களோ,அதே போல, மக்கள் பெருந்திரள் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்துவது என்றும், வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் அதனை முதலில் தொடங் குவது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதான் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் கட்ட முடிவு. இந்தப் போராட்டம் தொடரும். ஏற்கெ னவே 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை எதிர்த்து நாங்கள் போராடி வெற்றி பெற்றிருக்கின்றோம்.

முதல் சட்டம் திருத்தப்படவில்லையா? 

மண்டல் ஆணையத்தில் 

வெற்றி பெறவில்லையா?

அதற்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் போராடி, முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையே உருவாக்கியிருக்கிறார்கள், சமூகநீதி வரலாற்றில்.

அதேபோல, மண்டல் கமிஷன் அறிக்கையை 10 ஆண்டுகாலமாகக் கிடப்பில் போட்டு வைத்த நேரத்தில், அந்த 10 ஆண்டுகாலத்தில், இந்தியா முழு வதும் 42 மாநாடுகள், 16போராட்டங்களை நடத்தியிருக் கின்றோம்.

எனவே, சமூகநீதி பயணத்தில் எவ்வெப்பொழுதெல் லாம் தடைகள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அறைகூவல்களை எழுப்பி, தொடர்ந்து ஒத்தக் கருத் துள்ளவர்களையும், சமூகநீதிப் போராளிகளையும் ஒருங்கிணைத்து, அகில இந்திய அளவில் ஓர் இயக்கத்தை  நடத்துவோம்! முதலில் தமிழ்நாட்டில், பிறகு தென்னாட்டில், அடுத்ததாக அகில இந்திய அளவில் அந்த இயக்கத்தைக் கட்டமைப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் இதுதான்.

சி.பி.எம்., காங்கிரஸ் முடிவுகள்பற்றி...

செய்தியாளர்: அரசியல் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் ஆதரிக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அவர்களுக்கு சில நிலைப்பாடுகள் ஆரம்பத்தில் இருக்கலாம். ஆனால், இப்பொழுது அதனுடைய உண்மை சொரூபம் வெளியே வருகின்ற காரணத்தினால், அவர்களேகூட தங்களுடைய நிலைப் பாட்டிலிருந்து மாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன என்பதற்கு பல்வேறு செய்திகள் வருகின்றன.

என்றாலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் எங்களுடைய பணி. 

அவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்!

ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும், மதச்சார் பின்மை காப்பாற்றப்படவேண்டும் என்ற பொதுத் தன்மையிலே இவற்றையெல்லாம் வேகமாகச் சொல்லக்கூடிய நேரத்தில், நாங்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்.

மண்டல்அறிக்கையில்சிலர் மாறுபட்டுதான்இருந் தார்கள். நாங்கள் அதற்காக தொடர்ந்து போராடி வெற்றி பெற்றோம். இப்போது எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பத்தில் அந்தத் தீர்மானம் எப்படி இருந்ததோ, அந்த வடிவத் தில் அவர்கள் ஆதரிக்கவில்லை. வேறு வகையில் செய்யவேண்டும்.

அந்த அடிப்படை எப்படி சரியாக இருக்கும் என்பதில்கூட எங்களுக்குள் கருத்து மாறுபாடு இருந் தாலும், அந்தக் கருத்து மாறுபாடுகள் எங்களை ஒரு போதும் பிரிக்காது.

69 சதவிகிதத்திற்கு ஆபத்து வருமா?

செய்தியாளர்: இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டினால், 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு ஆபத்து வருமா?

தமிழர் தலைவர்: ஆபத்து வராது என்றுதான் நீதிபதியே சொல்லிவிட்டார். 

ஏனென்றால், இதற்குமுன்பு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறதே, இருக்கிறதே என்று ஒரு பூச்சாண்டி காட்டினார்கள். இப்பொழுது 50 சதவிகிதம் தாண்டினால்தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது என்றவுடன், அவர்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அது லாபம், அதை வரவேற்பார்கள்.

மாறுபட்ட தீர்ப்பு எழுதிய இரண்டு நீதிபதிகள் - தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களும், ரவீந்திர பட் அவர்களும் எழுதிய தீர்ப்பின் கடைசி பகுதியில் சொல்லப்பட்டது என்ன?

50 சதவிகிதத்தை விஞ்சலாம் 

என்பது நீதிபதிகள் கருத்து

69 சதவிகித வழக்கே முடிந்துபோனது மாதிரி ஆக்கிவிட்டீர்கள் நீங்கள் - 50 சதவிகிதத்திற்குமேலே போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே, அவர்கள் ஒரு முன்னோட்டத்தையே கொடுத்திருக் கிறார்கள்.

ஆகவேதான், இதை ஒரு பெரிய வேகமாக கொண்டு போன இடத்தில், அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிற ஒரு பிரச்சினைக்குக்கூட இன்னொரு பக்கம் தீர்வும், தீர்ப்பும் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, 69 சதவிகித இட ஒதுக்கீடு 

9 ஆவது அட்டவணையில் பாதுகாப்பாக இருக்கிறது. 

எதுவாக இருந்தாலும், அதற்குமேல் கேட்க முடியாது - 50 சதவிகிதத்திற்கு மேலே, தீர்ப்பு முடிந்துபோனது என்று நான் சொல்லவில்லை, தீர்ப்பு எழுதிய இரண்டு நீதிபதிகள் சொல்கிறார்கள்.

வகுப்புவாரி  பிரதிநிதித்துவத்தை 

ஒழித்தது யார்?

செய்தியாளர்: 69 சதவிகித இட ஒதுக்கீடு நிறைய ஜாதிகளுக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல் கிறார்களே?

தமிழர் தலைவர்: அவர்கள் சொல்வது ஏமாற்று வேலை என்பதைத் தீர்மானத்தில் விளக்கமாக சொல்லியிருக்கிறோம்.

எந்த ஜாதிக்கும் விரோதம் இல்லை.

எல்லா ஜாதிக்கும் சேர்ந்ததுதான் கம்யூனல் ஜி.ஓ. - வகுப்புவாரி உரிமை.

அதை ஒழித்தது பார்ப்பனர்கள்தான்.

செண்பகம் துரைராஜன் என்ற ஒருவர் மனு போடாத ஒருவர்மூலம் நீதிமன்றத்தில் பொய் சொன்னார்கள். அதை ஒழித்தது அவர்கள்தான். 

இந்தத் தீர்மானத்தை நீங்கள் படித்தீர்கள் என்றால், உங்களுடைய கேள்விக்கு அதில் பதில் இருக்கிறது.

இந்தக் கேள்வியைப் பரப்பக் கூடாது என்பதற் காகத்தான், யாருக்கும் நாங்கள் விரோதியில்லை.  மறுபடியும் பழைய மாதிரி வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைப்படி எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கட்டும்!

புரப்பஷனல் ரெப்பரேசன்டேசன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்தது என்றால், இந்தக் கூட்டம் இரண்டு கை தட்டல்களால் அல்ல, நான்கு கை தட்டல்கள்மூலம் வரவேற்போம்.

அகில இந்திய அளவில் 

ஒருங்கிணைத்துப் போராட்டம்!

செய்தியாளர்: அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுப்பீர்களா?

தமிழர் தலைவர்: தாராளமாக. ஏனென்றால், மண்டல் கமிசனைப் பொறுத்தவரையில், ஒத்தக் கருத்துள்ள வர்களை அகில இந்திய அளவில் திரட்ட வில்லையா?

முன்பு ஏற்பட்ட விழிப்புணர்வைவிட இப்பொழுது விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது.

ஆர்.ஜே.டி. போன்றவர்கள் 103 ஆவது அரசமைப்புச் சட்ட தீர்மானத்தை நாடாளுமன்றத்திலேயே எதிர்த் திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, மிக முக்கியமான இரண்டு செய்திகளை இரண்டு நீதிபதிகளுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

‘‘பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் - ஏழைகள் என்ற வார்த்தையை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே, அப்படியானால், எஸ்.டி., பிரிவில் ஏழைகள் இல்லையா? எஸ்.சி., பிரிவில் ஏழைகள் இல்லையா? எஸ்.டி., என்று சொல்லக்கூடிய பழங்குடி மக்களில், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட  மக்களில் ஏழைகள் இல்லையா? ஏன் அவர்களை சேர்க்கவில்லை? ஆகவே, அதுவே செல்லாது'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

முன்பைவிட இப்பொழுது 

விழிப்புணர்வு அதிகம்!

இந்தியா முழுவதும் இந்த உணர்வுகள் பிரதி பலித்திருக்கிறது; நிச்சயம் இந்த இயக்கத்தில் தாராளமாக தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

அதைவிட இந்தத் தீர்ப்பு சமூகநீதி அடிப்படையைத் தகர்க்கிறது என்று சொல்கிறபொழுது, உண்மையான சமூகநீதிப் போராளிகள் அத்துணை பேரும் அகில இந்திய அளவில் வருவார்கள்.

இந்த விழிப்புணர்வு, 1950 ஆம் ஆண்டில் இருந் ததைவிட, இன்றைக்கு 72 ஆண்டுகளுக்குப் பிறகு, மண்டலுக்குப் பிறகு ஏராளம் வந்திருக்கிறது.

ஆகவேதான், இது நிச்சயமாக நீங்கள் சொல்கிறபடி, அகில இந்திய இயக்கமாகவும் கட்டப்படும்! 

ஏற்கெனவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஒரு சமூகநீதி அமைப்பை அகில இந்திய அளவிலேயே உருவாக்கி இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தக் கருத்துக்கு எல்லோரும் உடன்படுவார்கள்.

அ.தி.மு.க.வின் நிலைப்பாடுபற்றி...

செய்தியாளர்: அ.தி.மு.க. இந்தப் பிரச்சினையை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லையே?

தமிழர் தலைவர்: எதிர்க்கிறார்கள்; எதிர்த்தே தெளிவாகப் பேசியிருக்கிறார்கள்.

எந்த அ.தி.மு.க. என்கிற கேள்வி இப்பொழுது இருக்கிறது.

ஒரு அ.தி.மு.க. எதிர்க்கவில்லை.

இன்னொரு அ.தி.மு.க. மறுசீராய்வு செய்யவேண்டும் என்று சொல்கிறது.

ஆகவே, எந்த அ.தி.மு.க. என்பது ஒரு கேள்வி!

எந்த அ.தி.மு.க. எதிர்த்தாலும், அப்படி எதிர்க்கா விட்டாலும், முன்னே பார்த்தால் நாய்க்கர் குதிரை, பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று வித்தை காட்டினாலும்,

அது எம்.ஜி.ஆர். எடுத்த நிலைக்கு வேறுபாடு; அதற்கு மாறுபாடு. ஜெயலலிதா எடுத்த நிலைக்கு மாறுபாடு.

எனவேதான், அவர்கள் இப்பொழுது அண்ணா வழியிலும் இல்லை, எம்.ஜி.ஆர். வழியிலும் இல்லை, ஜெயலலிதா வழியிலும் இல்லை. மோடி வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆப்பதனை அசைத்துவிட்ட பா.ஜ.க.!

செய்தியாளர்: 50 சதவிகிதத்தைத் தாண்டலாமா?

தமிழர் தலைவர்: அவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்களோ, அத்தனை சதவிகிதத்தை அவர் களுக்குக் கொடுக்கலாம்.

அதற்கு எந்தத் தடையும் இல்லை.

நாம் கேட்கவில்லை, எல்லா மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

50 சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று சொன்னீர்கள், இப்பொழுது 50 சதவிகிதத்திற்குமேல் கொடுக்கலாம் என்று சொல்லியாயிற்று. ஆகவே, அதைக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

இதற்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் பா.ஜ.க. தான். இன்றைக்கு ஆப்பசைத்து இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment