ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்


1. சமூக ஏற்றத் தாழ்வுடன் பட்டினி, வேலையின்மை அதிகரித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே ஒப்புதல் அளித்துள்ளாரே?

- அ.தமிழ்க்குமரன், ஈரோடு

இதுபற்றி  `விடுதலை'யில் விரிவான அறிக்கை எழுதி வெளிவந்துள்ளது. உண்மைகளை எவ்வளவு காலம்தான் மூடி மறைக்க முடியும்? நிதின்கட்கரிகளும் "ஹொசபாளேகளும்" (R.S.S.) இப்படி பொதுவெளியில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு வழமைபோல பதில் ஏதும் விவரமாக வராது!

2. வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 நாட்கள் விடுமுறை வருகிறதே - இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு யார் பொறுப்பு?

- சந்தோஷ், வேலப்பன்சாவடி

சராசரி பொருளாதார அறிவும் அனுபவமும் உள்ள எந்த நாட்டவரும் இது மாதிரி நாட்டின் வளர்ச்சியை - பொருளாதாரத்தை முடக்கும் வகையில் மூடத்தனத்தை நடத்துவது நியாயமாகுமா? ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் சம்பளக் கமிஷன் அறிக்கையில், உலகிலேயே அதிக அரசு விடுமுறைகள் விடும் நாடு இந்தியா. இது குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால்,ஹிந்து ராஷ்டிர ஆட்சியிலோ - இப்போது கூடியிருக்கிறது. இப்படி மதவெறியின் விளைச்சல் இது! இதுபற்றி 23 நாள்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு பற்றி மாநில திட்டக் கமிஷன் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி அரசுகளுக்கு அறிவுறுத்த முன்வர வேண்டும்.

3. தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு நிறுவனங்கள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களிலும் வடஇந்தியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதே - அரசு இதனால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்துள்ளதா?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

வீடுகளே வடவர்க்கு மட்டும்தான் வாடகைக்கும் சரி, விற்பனைக்கும் சரி, கொடுப்பது என்ற நிலை உள்ளது. நம் இளைஞர்கள் - வேலையின்றித் தவிப்பவர்கள்? எவ்வளவு காலம்தான் பொறுப்பார்கள்? கேள்விக்குறியானால்...? அரசுகள் விழித்தெழுந்து விடை காணட்டும்!

4. காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டால் காங்கிரஸ் வடஇந்திய பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க உதவுமா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

சமூகநீதியில்  ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர் மல்லிகார்ஜுன கார்கே - அவரது தலைமை நிச்சயம் முற்போக்குத் தலைமையாகும்!

5. வட இந்தியாவில் சமூக நீதிப் போராளிகள் கன்சிராம், சந்திரஜித் உள்ளிட்டோர் இடங்கள் காலியாகவே உள்ளதாக உணர்கிறீர்களா?

- பாவேந்தன், கொருக்குப்பேட்டை

நமது வேதனைகளில் இது தலையாயது. அவர்களைப் போல சமூகப் புரட்சிக்கான போராளிகள் இப்போது இல்லை; பதவியாளர்கள் அரசியலுக்குத்தான் மல்லுக் கட்டுகிறார்களே தவிர. சமூக மாற்றத்திற்காக அல்லவே! நிச்சயம் உருவாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை நாம் இழக்கவில்லை!

6. டெல்டா  பாசனப் பகுதியில் கடந்த ஆண்டுகளை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கூடுதலாகப் பயிரிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே!

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

அது பாராட்டப்பட வேண்டும்; முதல் அமைச்சர் வழிகாட்டலுடன் வேளாண்துறை அமைச்சர் -  (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்) மிகச் சிறப்பாகச் செயல்படுவதன் விளைவு இது! பாராட்டி வாழ்த்துகிறோம்.

7. தனியாரிடம் தண்ணீர் வினியோகம் செல்வது நன்மை பயக்குமா? 

- சித்தார்த், விருத்தாசலம்

கூடுமானவரை தவிர்த்து அரசே செய்வது விரும்பத்தக்கது. தவிர்க்க முடியாதபோது, தக்கவர்களை அடையாளம் கண்டு சரியான கண்காணிப்புடன் செய்தல் நல்லது!

8. அரசாணை எப்படி இருந்தாலும் அரசு பேருந்துகளில் மதம் சார்ந்த படங்கள் மற்றும் கண்ணாடிகளில் ஓவியங்கள் இடம் பெறுகின்றனவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முற்போக்கு அமைப்புகளின் தொழிற்சங்கங்கள் அறிவுறுத்துமா?

- நடராசன், அம்பத்தூர்

திராவிடப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் திருவள்ளுவர் படம் தவிர வேறு எதனையும் அனுமதிக்காமலிருக்க முயற்சிகளை எடுக்க முன்வரவேண்டும். கொள்கை முக்கியம். அமைச்சரின் கவனமும் இதில் பாயட்டும்!

9. மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். இது எங்கு போய் முடியும்?

-இல.சங்கத் தமிழன், மாமண்டூர்

சிறுபான்மையினரைக் குறிவைத்து ஏவிடும் சூதான அஸ்திரம்; குடியுரிமைச் சட்டம் போன்று - மக்கள் தொகைக் கட்டுப்பாடு - பொதுவாக அனைவருக்குமே. ஜாதி, மதம் பாராது கட்டுப்பாடு தேவைதான் - யாரையும் பழிவாங்க அல்ல.

10. சிதம்பரம் தீட்சிதர் குடும்பங்களின் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டத்தின் அதிக பட்ச நடவடிக்கை எடுக்காமல் அல்லது கடுமையான சட்டம் கொண்டுவராமல் விசாரணை, கைது, ஜாமின் என்று இருப்பது பயன் அளிக்குமா?

-அன்புமணி, காட்டுமன்னார்கோயில்

தனிச் சட்டத் திருத்தம் தமிழ்நாடு அரசு கொண்டுவந்து நிறைவேற்றுவது மிக அவசர அவசியம்.


No comments:

Post a Comment