எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 60 நாள்களுக்கு புத்தாடை - நோட்டு புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 60 நாள்களுக்கு புத்தாடை - நோட்டு புத்தகம் வழங்கல்

மணிவிழாவினை வெறும் சடங்காக - விழாவாக நடத்தாமல் 

பசித்த வயிறுகளுக்கு உணவு- அறிவுப் பசியைத் தீர்க்கக் கூடிய செயல்கள் பாராட்டத்தக்கவை!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, அக்.20 எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 60 நாள்களுக்கு புத்தாடை - நோட்டு புத்தகம் வழங்கல் மணிவிழாவினை வெறும் சடங்காக - விழாவாக நடத்தாமல் பசித்த வயிறுகளுக்கு உணவு- அறிவுப் பசியைத் தீர்க்கக் கூடிய செயல்கள் பாராட்டத்தக்கவை! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  

நேற்று (19.10.2022) சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள ஜீவதானம் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இல்லத்தில் தங்கிப் பயிலக் கூடிய மாணவர்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் பெசன்ட் நகர் அந்தோணி அவர்களின் ஏற்பாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, புத்தாடைகள், எழுது பொருள்கள், புத்தகம், நோட்டுகளை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வின் முடிவில் செய் தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்

எழுச்சித் தமிழர் என்னருஞ் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய மணிவிழாவினையொட்டி, அதை வெறும் சடங்காக - விழாவாக நடத்தாமல், ஆக்கப்பூர்வமாக, பசித்த வயிறுகளுக்கு உணவும், அறிவுப் பசியைத் தீர்க்கக் கூடிய அளவிற்குக் கல்வியும், அந்தக் கல்வியைத் தரக்கூடிய ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் பெசன்ட் நகர் அந்தோணி மற்றும் இந்தப் பகுதியில் இருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த நம்முடைய பொறுப்பாளர்கள், அருமைச் சகோதரர்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் அடைகிறோம்.

சிறு குழந்தைகள், இளந்தளிர்கள் வளரவேண்டியவர்கள். எந்தவிதமான பேதமுமில்லாமல் இந்தப் பள்ளி அருமையான தொண்டைச் செய்து வருகிறது.

மதத்தைத் திணிக்கின்ற முயற்சிகள் இல்லை!

மதத்தால் கிறித்துவத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்தப் பேதத்தையும் அவர்கள் அனுமதிக்காமல், எல்லோரும் பேதமற்ற பெருவாழ்வு வாழவேண்டும், சமமாகப் பார்க்கப்படவேண்டும் என்பதற்கு அடையாளம் - இந்தக் குழந்தைகளை நாம் பார்க்கின்றபொழுது, சில குழந்தைகள் நெற்றியில் விபூதி வைத்திருந்தார்கள்.  அது எதைக் காட்டுகிறது? எங்களுடைய கொள்கைக்கு அது வித்தியாசமான விஷயம் - அது வேறு செய்தி.

ஆனால், இங்கே எந்தவிதமான மதக் கட்டுப்பாடும், எந்த மதத்தைத் திணிக்கின்ற முயற்சிகளும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதோடு, அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் இன்றைக்கு இதுபோன்ற பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடைய கல்விப் பணிக்குத் தொண்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து, அந்தப் பிள்ளைகள் நன்றாக வளரவேண்டும் என்று இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டி

நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தாண்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்குக் காலைச் சிற்றுண்டியை வழங்கும்படியாகச் செய்து, பசியற்ற நிலையில் அவர்கள் கல்வியைப் பயின்றால்தான், முழுக்க அவர்களை ஈர்க்க முடியும் என்று இதனைச் செயற்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள்.

அதுபோன்று இங்கே அறிவுப் பசியைத் தீர்க்கக் கூடிய அளவிற்குப் புத்தகங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்தார்கள். அதேபோல, வயிற்றுப் பசியையும் தீர்க்கக் கூடிய அளவிற்கு உணவையும் தருகிறார்கள்.

எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி - 60 நாள்களும் பல்வேறு நிவாரண உதவிகள்!

எனவே, பசியற்ற வாழ்க்கை, பசையுள்ள வாழ்க்கையாக, அறிவுள்ள வாழ்க்கையாக அமைய ஏற்பாடு செய்த நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள், இன்று 52 ஆவது நாளாக தொடர்ந்து செய்கிறார்கள்; இன்னும்  8 நாள்களுக்கும் தொடரவுள்ளார்கள். ஆக மொத்தம் 60 நாள்களும் இதுபோன்ற நிகழ்வுகளைச் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பிள்ளைகள் வளர்ந்து, ஒவ்வொருவரும் பெரிய நிலைக்கு வருவார்கள், வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கே எதிர்கால மாவட்ட ஆட்சியர்கள் இருக்கிறார்கள்; எதிர்கால வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள்; எதிர்கால மருத்துவர்கள் இருக்கிறார்கள்; எதிர்கால விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்துகின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ‘அனைவருக்கும் அனைத்தும்'

தந்தை பெரியார், ‘‘கல்வியைப் போல் எல்லோரும் படிக்கக்கூடிய அறிவுக்கண் வேறு எதுவும் இல்லை'' என்று சொல்வார்கள். அந்தக் கல்வியை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் இந்த நாட்டில். இன்னாருக்குத்தான் இது என்று இல்லாமல், ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற வகையில், நல்ல வகையில் சிறப்பாக நடத்துகின்ற இந்த நிர்வாகத்திற்கும், பள்ளிக்கும் பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு மனமுவந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


No comments:

Post a Comment