மீனவர்கள் நலன் பாதுகாப்பு மாநாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

மீனவர்கள் நலன் பாதுகாப்பு மாநாடு!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கோரிக்கை!

ஜெகதாப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்கண்டவாறு பேசினார்கள்:

மகிழ்வித்து மகிழும் வாழ்க்கை!

"நான் கடலூரை சார்ந்தவன். மீனவ மக்களோடு அதிகம் பழகியவன். மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்ட காலமாக தொடர்கிறது. அவர்களின் வாழ்வாதாரமே கடல் வாழ்க்கை தான். மீன் பிடிக்க சென்றால் எப்போது திரும்பி வருவோம் என உத்திரவாதம் இல்லாத  பாதுகாப்பற்ற வாழ்க்கை! ஆனால் மற்றவர்களை வாழ வைக்கிற வாழ்க்கை. மருத்து வர்கள் அதிகம்  பரிந்துரை செய்வது மீன் உணவுதான்! இந்த மீன் உணவு நமக்குப் பாதுகாப்பு. ஆனால் இந்த உணவைத் தருகிற  மீனவர்களுக்குப்  பாதுகாப்பு இல்லை. இந்தப் பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். "மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு" என ஒன்றையும் இந்தப் பகுதிகளில் நடத்த வேண்டும்!" என ஆசிரியர் பேசினார்கள்.

மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு!

பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பேச்சின் மூலம், எங்களுக்கொரு விடியல் கிடைக்காதா எனத் திராவிடர் கழகத் தலைவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மீன வர்கள்!. தங்களின் உரிமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு ஆசிரியர் அவர்கள் விரைவில் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.. 

இதுதொடர்பாக மீனவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சந்தித்துக் கருத்துகள் கேட்டோம். 

கடலை விட்டு காணாத தூரம்!

பொதுவாக ஒரு படகு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 பேர்களுக்கு மேல் வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறது. திங்கள், புதன், சனி மூன்று நாட்கள் தான் கடலுக்குள் போகிறார்கள். மற்ற நாட்களில் அது தொடர்பான பணி அல்லது ஓய்வு என்கிற அளவிலே இருக்கிறது. ஒரு காலத்தில் ஆயிரம் படகுகள் இருந்த ஜெகதாப்பட்டினத்தில் இன்றைக்குப் பாதியளவு கூட படகுகள் இல்லை. நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடல் வாழ்க்கையை விட்டுவிட்டு, காணாத தூரத்திற்குச் சென்றுவிட்டனர். 

கொழுந்து விட்டு எரியும் டீசல் விலை!

நீண்ட காலமாக இலங்கை அரசால் எங்களுக்குப் பிரச் சினை இருந்து வருகிறது. இந்நிலையில் டீசல் விலையும் கொழுந்துவிட்டு எரிகிறது. இன்றைக்கு டீசல் ரூ.96 என்றால், எங்களுக்கு மானிய விலையில் 80 ரூபாய்க்கு கொடுக் கிறார்கள். மாதம் ஒன்றுக்கு 1800 லிட்டர் மானிய டீசல் கிடைக்கிறது. ஆனால் இது எங்களுக்குப் போது மானதாக இருப்பதில்லை. 

கடலில் 20 நாட்டிக்கல் தூரம் சென்று மீன் பிடித்து வருகிறோம். ஆனால் நாளொன்றுக்கு 300 லிட்டர் டீசல் மட்டுமே தருகிறார்கள். இதைப் பயன்படுத்தி 10 நாட்டிக்கல் தூரமே சென்று வர முடியும். (ஒரு நாட்டிகல் என்பது சுமார் 1.85 கி.மீ.) ஆக மீதி தூரம் சென்று வர முழு பணமும் கொடுத்து டீசல் பெற வேண்டியுள்ளது. 

விரைவில் கடல் விற்பனைக்கு வரலாம்!

அதுமட்டுமின்றி எல்லையைத் தாண்டி விட்டதாக, இலங்கை கடற்படை அடிக்கடி மீனவர்களை கைது செய் கிறார்கள். சிறிது நாட்கள் கழித்து மீனவர்களை மட்டும் விடுதலை செய்துவிட்டு, படகுகளை வைத்துக் கொள் கிறார்கள். படகுகளின் குறைந்தபட்ச விலை ரூ.15 இலட்சம் ஆகும். ஒரு சாதாரண மீனவர் 15 இலட்சம் ரூபாயை எப்படி ஈடு செய்வார்?  இனி வாழ வழியில்லை என 200 குடும்பங்கள் ஊரை விட்டே  போய்விட்டார்கள். 

அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் தான் தொழில் பெரிதும் முடக்கம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, கைது நடவடிக்கை இருந்தாலும், படகுகளைத் தந்துவிடுவார்கள். ஆனால், பாஜக வந்த பிறகு தான் இலங்கை கடற்படை படகுகளைத் திருப்பித் தருவதில்லை. சிறு தொழில்களை முடக்கிவிட்டு, பெரு முதலாளிகளுக்கு கடலை தாரை வார்க்கப்  பார்க்கிறார்கள். 

கடல்தான் எங்கள் வீடு!

ஒருமுறை கடலுக்குச் சென்று வந்தால் ஓரளவு லாபம் கிடைத்து வந்தது. பின்னர் அது குறைந்து, அதன் பின்னர் பாதியாகி, அதுவே சொற்பமாகி, இப்போது நட்டம் ஏற்படும் நிலையில் வந்து நிற்கிறது. அதனாலே பலர் காணாத தூரம் சென்றுவிட்டார்கள், எங்களைப் போன்ற சிலர் கண்கலங்கி தவிக்கிறோம் என்றனர்! 

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்,"

என்பது மீனவர்கள் குறித்து உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட பாடல்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவின் மாநாட்டு முயற்சியின் மூலம் எங்களுக்கோர் விடியல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர். 

கருத்துப் பரிமாற்றம் செய்தோர்!

இக்கருத்துக் கேட்பு நிகழ்வில் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் பாலமுருகன், துணைத்  தலைவர் மோகன், செயலாளர் மோகன், பொருளாளர் செல்லத்துரை, பொறுப்பாளர் எம்.டி.ஆர்.மருது, கோட்டைப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் முகமது கான், பொறுப்பாளர் முகமது ரபி, கோட்டைப்பட்டினம் விசைப் படகு சங்கத் தலைவர் அசன் முகைதீன், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் அலி, மாநில மீனவரணி செயலாளர் செய்யது, தமுமுக மாவட்டச் செயலாளர் அபுசாலிகு, கிளை பொறுப்பாளர் ஹாஜா மைதீன், மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் சாலிகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கரு.இராமநாதன், உசிலங்காடு அரு ளாந்து, கீழமஞ்சக்குடி பல்தசார் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.  

உடன் பயணித்தோர்: 

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டலத் தலைவர் பெ.இராவணன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாநில இளைஞரணி செயலாளர்கள்  இரா.வெற்றிக்குமார், ச.குமார், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மணமேல்குடி லாவண்யா, மன்னார்குடி அலெக்சாண்டர்.   

தொகுப்பு: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment