தந்தை பெரியார் தந்த பேராயுதம்தான் - போராயுதமான ‘விடுதலை!’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

தந்தை பெரியார் தந்த பேராயுதம்தான் - போராயுதமான ‘விடுதலை!’

‘விடுதலை’யைப் படிக்காதவர்களிடமும், இதுவரை ‘விடுதலை’யைப் பார்க்காதவர்களிடமும் போய்ச் சேரவேண்டியது அவசியம்!

காணொலிமூலம் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் எழுச்சியுரை

சென்னை, ஜூலை 28  தந்தை பெரியார் தந்த பேராயுதம்தான் - போராயுதமான ‘விடுதலை!’ ‘விடுதலை’யைப் படிக்காதவர்களிடமும், இதுவரை ‘விடுதலை’யைப் பார்க்காதவர்களிடமும் போய்ச் சேரவேண்டியது அவசியம்  என்றார் 60 ஆண்டுகால ‘விடுதலை ஆசிரியர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘விடுதலை’யின் எதிர்நீச்சல் - 

காணொலி சிறப்புக் கூட்டம்

கடந்த 25.7.2022 அன்று மாலை ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க வுரையாற்றினார்; திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அழகாகத் தொகுத்துச் சொன்னார் 

‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியர்

எனக்கு முன்னால், மிகச் சிறப்போடு ‘விடுதலை' யினுடைய  எதிர்நீச்சல் கட்டமான நெருக்கடி காலம், அதனால் பயனடைந்தவர்கள் இவற்றைப்பற்றியெல்லாம் ‘விடுதலை’யின் இந்த 88 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பகுதிகளை மிக அழகாகத் தொகுத்துச் சொன்ன திராவிடர் கழகத் துணைத் தலைவரும், ‘விடுதலை' யினுடைய நிர்வாக ஆசிரியருமான அன்பிற்குரிய கவிஞர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்களே,

உலகம் முழுவதும் இருந்து கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய விடுதலை அன்பர்களே, இயக்கக் கொள்கை உறவுகளே, ஆர்வலர்களே, ‘விடுதலை’ வாசகப் பெருமக்களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய கனிந்த நன்றி கலந்த வணக்கத்தை உரித்தாக்குகின்றேன்.

தந்தை பெரியார் இட்ட கட்டளை 

அன்றும் - இன்றும் - என்றும்...

60 ஆண்டுகால ‘விடுதலை’ தொண்டு என்று அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் இட்ட கட்டளை அன்றும் - இன்றும் - என்றும் - எதுவானாலும், கீழ்படிந்தே பழக்கப்பட்டவன் - பழக்கப்பட்ட குடும்பம் என்ற முறையிலே, நாங்கள் இந்தப் பணியை செய்கி றோம். அவ்வளவுதானே தவிர, அது ஒரு பெரிய தியாகம், தன்னலமறுப்பு என்றெல்லாம் கருதிக்கொண்டு இதைச் செய்யவில்லை.

அதைவிட அய்யா அவர்கள் சுயநலம் என்பதற்கு விளக்கம் சொல்வார்கள்.

அற்புதமான தத்துவார்த்த உண்மை கலந்த விளக்கம்.

மற்றவர்களுக்குப் பொதுநலம் -  

உண்மையில் சுயநலம்தான்!

மற்றவர்களுக்குப் பொதுநலம் என்று கருதப் படக் கூடியது உண்மையில் சுயநலம்தான்.

காரணம் என்னவென்றால், எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, இன்பம் தருகிறதோ, அதை ஏற்றுக்கொண்டு செய்வதை நம்முடைய கடமையாகக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால், அது மற்றவர்களுக்காக என்பதைவிட, மற்றவர்கள் அதனால் பலனடைந்தார்கள் என் பதைவிட, நமக்கு இன்பத்தைத் தருகின்ற ஒரு செயல் என்கின்றபொழுது, அது ஒரு சுயநலம்.

எனவே, அப்படிப்பட்ட சுயநலவாதியாக, தந்தை பெரியார் எப்படி தன்னை வரித்துக் கொண் டாரோ, அவருடைய அதே புத்தியை வரித்துக் கொண்டிருக்கக்கூடிய எங்களைப் போன்ற  எளிமையான தொண்டர்கள், தோழர்கள், சுயநலத் தின் பாற்பட்டுத்தான் இந்தப் பணியை செய்கின் றோம்.

எனவே, இது ஒரு பெரிய தியாகம் என்று சொல்கின்ற பகுதிக்கு நான் போக விரும்பவில்லை.

எதிர்நீச்சலைக் கற்றுக்கொடுத்த தலைவர் 

தந்தை பெரியார்!

காலத்தின் கட்டாயம், இயக்கத்தின் தேவை - தோழர் களுடைய உற்சாகம் மிகுந்த பேராதரவு - இவை யெல்லாம் இந்தப் பணியை செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது. அவை எல்லாவற்றையும்விட, எதிரி களுடைய வேகமான எதிர்ப்புத் தன்மை இருக்கிறதே, அது நம்மை எதிர்நீச்சலில், மீன் குஞ்சுகளுக்கும் நீந்தத் தெரியும் - பெரிய மீன் மட்டுமே நீந்திவிட்டுப் போக வில்லை. அந்த மீன் குஞ்சுகளாலும் நீச்சலிலே வெற்றி பெற முடியும் என்பதற்குத் தூண்டுதலாக உள்ளது.

எதிர்நீச்சலைக் கற்றுக்கொடுத்த தலைவர், அவரிடம் சரியாகக் கற்றுக் கொண்டிருக்கின்றார்களா இந்தத் தோழர்கள் என்பதற்கு இது ஒரு சோதனை ஓட்டம்.

இந்த சோதனை ஓட்டம் 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றது. அதற்காக நம்முடைய அன்பான எதிரிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்த வேண்டும். இன்னும் அது எத்தனை ஆண்டுகாலம் நடக்கும் என்று சொல்ல முடியாது.

இது ஒரு பரம்பரை யுத்தம் - 

தத்துவார்த்தப் போர்! 

ஏனென்றால், இது ஒரு பரம்பரை யுத்தம்.

இது தத்துவார்த்தப் போர்.

இந்தத் தத்துவார்த்தப் போரிலே, எவ்வளவு காலம் உங்களுடைய இயக்கம் இருக்கும் என்று கேட்டபொழுது,

கடைசி மூடநம்பிக்கைக்காரன்

கடைசி ஜாதி வெறியன்

கடைசி பெண்ணடிமைக்காரன்

கடைசி ஆதிக்கவாதி

கடைசி அரசியல் ஏகபோகவாதிகள்

இவர்கள் இருக்கின்ற வரையிலே, இந்தக் கொள்கை இருக்கும் - கொள்கையின் தேவை இருக்கும் - அதனுடைய பணி தொடரும்.

இதுதான் அய்யா அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிற, சொல்லிவிட்டுப் போயிருக்கிற ஒரு செய்தி.

எனவே, அவருடைய கருத்துகளை சொல்லுவதற்கு, அய்யா அவர்கள் இந்த அமைப்பை உருவாக்கி யிருக்கிறார்கள்.

இது கடந்த பாதைகளைப்பற்றி சொல்லுகின்ற நேரத்திலே, இன்றைக்கும், நாளைக்கும் என்னுடைய பொழிவு எந்தப் பகுதிக்கு உரியது என்று சொன்னால் நண்பர்களே,

‘விடுதலை’யைப் படிக்காதவர்களிடமும், இதுவரை ‘விடுதலை’யைப் பார்க்காதவர்களிடமும் போய்ச் சேரவேண்டியது அவசியம்!

60 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பணி யாற்றியதற்காக  60 ஆயிரம் சந்தாக்கள் தருவது - எனக்கு நன்றி செலுத்துவதைவிட, முக்கிய கட்டாயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் ‘விடுதலை’யைப் படிக்காதவர்களிடமும், இதுவரை ‘விடுதலை’யைப் பார்க்காதவர்களிடமும் போய்ச் சேரவேண்டியது அவசியம், தலையாய கட்டாயம் இருக்கிறது.

ஏனென்றால், எங்கு பார்த்தாலும் மதவெறி படமெடுத்தாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி வெறியை மீண்டும் மீண்டும் புகுத்துகிறார்கள்.

அண்மையில் கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வைப்பற்றி சொல்லும் பொழுது, இன்றைக்கு வெளிவந்துள்ள ஒரு ஆங்கில நாளேட்டில், இன்னின்ன ஜாதிக்காரர்கள் என்று - ஜாதி வாரியாக ஏதோ கலவரம் நடைபெற்றதுபோல ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ‘விடுதலை’யினுடைய பணி இருக்கிறதே, அது மகத்தானது.

வாழ்நாள் முழுவதும், இராணுவம் தயாராக இருக்கவேண்டும்; எதிரிகள், எப்பொழுது எந்தப் பகுதியிலிருந்து நுழைவார்கள் என்பதுபற்றி அவர்கள் விழி மூடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கவேண்டும். 

மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள் - இராணுவத்தினர் விழித்துக் கொண்டிருப்பார்கள்.

மற்றவர்கள் பணியாற்றாமல் இருக்கலாம் - ஆனால், காவல்துறையினர் ரோந்து சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

தந்தை பெரியார் தந்த பேராயுதம்தான் - போராயுதமான ‘விடுதலை’

அதுபோன்ற பணிதான் திராவிடர் கழகத்தினு டைய பணி. அதற்கான பேராயுதம்தான்,  தந்தை பெரியார் தந்த போராயுதமான ‘விடுதலை’ என்பதாகும்.

ஆகவே, அருமை நண்பர்களே, இந்த ‘விடுதலை’ ஏடு என்பதற்கு என்ன தனிச் சிறப்பு.

நீதிக்கட்சி, ‘திராவிட மாடலுக்கு’ முன்னோடி அதுதான். அஸ்திவாரம் - அதனுடைய முதல் பகுதி - பரிணாம வளர்ச்சியிலே.

அந்த நீதிக்கட்சி என்பது பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் தொடங்கப் பெற்ற 1916 இல் தொடங்கி, பிறகு 1917 இல் அறிக்கை வெளியிட்டு, பிறகு 1920 இல் தேர்தலில் வெற்றி பெற்று, நான்கு முறை ஆட்சிக் கட்டி லில் இருந்தது. இதில் மூன்று முறை வெற்றி பெற்றவர் களாகவும், ஒருமுறை எதிர்க்கட்சியாகவும் இருந்தது.

இவ்வளவு செல்வாக்குள்ள ஓர் அமைப்பு - நிறைய படித்த நண்பர்களைப் பெற்ற அமைப்பு - பெரும் செல்வந்தர்களைக் கொண்ட அமைப்பு.

படிப்பு - கல்வி - செல்வம் - பார்ப்பனரல்லாதார் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இருந்த பெருமை - இவை அத்தனையும் சேர்ந்த அன்றைய தேசியம் என்ற பெயராலே, பார்ப்பனியம் மிகப் பக்குவமாக, வெள்ளைக் காரர்களை வளைத்துத் தங்கள் காலடியிலே வைத்துக் கொண்டது.

அவர்களை மயக்கி, ‘மோகினி அவதாரம்‘ எடுத்து, அவர்களைத் தங்கள் வயப்படுத்திக் கொண்டார்கள்.

முன்னோடி தலைவர்களுக்கு 

நாம் நன்றி செலுத்தவேண்டும்!

இந்த சூது, சூழ்ச்சியை சுட்டிக்காட்டி, பார்ப்பனரல் லாதார் என்று சொல்லக்கூடிய ஒரு எதிர்மறைப் பெயரை வைத்துக்கொண்டு போராடிய நம்முடைய முன்னோடி தலைவர்களான டாக்டர் நாயர், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பொப்பிலி அரசர் போன்றவர்கள் - இன்னும் எண்ணற்ற தலைவர் கள் அத்துணை பேருக்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்தவேண்டும்.

நீதிக்கட்சியினுடைய திராவிடர் ஆட்சி - இன்றைக் கும் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியை - வெறுக்க வேண்டிய அளவிற்குப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இத்தனைக்கும் வேகமாகப் போகவில்லை; போக வேண்டிய அளவிற்குப் போகவில்லை - அதுதான் எங்களுடைய மதிப்பீடு.

முதலமைச்சர் அவர்கள் எல்லோரையும் அணைத்து, அரவணைத்துப் போகிறார்!

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோரையும் அணைத்து, அரவணைத்துப் போகிறார். இருந்தும் அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

காரணம், பெரியாரைச் சொல்லுகிறாரே, அண்ணா வழி என்று சொல்லுகிறாரே, கலைஞர் விட்ட பணியை செய்கிறாரே என்று சொல்லும்பொழுதுதான், அவர்கள் ஆத்திரத்தினுடைய எல்லைக்குப் போகிறார்கள்.

இவ்வளவு நாள் இவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தோமே - நாம் வெற்றி பெற்றுவிட்டோம், பரம்பரை யுத்தத்தில் என்று - நம்முடைய ஆட்களை வைத்துக்கொண்டு, நம்முடைய நிரந்தர அடிமைகளை வைத்துக்கொண்டு, நம்முடைய சிரஞ்சீவி பீஷ்மரை வைத்துக்கொண்டு திராவிடத்தை வீழ்த்தலாம் என்று நினைத்தோமே - இப்பொழுது அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லுகின்ற நேரத்தில், அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது.

எனவேதான், மற்ற காலகட்டங்களைவிட, இப் பொழுது ‘விடுதலை’ போன்ற ஏடுகள், அறிவாயுதங்கள், பெரியார் தந்த போராயுதத்தினுடைய வீச்சுகள், அதனுடைய கூர்முனை மழுங்காமல், அவற்றை செயல்படுத்தவேண்டிய கட்டம்.

இந்த அறிவுப் போரிலே,

‘‘வயதில் அறிவில் முதியார்

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்’’

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

நாம் ஒவ்வொருவரும் வயதைப் பொருட்படுத்தாமல், வாய்ப்பைப் பற்றி சிந்திக்காமல், இழப்பை எண்ணாமல் இந்த சமுதாயத்தைக் காப்பாற்றவேண்டும்.

மக்களுக்கு விழிப்புணர்வை 

ஏற்படுத்தவேண்டும்

அதற்கு நம் பங்களிப்பு என்ன என்று நினைக்கின்ற நேரத்தில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த விழிப்புணர்வுக்கு இன்றைய கால கட்டத்திலே, இதுபோன்ற ஏடுகள், இதழ்கள், பிரச் சாரங்கள் மிகவும் முக்கியம்.

இன்னமும் நாளேடுகளில் செல்வாக்குள்ளவைகளும் இருக்கின்றன. நம்முடைய நாளேடுகளுக்கு விளம்பரம் கொடுக்கிறார்களா? இந்தக் கொள்கைகளை விளம் பரப்படுத்துகிறார்களா? 

எவ்வளவு திரிபுவாதங்கள்?

எவ்வளவு விஷமத்தனமான கருத்துகள்?

இவையெல்லாம் இருக்கின்றன.

எனவேதான், நம்முடைய ஆட்களைப் பிடித்து, கூலிகளைப் பிடித்து, காலிகளைப் பிடித்து, அவர் களுக்குக் காவி சாயத்தைப் பூசி, பூசாமலும், நா கூசாமலும், அவர்களை விலைக்கு வாங்கி, பல்வேறு ரூபத்திலே அவர்களை அனுப்பி, இந்த இனத்தின் மாண்பை, மானத்தை, மான மீட்பரை எதிர்த்து, பல வகையான இடங்களிலே திசை திருப்புகிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல நாளேடுகள் உள்ளனவா? கொள்கை ஏடுகள் உள்ளனவா?

ஒரு ‘விடுதலை’, ஒரு ‘முரசொலி’தானே இருக்கின்றன.

வேறு பத்திரிகைகள் இருக்கின்றனவா?

‘விடுதலை’யைப் பார்த்து, இன்னும் விடுதலை வெளிவருகிறதா? என்று கேட்கக்கூடிய பெருமக்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்.

கொள்கைச் செய்திகள் சேரவேண்டிய இடத்திற்குப் 

போய்ச் சேர்ந்தால், மாற்றம் நிகழும்

அதேபோல, ‘முரசொலி’யா, ஓகோ, கலைஞ ரோடு நின்றுவிடும் என்று நினைத்தவர்கள், இன் றைக்கு ஆளுங்கட்சி ஏடு என்று பார்க்கக்கூடிய வர்களும் இருக்கிறார்கள்.

மக்களுக்குத் தேவையான கருவிகள் இவை யெல்லாம் - அறிவுக் கருவிகள் இவை. அதில் வெளிவரக்கூடிய செய்திகள் கொள்கைச் செய்திகள் சேரவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தால், மாற்றம் நிகழும்.

இவையெல்லாம் சாதாரண செய்தி ஏடுகள் அல்ல நண்பர்களே - எப்படி ஒரு விஷத்தை மற்றவர்கள் ஏற்றி னால், அதற்கு அந்த விஷ முறிவு மூலிகை மூலமாக, விஷ முறிவு மருந்துகள் மூலமாக அதை அப்படி  இறக்க முடியுமோ, அந்தப் பணியை செய்வதுதான் திராவிட இயக்க ஏடுகள்.

இந்த இடத்திலேதான், வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தக் காணொலியினுடைய நோக்கம், வெறும் ‘விடுதலை’க்குச் சந்தா சேருங்கள் மட்டும் என்பதல்ல - சேர்க்கவேண்டும் - ‘விடுதலை’க்காக அல்ல.

நான் அடிக்கடி சொல்லுகின்ற உதாரணத்தை ஒரு வரியிலே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்,

மருந்து சாப்பிடுகிறவர்கள், மருத்துவருக்காகவா மருந்து சாப்பிடுகிறார்கள்.

மருந்தைக் கண்டுபிடித்தவர்களுக்காகவா, மருந்து சாப்பிடுகிறார்கள்.

மருந்துக் கடைக்கு வியாபாரம் நடக்கவேண்டும் என்ற கருணைக்காகவா, மருந்து சாப்பிடுகிறார்கள்.

இல்லை; தங்கள் நோயைப் போக்கிக் கொள்ள.

அதுபோல, திராவிட இயக்க ஏடுகளை, குறிப்பாக ‘விடுதலை’ போன்ற கொள்கை ஏடுகளை நீங்கள் வாங்கவேண்டும் - படிக்கவேண்டும் - பரப்பவேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம் என்றால்,

அது எங்களுக்காக அல்ல -

எங்கள் எழுத்துகளை நீங்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக அல்ல -

எங்கள் எழுத்துகளைப் படித்து, எங்களுடைய திறமைகளை உச்சத்திற்குக் கொண்டுபோய், எங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல -

இந்த நாட்டில் வந்திருக்கின்ற நோயை நீங்கள் முதலில் புரிந்துகொண்டு, நோய் நாடி, நோய் முதல்நாடக் கூடிய ஆற்றலையும், அறிவையும் பெறுவதற்கு இது தான் ஒரே கருவி. இதுதான் ஒரே முறை.

அந்த முறையை நீங்கள் பின்பற்றி உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் செய்வது 

‘திருப்பணி’யல்ல - தெருப் பணி!

தடுப்பூசி எதற்காக?

ஊசி போடுகிறவருக்கா?

அல்ல நண்பர்களே, ஊசி போடுகிறவருக்குத் தடுப்பூசியினால் பயனில்லை. யார் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறார்களோ, அந்த மருந்து யார் உடலில் செல்லுகிறதோ அவருக்காக - அது போலத்தான் நாங்கள் எங்களுடைய பணியை செய்துகொண்டிருக்கின்றோம்.

இந்தப் பணி ‘திருப்பணி’யல்ல - தெருப் பணி!

அந்தப் பணியை நாங்கள் தெளிவாக செய்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய உரையில், நான் ஒரு பகுதியை முக்கியமாக உங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

அது என்னவென்றால்,

முதலில் நம்முடைய ஏடுகள் நடந்தன - நீதிக்கட்சி ஏடுகள் - திராவிட மாடலுக்கு அடிக்கல்.

(தொடரும்)


No comments:

Post a Comment