‘விடுதலை’ 60 ஆண்டுகாலம் என்பது நீங்கள் எல்லாம் அறிந்த வரலாறு - அதை எளிமையாகச் சொல்லிவிடலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

‘விடுதலை’ 60 ஆண்டுகாலம் என்பது நீங்கள் எல்லாம் அறிந்த வரலாறு - அதை எளிமையாகச் சொல்லிவிடலாம்

அதற்கு முன்பு இருந்த 28 ஆண்டுகாலம் இருக்கிறதே, அதுதான் மிகப்பெரிய ஆபத்தான காலம்; எதிர்நீச்சலினுடைய உச்சக்கட்டம்!

காணொலிமூலம் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஜூலை 30  ‘விடுதலை’ 60 ஆண்டுகாலம் என்பது நீங்கள் எல்லாம் அறிந்த வரலாறு. அதை எளிமையாகச் சொல்லிவிடலாம். அதற்கு முன்பு இருந்த 28 ஆண்டுகாலம் இருக்கிறதே, அதுதான் மிகப்பெரிய ஆபத்தான காலம். எதிர்நீச்சலினுடைய உச்சக்கட்டம். இன்னமும் எதிர்நீச்சல் இருக்கிறது - நாளைக்கும் எதிர்நீச்சல் இருக்கும் - இருக்கத்தான் செய்யும் - ஏனென்றால், இந்தக் கொள்கையினுடைய தன்மை அப்படிப்பட்டது என்றார் 60 ஆண்டுகால ‘விடுதலை ஆசிரியர் - திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள்.

‘விடுதலை’யின் எதிர்நீச்சல் - 

காணொலி சிறப்புக் கூட்டம்

கடந்த 25.7.2022 அன்று மாலை ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பணக்காரர்களின் கட்சி - ஜமீன்தாரர்களின் கட்சி என்று பெயர் எடுத்த கட்சி

‘திராவிடன்' இதழுக்காக வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. இத்தனைக்கும் மூன்று முறை ஆட்சியில் இருந்த கட்சி - அது பணக்காரர்களின் கட்சி - ஜமீன்தாரர் களின் கட்சி என்று பெயர் எடுத்த கட்சி - அப்படி இருக்கின்ற நேரத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழல்.

ஆகவே, 1932 இல் அந்தப் பத்திரிகை வெளி வரவில்லை.

‘சண்ட மாருதம்' என்ற ஒரு இதழை ஆரம்பித்தார்கள்.

பிறகு, பெரியாரைப் பார்த்து கேட்கிறார்கள், நீங்கள் தான் தினசரி பத்திரிகையை தொடங்கவேண்டும் என்று.

நான் தினசரியை ஆரம்பிக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

ஏனென்றால், பெரியார் அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். யார் யார் உதவி செய்கிறோம் என்று சொன்னார்களோ, அவர்கள் சொன்னபடி செய்யவில்லை.

தொடக்கத்தில் கொஞ்சம் உதவி செய்தார்கள்; பிறகு அந்த உதவியைத் தொடரவில்லை.

அந்தப் பொறுப்பைத் தலையில் போட்டுக்கொண்ட பெரியார், இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டார்.

காலையில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார் என்றால், இரவு 10 மணிவரையிலும் இருக்கிறார். அதைப் பற்றி பெரியார் அவர்கள் எழுதுகிறார், அதைப் படித்தால் கண்களில் கண்ணீர் வரும்.

உடலுழைப்பைக் கொடுக்கிறார்; பொருள் நட்டம்.

இவ்வளவையும் தாண்டி பத்திரிகையை நடத்த முடியவில்லை என்று சொல்லும்பொழுது, நீங்கள் யாராவது நடத்துங்கள்; நான் கொள்கை ஆதரவாளனாக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

‘சண்ட மாருதம்‘ என்ற பத்திரிகை வாரப் பத்திரிகை யாக பொன்னம்பலனார் அவர்களின் தலைமையில் நடந்தது. லால்குடியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட் டில் கூடியவர்கள், பெரும்பாலும் நகரத்தார்கள், செட்டி யார்கள், மற்றவர்கள் எல்லோரும் என்ன சொன்னார்கள் என்றால்,

நமக்கு ஒரு பத்திரிகை வேண்டும்; அதை நீங்கள் நடத்தினால்தான் சரியாக இருக்கும் என்று சொல் கிறார்கள்.

என்னால் நடத்த முடியாது என்று அய்யா சொல்கிறார். ஏனென்றால், ஏற்கெனவே அவருக்கு அனுபவம் உள்ளதால்.

 பெரியாரிடம், ‘‘நீங்கள் கொள்கை ஆசிரியராக இருங்கள்’’ என்றனர்!

‘‘இல்லை, இல்லை நீங்கள்தான் நடத்தவேண் டும். நாங்கள் ஒவ்வொருவரும் 500 ரூபாய் போட்டு, லிமிடெட் கம்பெனி நடத்துகிறோம். சரி, சோ.முரு கப்பா அவர்கள் அதற்குப் பொறுப்பேற்பார்கள். நீங்கள் கொள்கை ஆசிரியராக இருங்கள்’’ என்று சொல்கிறார்கள்.

சரி, கொள்கை ஆசிரியராக வேண்டுமானால் நான் அறிவுரை வழங்குகிறேன் என்று பெரியார் சொல்கிறார்.

கொஞ்ச காலத்திற்கு திருச்சியில் பொன்னம்பலனார் நடத்திய ‘சண்ட மாருதம்' பத்திரிகையை வாங்கி நடத்தினார்கள்.

அதற்குப் பிறகுதான் ‘விடுதலை’ வருகிறது.

‘விடுதலை’ என்று வருகிற நேரத்தில் நண்பர்களே, நீதிக்கட்சி - அதுதான் ‘விடுதலை’ நாளிதழை நடத்தியது.

நீதிக்கட்சியின் சார்பில் இரண்டாண்டுகள்தான் அந்தப் பத்திரிகையை நடத்த முடிந்தது.

மாறான செய்திகளை மறுத்துச் சொல்வதற்கு இடமில்லை.

இத்தனைக்கும் அவர்களுடைய ஆட்சி - 1935 ஆம் ஆண்டோடு 'திராவிடன்' நாளேடு நின்றுபோய்விட்டது.

‘சண்ட மாருதம்‘ இதழும் வெளிவரவில்லை.

நீதிக்கட்சியினாலும் நடத்த முடியவில்லை!

அதற்காக விடுதலையைக் கொண்டு வருகின்ற நேரத்தில்,  1935 ஆம் ஆண்டு வெளிவந்த நேரத்தில், நீதிக்கட்சியினாலும் நடத்த முடியவில்லை.

அப்பொழுது அதனை பெரியார் அவர்கள் பொறுப் பேற்று நடத்துகின்ற நேரத்தில்தான், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் - சரி, அதனை நடத்தவேண்டும் என்பதற்காக - ஈரோட்டில், ‘குடிஅரசு’ இதழோடு சேர்த்து நடத்துகிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்து,

அதற்கு உதவி செய்கிறோம், நீங்கள் நடத்துங்கள் என்று சொன்னவர்கள், அந்த உதவி மிகப்பெரிய அளவில் இல்லை என்று வந்த நேரத்தில்,

காலணா என்று விளம்பரப்படுத்தப்பட்டு, முதலில் வாரப் பத்திரிகையாக இருந்து, பிறகு நாளிதழான சூழ்நிலையில், மீண்டும் 1937 இல் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் நண்பர்களே,

5 நாள்கள், ஈரோட்டிலிருந்து வரக்கூடிய அளவிற்கு, மலர் -3, இதழ் -5 என்று ஆரம்பிக்கிறார்.

மிகப்பெரிய ஆபத்தான காலம்!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, 60 ஆண்டுகாலம் என்பது நீங்கள் எல்லாம் அறிந்த வரலாறு. அதை எளிமையாகச் சொல்லிவிடலாம். அதற்கு முன்பு இருந்த 28 ஆண்டுகாலம் இருக்கிறதே, அதுதான் மிகப்பெரிய ஆபத்தான காலம்.

எதிர்நீச்சலினுடைய உச்சக்கட்டம். இன்னமும் எதிர்நீச்சல் இருக்கிறது - நாளைக்கும் எதிர்நீச்சல் இருக்கும் - இருக்கத்தான் செய்யும் - ஏனென்றால், இந்தக் கொள்கையினுடைய தன்மை அப்படிப் பட்டது.

ஆகவே, எதிர்நீச்சல் இருக்கத்தான் செய்யும் - அதற்கு நாம் பயிற்சி பெற்றுவிட்டோம்.

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் தான் என்ற உணர்வை நாம் பெற்றிருக்கின்றோம்.

அந்த வகையில், 5 நாள்கள் நடக்கிறது.

ஒரு திரைப்படம் வெற்றிகரமான மூன்றாவது நாள் என்று போடுவார்கள் அல்லவா, அதுபோன்று

‘‘நமது ‘விடுதலை’, அய்ந்து நாள் அனுபவம்!’’

அய்யா எழுதுகிறார், ‘‘நமது ‘விடுதலை’, அய்ந்து நாள் அனுபவம்'' என்று ஒரு தலைப்பு.

‘‘தமிழ்ப் பெருமக்களின் ஆவலையும், ஆதரவையும் கைமுதலாகக் கொண்டு ஈரோடு என்ற சிறு பட்டணத்தில், ஒரு தினசரி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.''

இதுதான் நண்பர்களே, இன்றைக்கும் தேவை. அன்றைக்கு அது ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், மிகப்பெரிய அளவிற்கு எவ்வளவு தேவையோ, அது இன்றைக்கும் தேவை.

எப்படி ஒரு பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிந்தது என்றால், தொடர்ந்து நட்டம்தான்.

மக்களைத் தங்கள் பின்னாலே அழைத்துப் போகக்கூடிய பத்திரிகை

விளம்பரங்கள் கிடையாது; கவர்ச்சிகரமான செய்திகள் கிடையாது; பரபரப்பு செய்திகள் கிடை யாது. அதேநேரத்தில், மூடநம்பிக்கை செய்திகளும் கிடை யாது.

‘விடுதலை’யினுடைய கொள்கை என்ன?

‘விடுதலை’, மக்கள் பின்னால் செல்லக்கூடிய பத்திரிகை அல்ல.

மக்களைத் தங்கள் பின்னாலே அழைத்துப் போகக் கூடிய பத்திரிகையாகும்.

பத்திரிகையின் கொள்கையாக இதனை வித்திட்டார்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கொள்கையில் சமரசம் கிடையாது.

யாருடைய மனம் புண்படுகிறது என்பதைப் பற்றி கவலைப்படுகின்ற நேரத்தில், அதற்கு விளக்கம் சொன்னார்.

வலி என்று வரக்கூடிய நோயாளிக்கு, ஊசி போடுகிறார், அறுவைச் சிகிச்சை செய்கிறார் மருத்துவர்.

அதிலே கடினம் இருக்கிறது; வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், அதற்குப் பிறகு அவன் குண மாகிறான்.

ஒன்று அரசியலில் செய்கிறது - 

திராவிடர் கழகம் சமுதாயத்தில் செய்கிறது!

அதுதான் முக்கியம்.

அந்தப் பணியைத்தான் ‘விடுதலை’ ஏடு செய்து கொண்டிருக்கிறது - 

அந்தப் பணியைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது-

அந்தப் பணியைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்தது-

அந்தப் பணியைத்தான் திராவிடர் இயக்கம் செய்கிறது - ஒன்று அரசியலில் செய்கிறது - திராவிடர் கழகம் சமுதாயத்தில் செய்கிறது.

அதை செய்வதற்கு இந்த ஏடுதான் மிக முக்கியம். ஏனென்றால், அவர்களுக்குள்ளே ஒரு சில எல்லைகள் உண்டு.

அதற்கு முன்னால், எங்கெங்கெல்லாம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றன என்றெல்லாம் பார்த்து, அடையாளம் காட்டவேண்டியது இந்த ஆயுதத்தின் மூலம்தான் - இந்தக் கருவியின் மூலம்தான்.

எனவே, ‘விடுதலை’யினுடைய பணி என்பது - அது சாதாரணமான பணியல்ல, மிகப்பெரிய பணியாகும்.

எனவே, ‘விடுதலை’ முதலில் இரண்டாண்டு காலம் நிறுத்தப்பட்டு, பிறகு அது தந்தை பெரியார் அவர்களின் கைகளுக்கு வந்த பிறகுதான், அது நாளேடாக வந்தது.

அந்த நேரத்தில், அய்யா அவர்கள் இளைஞர்களை நம்பினார். அப்படி வருகின்றபொழுது நண்பர்களே, அருமையான இளைஞர்களையெல்லாம் அவர்கள் பயன்படுத்தினார்.

இளைஞர்கள் மத்தியில்தான் அவர்கள் இருந்தார்கள். நல்ல படித்தவர்களையெல்லாம் பயன்படுத்தினார்கள். நிறைய மொழி பெயர்ப்பவர்களையெல்லாம் உருவாக் கினார்கள்.

ஈரோட்டில் ‘விடுதலை’ நடந்த நேரத்தில், 1936 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் சென்று, தந்தை பெரியார் அவர்களை சந்திக்கின்றார், திருப்பூரில்.

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதில் பெரியாருக்கு நிகர் பெரியார்தான்!

அண்ணாவின் உரையினால் ஈர்க்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், அண்ணாவைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து, இளைஞரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதில், பெரியாருக்கு நிகர் பெரியார்தான்.

பல பேருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் தெரியாது. பெரியார் அவர்கள், மற்றவர்களை ஊக்கப்படுத்த மாட் டார் என்றெல்லாம் தவறான ஒரு விஷமப் பிரச்சாரம் நடந்தது. இப்பொழுது புரிந்துகொள்கிறார்கள் மக்கள்.

அண்ணா அவர்கள், 1936 இல் அந்த வாய்ப்புகளைப் பெற்று, 1938 இல் ஈரோட்டில் - ‘விடுதலை’யில் பணியாற்றச் செல்கிறார்.

எனவே, மூன்றாண்டுகள் ‘விடுதலை’யில் பணியாற்றி விட்டு, பிறகு அய்யாவினுடைய ஒப்புதலோடு திராவிட நாடு இதழ் நடத்துவதற்காக காஞ்சிபுரம் செல்கிறார். 1941 இல் திராவிட நாடு இதழைத் தொடங்குகிறார்.

விடுதலைக் களம் - 

பயிற்சிக் களம் - பாசறை!

எனவே, ‘விடுதலை’ என்பது இருக்கிறதே, அது பல பேருக்குப் பயிற்சி பட்டறையும்கூட.

அண்ணா போன்றவர்கள், தன்னுடைய எழுத்துகளை சரளமாக எழுதி, இவ்வளவு பெரிய சிந்தனையாளராக வருவதற்கு, விடுதலைக் களம் - பயிற்சிக் களம் - பாசறை.

கலைஞர் அவர்கள் ‘விடுதலை’யில் எழுதிய நேரத் தில், தந்தை பெரியார் அவர்கள் பாராட்டி இருக்கிறார்.

அண்ணாவைப் பாராட்டுவதற்காக மாடிக்குச் சென்று பாராட்டினார் என்பதெல்லாம் உங் களுக்குத் தெரிந்ததே!

எனவேதான், பாராட்டி, வேலை வாங்குபவர்களிடம் வேலை வாங்கி, ஒரு குருகுலம் போன்று நடத்தினார்.

பயன்படுத்த வேண்டியவர்களின் அறிவை அடையாளம் கண்டார்கள்.

எதிர்நீச்சல் அடிப்பதற்கு 

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை

இளைஞர்களைத் தட்டிக் கொடுத்தார்கள். எதிர்நீச்சல் அடிப்பதற்கு அவர்கள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை.

அண்ணாவிற்கும், பெரியாருக்கும் 30 ஆண்டுகள் இடைவெளி.

அதேபோன்று, எங்களுடைய வயது இடைவெளி என்று சொன்னால், வயது இடைவெளியே இல்லாமல் பணியாற்றியவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டதினால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய அஸ்திவாரம்.

கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், தவமணிராசன், ஏ.பி.ஜெனார்த்தனம் போன்றவர்கள். 

கே.எம்.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள், நம்மு டைய ஆசிரியர் குருசாமி போன்றவர்கள், குஞ்சிதம் போன்றவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பெரியார்.

அவர்களாகப் பார்த்து வெளியேறவேண்டும் - அல்லது வெளியில் வேறு வாய்ப்புகள் இருக்கிறது என்று சொன்னால், மகிழ்ச்சியோடு அனுப்பி இருக்கிறார் தந்தை பெரியார்.

அடுத்தவர்களைத் தயாரிப்பார். இது ஒரு மாற்றுப் பண்ணை.

எனவே, ‘விடுதலை’ எதிர்நீச்சல் களம் மட்டும் அல்ல நண்பர்களே, அது ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான - இளம் நாற்றுகளை வாரி எடுத்து, மற்ற இடங்களில் நடுவார்களே - அதுபோல, அந்த நாற்றுகளாக மற்றவர் களை உருவாக்குவதும் சரி - எதிரிகளாக அவர்கள் பிற்காலத்தில் வரும்போதும் சரி - பிறகு அவர்களே ஆசிரியர்களாக, நிர்வாகிகளாக, நாட்டை நடத்தக் கூடிய வர்களாக - இந்தக் கொள்கைகளுக்கு சட்டம் வகுக்கக் கூடிய அளவிற்கு ஆற்றல் வந்தது என்றால், அந்தக் களம் எங்கே இருந்து தொடங்கியது என்றால், இந்தப் பயிற்சிக் களம் பாசறையில் இருந்துதான் தொடங்கியது.

வாளாகவும் பயன்பட்டு இருக்கிறது - கேடயமாகவும் பயன்பட்டு இருக்கிறது

எனவே, ‘விடுதலை’யினுடைய ஆற்றல் என்பது அது வாளாகவும் பயன்பட்டு இருக்கிறது - கேடயமாகவும் பயன்பட்டு இருக்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைக்குரிய ஆக்கங்களாகவும் உருவாகி இருக் கிறது.

அதனுடைய தாக்கங்கள்தான் திராவிட மாடலாக இன்றைக்கும் இருக்கிறது.

நாளைக்கு இன்றைய ‘விடுதலை’யைப்பற்றி நான் விரிவாக சில முக்கிய செய்திகளைத் தொட்டுக் காட்டுகிறேன்.

என்னை அறியாமல் கண்ணீர் சிந்தக்கூடிய அளவிற்கு இருக்கிறது

ஏனென்றால், இது ஒரு நீண்ட காலம் - 28 ஆண்டு கால வரலாறு இருக்கிறதே - ஒவ்வொரு நாளும் நாம் படிக்கின்றபொழுது, நானே படிக்கின்றபொழுது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

இந்த அளவிற்கு ஒரு மனிதர் தாங்க முடியுமா? என்று நினைக்கும்பொழுது, நாம் செய்வது ஒரு சாதாரண பணி.

1000 வாட்ஸ் பல்பு வந்த காலகட்டத்திற்குப் பிறகு, சில மெழுகுவத்திகளை வைத்தால் எப்படி இருக்கும்?

ஒரு சிறிய மெழுகுவத்திகள் போன்றவர்கள்தான் நாம்.

எனவேதான், 60 ஆண்டுகால பணிகள் என்பதை ஒரு பெரிய விஷயமாக சொல்லமாட்டேன். இது ஒரு மெழுகுவத்தி போன்றதுதான்.

ஆனால், அது தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற அளவிற்கு வாய்ப்புகள் வரவேண்டும்.

60 ஆயிரம் சந்தாக்கள் என்பதற்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்

எனவே நண்பர்களே, 60 ஆயிரம் சந்தாக்கள் என்பதற்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.

எனக்கு நன்றி காட்ட அல்ல நண்பர்களே,

இந்த நாட்டைக் காப்பாற்ற -

நம் இனத்திற்கு வரக்கூடிய ஆபத்துகள் - மிகப்பெரிய ஆபத்துகள்.

மதவெறி ஆபத்து

ஜாதி வெறி ஆபத்து

மூடநம்பிக்கை ஆபத்து

சனாதனம் என்ற பெயராலே -

இந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றவேண்டுமானால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

பொதுக்கூட்டங்களுக்குப் பல நோய்கள் காரணமாக இப்பொழுது தடைகள் ஏற்பட்டு இருக்கின்றன. பொதுக்கூட்டங்கள் கேட்கின்ற மக்களுடைய மனப்பான்மைகூட இப்பொழுது மாறியிருக்கிறது.

‘‘இல்லந்தோறும் விடுதலை - 

நம் உள்ளந்தோறும் பெரியார்!’’

இந்தக் காலகட்டத்தில், வீடுதோறும் கருத்துகள் போய்ச் சேரவேண்டும் என்றால், ‘விடுதலை’ உள்ளே நுழைய வேண்டாமா?

எனவேதான்,

‘‘இல்லந்தோறும் விடுதலை -

நம் உள்ளந்தோறும் பெரியார்!’’

என்ற கருத்துகள் பரவுவது அவசியம்.

மேலும் நாளை சந்திப்போம்!

இதுவரை அறியாத செய்திகளை, மற்றவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத் திரட்டப்பட்ட செய்திகளை இந்த அறிவார்ந்த அவையினர் முன் வைத்திருக்கின்றேன்.

இதைக் கேட்ட நீங்கள் மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.

இதைக் கேட்ட நீங்கள், ‘விடுதலை’க்கு சந்தாக்களை சேர்த்து வழங்குங்கள்.

‘விடுதலை’க்குச் சந்தாக்களை அனுப்புங்கள்!

நீங்கள் என்னைப் பாராட்டவேண்டாம் - எங்களை ஊக்கப்படுத்தவேண்டாம் - ‘விடுதலை’க்குச் சந்தாக்களை அனுப்புங்கள்.

எங்களுக்கு சால்வை வேண்டாம், போர்வை வேண்டாம், பொன்னாடை வேண்டாம் - 

புதிய சந்தாக்களை - ‘விடுதலை’யைப் படிக்காதவர்களை படிக்கும்படியான உணர்வை உண்டாக்குங்கள்.

அதுதான் தடுப்பூசி போன்றது -

கரோனாவைத் தொற்றைத் தடுப்பது போன்றது -

குரங்கம்மையைத் தடுப்பது போன்ற மிக முக்கியமான பணி!

வாழ்க பெரியார்!

வளர்க ‘விடுதலை’!

நன்றி, வணக்கம்!

- - இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment