பாராட்டத்தக்க தலையங்கம் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

பாராட்டத்தக்க தலையங்கம் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

ஜாதி என்பது பண்டைய காலங்கள் முதலே இருந்து வந்திருக்கிறது. அவ்வையார் கூட, "ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்" என்று பாடியதில் இருந்தே, அவர் காலத்திலேயே ஜாதி இருந்தது உறுதி யாகிறது. 

அந்தக் காலங்களில், ஜாதி என்பது ஒரு குடி அடையாளமாக இருந்திருக்கிறது. அதனால்தான், ஒவ்வொருவரும் தங்களை அடை யாளப்படுத்திக்கொள்ள, தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதியை குறிப்பிட்டுள்ளனர். மன்னர்கள், இலக்கியங்களை படைத்த பெரி யோர்கள்கூட தங்கள் குடி அடையாள பெயர்களை தங்கள் பெயர்களுக்கு பின்னால் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இப்போது ஜாதியில்லாத ஒரு சமுதாயத்தை படைக்கவேண்டும் என்று விரும்பினாலும், ஜாதியில்லாத ஒருநிலை உருவாகும் வரை இடஒதுக்கீடு என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும். அதற்கு, எந்தெந்த ஜாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற சரியான புள்ளிவிவரம் மிகமிக தேவையாகும். 

1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், "மக்கள் பிறவியில் ஜாதி பேதம் கிடையாது" என்று தீர்மானம் நிறைவேற்றிய தந்தை பெரியாரே, பின்னர் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார். அந்தநிலை முழுமையாக உருவாக வேண்டுமென்றால், ஒவ்வொரு ஜாதியிலும் மக்கள்தொகை எவ்வளவு என்பதை அறிய, ஜாதிவாரி கணக்கீடு நிச்சயமாக தேவை. 

மத்திய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டு எடுக்கவேண்டிய கணக்கெடுப்பில், "நிச்சயமாக ஜாதிவாரி கணக்கீட்டை சேர்க்க முடியாது. ஏனெனில், இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்" என்று தெரிவித்துவிட்டது. பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியதோடு, 11 பேர் கொண்ட அனைத்து கட்சி தூதுக்குழுவுடன் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 

என்றாலும், மத்திய அரசாங்கம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, இது பிரிவினை முயற்சி என்று தெரிவித்தாலும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இந்த பதிலை பீகார் அரசாங்கம் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, இப்போது மீண்டும் ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தைகூட்டி, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. அடுத்த நாளே மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.500 கோடியும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

நிதிஷ்குமார், "மாநில அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்படும். இதில் அனைத்து ஜாதி, அதன் உபஜாதிகள், மதம் போன்ற எல்லா விவரங்களும் இடம்பெற்றிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, ஒரு அதிகாரி கூறும்போது, "பீகார் அரசாங்கம் நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வழக்கமான கணக் கெடுப்பாக இருக்காது. ஏனெனில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய பட்டியலில் இருக்கிறது. நாங்கள் சட்ட சிக்கல் ஏற்படாமல் இருக்க ஜாதி அடிப்படையிலான கணக்கீடாக இதை நடத்துவோம்" என்றார். 

ஆக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசாங்கம் மறுத்தாலும், மாநில அரசுகள் நடத்த இப்போது தடையேதும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மாநில அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்ததுபோல, மற்ற ஜாதிகளின் கோரிக்கையையும் ஏற்க முடியும். 

இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் கொள்கை விளக்க குறிப்பில், "அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழுமையான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து நடத்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, மத்திய அரசாங்கம் முடியாது என்று சொல்லிவிட்ட சூழ்நிலையில், பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் முழுமையாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதே அனைத்து ஜாதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி: 'தினத்தந்தி' தலையங்கம் - 4.6.2022


No comments:

Post a Comment