நம்பிக்கை அளிக்கும் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

நம்பிக்கை அளிக்கும் விருது

மாற்றங்கள் மிக அரிதாகத்தான் நிகழ்கின்றன. திருநர் சமூகம் குறித்து மக்கள் மனங்களில் புரிதலை ஏற்படுத்தும் நோக்குடன் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட விருது அப்படியொரு அரிதான மாற்றம்தான்! திருநர் சமூகத்தினருக்காக இனி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு விருது வழங்கவிருக்கிறது. இந்த விருதை தூத்துக்குடியின் புதூர் பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு முதன்முதலாகப் பெற்றிருக்கிறார்.

திருநர் உரிமை கூட்டியக்கம் சார்பில் கிரேஸ் பானு நடத்தியிருக்கும் சட்டப் போராட்டங்களால் திருநர் சமூகமும் தனிப்பட்ட திருநங்கைகளின் வாழ்வும் செழித்திருக்கின்றன. பிரித்திகா யாஷினி, தாரிகா பானு, அனுசிறீ, ஆராதனா, தமிழ்ச்செல்வி ஆகிய திருநங்கைகளுக்கு அவர்கள் படிக்க விரும்பிய படிப்பும் பணியும் கிடைப்பதற்கு கிரேஸ் பானுவின் சட்டப் போராட்டங்களே பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன.

சட்டப் போராட்டத்தின் மூலமாகவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வை மாற்றுப் பாலினத்தவர் எழுதலாம் என்னும் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த திருநங்கை சுவப்னா, இந்தியாவின் முதல் திருநங்கையாக அந்தத் தேர்வை எழுதினார்.

சிறந்த திருநருக்காக தமிழ்நாடு அரசு விருது அறிவித்த முதல் ஆண்டே நான் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கைகளால் விருதைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருநருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு சார்ந்து நடத்திய சட்டப் போராட்டங்களில் இருக்கும் நியாயத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே இந்த விருதினை நான் பார்க்கிறேன். இப்படியொரு விருதை அறிவிப்பதற்குத் திருநர் சமூகத்தைச் சேர்ந்த பலரின் உழைப்பு காரணமாக இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் தலைவி மோகனாம்பாள் அவர்களின் உழைப்பும் பங்களிப்பும் நிறைய இருக்கிறது. அதோடு எண்ணற்ற சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பு காரணமாகவே, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசு இந்த உயரிய விருதைத் திருநர் சமூகத்தினருக்கு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் திருநர் சமூக மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நேர்மறைச் சிந்தனைகளுடன் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறார், கிரேஸ் பானு.

சமூகத்தில் திருநர்களுக்குத் தொடரும் பிரச்சினைகள், அதற்கான போராட்டங்கள், பாதிப்புகளை, பாதித்த சம்பவங்களைக் கட்டுரைகளாகவும் இவர் எழுதுகிறார். அப்படி வெளியான கட்டுரைகளைத் தொகுத்து திருநங்கை கிரேஸ் பானுவின் சிந்தனைகள் என்னும் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது டில்லியில் தனியார் மென் பொருள் நிறுவனத்தில் பணியிலிருக்கும் கிரேஸ் பானு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் திருநர் சமூக மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து, சட்டரீதியாகப் போராடிவருகிறார். இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அண்மையில் நடந்த காவலர் தேர்வில் நிறைய திருநங்கைகள் தேர்வு எழுதி, அவர்களில் இரண்டு, மூன்று பேர் தேர்வு செய்யப்படவில்லை. இது தொடர்பான சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகிறார் கிரேஸ் பானு.

No comments:

Post a Comment