வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 3 பேர் பணியிடைநீக்கம்

சென்னை,ஏப்.8-சென்னை வேளச்சேரி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வண்டியில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 3 பேரை சென்னை தேர்தல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மய்யத்தில் இருந்து நேற்று முன்தினம் 7.30 மணி அளவில் 3 ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை எடுத்து சென்றனர். இதை பார்த்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் சந்தேகமடைந்து பொதுமக்கள் உதவியுடன் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரையும் பொது மக்களிடம் இருந்து மீட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.1.12 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் சதி திட்டம் என்று கூறி வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டார்.

மேலும் திமுக கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.  பின்னர் காவல்துறையினர் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த இரு சக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு வந்தது இரண்டு மாநகராட்சி ஊழியர்கள், ஒரு மெட்ரோ வாட்டர் பணியாளர் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகளும் காவல் நிலையத்துக்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர், அப்போது, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மய்யத்திலிருந்த மாற்று இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பொறுப்பற்ற முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தவறு என தெரியவந்தது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் மற்றும் ஒரு மெட்ரோ வாட்டர் ஊழியர் என 3 பேரை சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷ் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக, இந்த 3 ஊழியர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

Comments