சிங்கப்பூர் சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 28, 2020

சிங்கப்பூர் சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

"பெரியார் ஒரு விஞ்ஞானத் தத்துவம்  - காலம் கடந்தும் வாழ்வார்!"


காணொலியில் தமிழர் தலைவர் கருத்துரை


* கலி. பூங்குன்றன்சிங்கப்பூர் பெரியார் சமூகசேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காணொலி மூலம் நேற்று (27.9.2020) இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் காலை 11.00) "பெரியாரின் தொலைநோக்குப் பார்வை" எனும் தலைப்பின் கீழ் சிறப்பான கருத்தரங்கமாக நடைபெற்றது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ. கலைச்செல்வம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.


இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி   சிறப்புரையாற்றினார்.


இன்றைய  இளைய தலைமுறையினருக்கு ஒரு அய்யம் ஏற்படலாம். சிங்கப்பூரில் ஏன் பெரியாரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கலாம். ஒன்றைச் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் 62ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.


இரண்டு முறை தந்தை பெரியார் சிங்கப்பூர் வந்துள்ளார். மலேசியாவோடு சிங்கப்பூர் இணைந்து இருந்தபோது 1929ஆம் ஆண்டில் ஒரு முறை வந்தார் - அன்னை நாகம்மையாரோடு. பிறகு 1954ஆம் ஆண்டில் அன்னை மணியம்மையாரோடு வந்திருந்தார்.


அந்த இரண்டு முறையும் தந்தை பெரியார் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குக் கூறிய அறிவுரைகளும், கருத்துகளும் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கியவை.


பிழைக்க வழி தேடி தமிழ் நாட்டிலிருந்து இங்கே வந்து இருக்கிறீர்கள். இந்த ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், சடங்குகள் இவற்றை அடியோடு மறந்து தொலைத்து விட்டு, வாழ்வில் முன்னேற வழி தேடுங்கள்.


இங்கு ஏதோ பிழைக்க வந்தோம், சம்பாதித்து விட்டு சொந்த நாட்டுக்குத் திரும்புவோம் என்று எண்ணாதீர்கள். இந்த நாட்டுக்காக உண்மையிலே நாணயமாக உழையுங்கள். சம்பாதியுங்கள். உங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல தொழிலாளிகளாக ஆக வேண்டும் என்று எண்ணாதீர்!


நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்கள் பெரிய விஞ்ஞானிகளாக ஆக வேண்டும் - பெரிய உத்தியோகங்களை வகிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் பேசினார் - அவர்கள் மத்தியிலிருந்தே அமைச்சர்களாக சிலரும் வந்தார்கள்.


சிங்கப்பூர் 'தமிழ்முரசு' ஏட்டில் அதன் துணை ஆசிரியராக இருந்தவர் வை.திருநாவுக்கரசு அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் சுற்றுப் பயணம் ஏற்படுத்திய விழிப்புணர்வு குறித்து 'தமிழ்முரசு' ஏட்டில் எழுதினார்.


தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கேட்டதற்குப் பிறகு தான் இங்கேயே தங்கி வாழ்வதா - சொந்த ஊருக்குத் திரும்புவதா என்று முடிவு செய்ய முடியாமல் மதில் மேல் பூனையாக இருந்த தமிழர்கள் ஒரு சரியான முடிவுக்கு வருவதற்குத் தந்த பெரியாரின் சுற்றுப் பயணம் மிகவும் பயன்பட்டது. பெரியாரின் அறிவுரை அவர்களுக்கு பயன்பட்டது. பெரும்பாலோர் அதனை ஏற்று இங்கேயே தங்கி வளம் பெற்றனர்.


பெரியார் பேச்சை ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்தனர். ஏற்காதவர்கள் தாழ்ந்தனர் - வீழ்ச்சி அடைந்தனர். என்பதுதான் வரலாறு. தமிழவேள் சாரங்கபாணி போன்றவர்கள் தமிழர்களின் வீட்டுக்கு எல்லாம் சென்று குடியுரிமைச் சீட்டைக் கொடுத்துப் பதிய வைக்க ஏற்பாடு செய்தனர்.


தந்தை பெரியாரின்  எழுத்துச் சீர்திருத்தத்தை அவரது நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். அரசு ஏற்று சட்டமாக்கிட, ஒரு வெளி நாட்டில் அதனை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட முதல் நாடு சிங்கப்பூர்தான் - அதன் ஆட்சித் தலைவர் லீக்வான்யூதான்!


தந்தை பெரியார் கொள்கைகளை ஆரம்பத்தில் இங்கு வரவேற்றவர்கள். 'குடிஅரசு' இதழை பரப்பியவர்கள்  - பெரியார் கருத்துக்களைத் தொடர்ந்து கொண்டு சென்றவர்கள் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களும், ஓ.இராமசாமி நாடார், அய்யாறு போன்றவர்கள் ஆவார்கள்.


சிங்கப்பூரில் கழகத்தை வளர்த்தவர்கள், தொண்டு செய்தவர்கள் கோ. சாரங்கபாணி, நடராசன், மூர்த்தி, முருகு சீனிவாசன், மயிலாடுதுறை தி. நாகரத்தினம், வீரையன் முதலிய தோழர்கள் ஆவார்கள்.


தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர் என்று மட்டும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் எதிர்த்தார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


மனித சமூகத்தில் பிறப்பால் உயர்வு - தாழ்வு கூடாது, நீ உயர்ந்த ஜாதி. இன்னொருவன் தாழ்ந்த ஜாதி என்ற நிலை கூடாது. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவம் நிலவ வேண்டும். பெண் என்றால் அடிமை, ஆண் என்றால் எஜமானன் என்ற நிலை கூடாது என்பதுதான் தந்தை பெரியாரின் நிலை. அதற்குத் தடையாக இருந்தவர்களை இருந்தவைகளை எல்லாம் எதிர்த்தார்.


மானுடப் பற்றுதான் தந்தை பெரியாரின் கொள்கை.


கொசுக் கடியிலிருந்து தப்பிக்க, கொசு வலை கட்டிக் கொண்டால் கொசு துவேஷி என்று சொல்லுவது போல் இருக்கிறது; தந்தை பெரியாரின்  எதிர்ப்பை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.


மானுடப் பற்று வளர்ச்சிப் பற்று என்பது தான் தந்தை பெரியாரின் பற்றுதல் ஆகும். மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றார். முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. யார் சொன்னாலும் சிந்தித்துப் பார் - நான் சொன்னாலும் அப்படியே ஏற்காதே  என்றார். அதனால்தான் அவரைப் பகுத்தறிவுப் பகவலன் என்று சொல்லுகிறோம்.


மனித உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று உரிமைக்காகக் குரல் கொடுத்த - போராடிய தலைவர் பெரியார்.


மானுட சமூகத்தில் சரி பகுதியினரான பெண்களின் உரிமைக்காகப் போராடியவரும் அவரே!


உடலில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று நினைப்போமா? அதுபோல்தான் சமூகத்தின் சரி பகுதியான பெண்களின் உரிமையை மதிக்க  வேண்டும் - ஏற்க வேண்டும், பெண்களுக்குக் கல்வி உரிமை வேண்டும் - உத்தியோக உரிமை வேண்டும்.


பெண் ஏன் அடிமையானாள் என்ற கேள்வியை எழுப்பியவர் பெரியார்.


ஏற்றத் தாழ்வு எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்க முடியாது என்றார்.


பெண்கல்வி, சொத்துரிமையோடு பெரியார் நிற்கவில்லை. அதிகாரத்திலும் பங்கு (Empowerment) பெண்களுக்குத்  தேவை என்றார். கல்வியும், பொருளா தாரமும் கைக்கு வந்தால் பகுத்தறிவையும் பயன் படுத்தினால் எந்தப் பெண்ணும் தலை நிமிர்ந்து நிற்க முடியும் - தன்னம்பிக்கையோடு வாழ முடியும். ஆண் பெண்ணை அடிமையாக நினைக்கும் நிலை ஒழிந்து விடும் என்று சொன்னவர் பெரியார்.


அய்ந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி என்று சொல்லி வைத்தார்கள். இந்தப் பழமொழிகளை மாற்றியமைத்தவர் பெரியார்.


பழைய நிலை என்ன? திருமணம் என்பதுகூட எந்த அடிப்படையில்? கன்னிகாதானம், தாரா முகூர்த்தம், பாணிக்கிரணம் என்றுதானே சொல்லுவார்கள்.


இவற்றின் பொருள் என்ன? சமஸ்கிருதத்தில் இந்தப் பெயர்கள் இருக்கிறது என்பதற்காக வெறுக்கவில்லை. பொருளின் அடிப்படையில் தான் எதிர்க்கிறோம்.


கன்னிகாதானம் என்றால் பெண்ணைத் தானமாகக் கொடுப்பது. தானமாகக் கொடுக்க பெண் என்ன ஒரு பண்டமா? பொருளா? ஒரு பொருளைத் தானமாக ஒருவரிடம் கொடுத்து விட்டால், அந்தப் பொருளைத் தானமாக பெற்றவர் எது வேண்டுமானாலும் செய்யும் உரிமை ஏற்பட்டு விடுகிறதா இல்லையா? என்று அடுக் கடுக்காக அடுக்கடுக்காகக் கேள்விகளைக்கேட்டார். ஆண் - பெண் திருமணம் என்பதை வாழ்க்கைத் துணை நலம் என்று ஆக்கியவரும் பெரியாரே!


சிங்கப்பூர் நேஷனல் யுனிவர் சிட்டி பேராசிரியர் ராஜேஷ் ராய் அவர்கள் Indians in Singapore - (1819-1945) எனும் ஓர் அரிய நூலை எழுதியுள்ளார்.


சிங்கப்பூரின் நிலைமை ஜாதிக் கொடுமைகள், தீண்டாமை நிலைமை பற்றி எல்லாம் விரிவாகவே எழுதியுள்ளார்.


ஜாதி வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. கடைகளில்கூட தீண்டாமை தலை விரித்தாடியது.


தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் வகையில் தமிழர் சீர்திருத்த சங்கம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது.


மனிதநேயர் பெரியார் - திருவள்ளுவர் சொன்னார் அல்லவா!


அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்


தம்நோய்போல் போற்றாக் கடை (குறள் - 315)


பிறன் துன்பத்தைத் தன் துன்பம் போல கருதி, அதனைப் போக்க முடியாவிட்டால் அறிவு இருந்து என்ன பயன் என்ற வள்ளுவர் குறளுக்கு இலக்கணம் தந்தை பெரியார்.


தம் 94ஆம் வயதிலும் கூட மக்கள் தொண்டு செய்த மகத்தான மனிதநேயர் பெரியார்.


தொலைநோக்காளர் பெரியார் - இனிவரும் உலகம் எப்படி இருக்கும்?  ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக் கொள்வார்கள் என்றார்.  இப்பொழுது நாம் நடத்திக் கொண்டு இருக்கிற இந்தக் காணொலிகூட தந்தை பெரியார் தொலைநோக்கோடு 75 ஆண்டு களுக்குமுன்  சொன்னதுதான்.


அறிஞர்அண்ணா தந்தை பெரியார் பற்றிச் சொன்ன துண்டு. தனது உழைப்பினால் ஏற்பட்ட பயனைத் தம் வாழ்நாளில் கண்டு களித்தவர் பெரியார் மட்டுமே!


தன் தொண்டு காய்த்துக் கனிந்ததை சுவைத்து மகிழ்ந்தவர் தந்தை பெரியார்.


பெரியார் ஒரு விஞ்ஞானம் - மருந்துகளைக் கண்டு பிடித்தவர் மரணம் அடைந்திருக்கலாம். ஆனால் அவர் கண்டுபிடித்த மருந்துகள் மக்களுக்குப் பயன்பட்டுக் கொண்டு இருக்கும். அது போன்றவர்தாம் பெரியார். நாம் சுவாசிக்கும் காற்றுப் போன்றவர். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்துவது வெறும் சடங்கல்ல. தந்தை பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை செயல்படுத்துவதும், அவரின் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகுவதும்தான்  தந்தை பெரியாரைப் போற்றுகிறோம் என்பதற்கு அடையாளம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்


கி. வீரமணி அவர்கள்.


அடுத்த தலைமுறைக்கும் தந்தை பெரியாரைக் கொண்டு செல்லுவோம்!


ஆசிரியை லீலாராணி தொடக்கவுரை


நான் என் வீட்டில் அய்ந்தாவது குழந்தை. பெண் களின் கையில் உள்ள கரண்டியைப் பிடுங்கி எறிந்து கல்வியைக் கொடு என்றார் தந்தை பெரியார். அதன் பலனை நான் அனுபவிக்கின்றேன்.


பெண்களுக்குக் கல்வி உரிமை அவசியம் என்று சொன்ன தந்தை பெரியார் - அதோடு நிறுத்திக் கொள்ள வில்லை. ஆண்களுக்கு நிகராக சம சொத்துரிமையும் அவசியம் என்று முழங்கினார். பெண்கள் படித்துப் பொருள் ஈட்டும் பொழுது பெண்ணுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுவதோடு, குடும்பத்தின் பொருளாதாரமும் உயரும் - குடும்பம் முன்னேறும் என்று சொன்னவரும்  அவரே அவரே!


சுயமரியாதைத் திருமணம் என்பதை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியவரும் தந்தை பெரியாரே.


1935 'குடிஅரசு' இதழில் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். 1978இல் தமிழ்நாடு அரசு அதற்குச் சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் அளித்தது.


அழகு என்று மற்றவர்கள் சொன்னதற்கும் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதற்கும் வேறுபாடு உண்டு. மானமும், அறிவும்தான் மனிதனுக்கு அழகு என்று சொன்ன சிந்தனையாளர் நம் பெரியார்.


"யார் சொன்னாலும் நம்பாதே - நானே சொன்னாலும் நம்பாதே. சிந்தித்து முடிவு எடு" என்று சொன்ன சிந்தனைச் சிற்பி நமது அய்யா பெரியார் அவர்கள்.


தந்தை பெரியாரின் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை. பெண்களின் சம உரிமைக் குரலாகப் பெரியார் வாழ்வார்.


'காற்றும், நீரும் போல தந்தை பெரியார் நமக்கு என்றும் தேவை என்று தொடக்கவுரை ஆற்றினார் ஆசிரியர் லீலாராணி. (இவர் தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மானமிகு ஏகப்பன் அவர்களின் மகளாவார்).


 


"சமூக விஞ்ஞானி பெரியார் - ஏன்?"


பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு விளக்கம்!


மன்னார்குடி பகுதியில் சாதாரண ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவில்லா பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நான். கிராமப் பள்ளியில்தான் படித்தேன்.


உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் சிறு வயதில் பெரியாரை வெறுத்தவன், காரணம் - என் சித்தப்பா கட்சி கட்சி என்று அலைந்து குடும்பத்தைக் கவனிக்காததால் எங்கள் வீட்டார் அவரையும், அவர் சார்ந்த கட்சியையும் வெறுத்தனர்.


நான் சிறுவனாக இருந்ததால் நானும் அந்த எண்ணத்திலேயே இருந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு சாமி. சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பிறகுதான் உண்மையான பெரியார் யார் என்று தெரிந்து கொண்டேன். ஒரு குக்கிராமத்திலே பிறந்து இன்று அமெரிக்காவில் ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன் என்றால் இதற்குக் காரணம் தந்தை பெரியாரும், காமராசரும்தான். அந்த நன்றியுணர்ச்சியை நாம் மறக்கவே கூடாது.


மக்கள் சென்ற பாதையிலேயே சென்று வாழ்வைக் கடத்தாமல், மக்கள் வளர்ச்சிக்கு தேவையான மாற்றுப் பாதையை அறிவியல் ரீதியாக உருவாக்கிக் கொடுப் பவன்தான் விஞ்ஞானி.


அந்த வகையில் பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி! ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நாட்டில் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு கால கட்டத் தில், ஜாதி - மதச் சடங்கு ஆச்சாரங்களில் சிக்கிச் சீரழிந்த சமுதாயத்தின் உண்மையான விடுதலைக்காகப் பாடு பட்டவர் தந்தை பெரியார்.


அந்த வகையில் காந்தியாரையேகூட எதிர்த்தவர் தந்தை பெரியார். ஜாதி ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்புப் போன்ற பல களங்களைக் கண்டவர் பெரியார் என்றால்  - வெறும் கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு என்கிற அளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத் துள்ளனர்.


நம் பிறப்புக்கு முன்னமேயே நம்மை முடிவு செய்வது எந்த வகையில் நியாயம் என்ற நியாயமான வினாவைத் தொடுத்தவர் பெரியார். எனவே அவர் கடவுள் மறுப்பாளர் ஆனார்.


பெண் கல்வி, சொத்துரிமை, விவாகரத்து, தேவதாசி ஒழிப்பு இவற்றிற்காகப் பாடுபட்டு வெற்றி கண்டவர் அவர்.


இந்த சமூகப் போராட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலியவர்களை இணைத்துக் கொண்டு போராடிய போராளி நம் பெரியார்.


பெரியார் நினைத்திருந்தால் மிகவும் பெரிய பதவிகளுக்கெல்லாம் சென்றிருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் முதல் அமைச்சர் பதவி இரண்டு முறை அவரைத் தேடி வந்த நேரத்தில்கூட அதனை ஏற்க மறுத்தவர்.


சமூக மாற்றத்துக்கான பணியே என்  பணி - ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காகப் போராடுவது எம்பணி என்று கூறியதோடு அல்லாமல் தம் வாழ் நாளையே அந்தப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.


இரணியா என்னும் அந்த நோயோடு .... மூச்சு உள்ளவரை ஓயாது உழைத்தவரும் அவரே!


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (குறள் - 423)


என்ற வள்ளுவரின் குறள் தந்தை பெரியாருக்குப் பிடித்தமானதாகும்.


யார் எந்தக் கேள்வியை எந்த நேரத்தில் கேட்டாலும் கோபப்படாமல் நிதானமாக தெளிவாய்க் கருத்தினைக் கூறக் கூடிய இயல்பு அவருடையது.


ஒரு பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டே இருந்தார். பிராமணர் ஒருவர் பெரியாரிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பென்சிலின் முனை உடைந்து விட்டது. அதனைக் கவனித்த பெரியார் தன் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து, கேள்விகளை எழுதிக் கொடுக்கச் சொன்னார்.


அந்தப் பிராமணர் அசந்து போனார். அப்பொழுது சொன்னார். 'அய்யா உங்களைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண் டிருந்தேன்,  அது தவறு - நீங்கள் பெரிய மனுஷன். பெரியார் - பெரியார்தான்!' என்று கூறினார் என்றால், தந்தைபெரியாரின் சிறப்பை என்னவென்று சொல்லுவது!


கருத்துக்களை வேகமாகக் கூறும் பெரியார் தம் கருத்தினை யார்மீதும் திணிக்க மாட்டார்.


ஒரு முறை திருச்சியில் தந்தை பெரியாரை கல்வித் துறை இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேலு சந்திக்கச் சென்றிருந்தார்.


அப்பொழுது பெரியார் நடத்திய அனாதைப் பள்ளிக் குழந்தைகள் கடவுள் வாழ்த்துகளை படித்துக் கொண்டு இருந்தனர். அதனைக் கவனித்த சுந்தரவடிவேலு அவர்கள் பெரியாரைப் பார்த்து கேட்டார்.


'நம் கல்வி நிறுவனத்தில்கூடக் கடவுள் வாழ்த்துப் பாடல் உண்டா?' என்று கேட்டார்.


பெரியார் சொன்ன பதில் என்ன தெரியுமா? நம் கொள்கைகளை யார்மீதும் திணிப்பது கிடையாது. படித்து அவர்களாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமே தவிர நம் கல்வி நிறுவனம் என்பதால் நம் கொள்கையைத் திணிப்பது இல்லை' என்று பதில் சொன்னார் பெரியார்.


இந்தப் பெருந்தன்மையும் அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் தன்மையும் தந்தை பெரியாருக்கே உரித்தான தனித் தன்மையானதாகும்.


புத்தரைப் போல், சாக்ரடீஸ் போல், பெர்னாட்சா போல் விவாதங்களை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பவர். பல நாடுகளைச் சுற்றியவர், தமிழ்நாட்டின் ஊர்களை எல்லாம் வலம் வந்தவர் - பகுத்தறிவு ஊட்டியவர் - புதிய பாதைகளைக் காட்டியவர். எனவே பெரியார் சமூக விஞ்ஞானியே, என்று கூறினார் பொறி யாளர் இரவிச்சந்திரன் சோமு.


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மலையரசிநன்றி கூறிட, காணொலி காட்சி இந்திய நேரம் முற்பகல் 10.30 மணிக்கு நிறைவுற்றது.


இணைப்புரையை தமிழ்ச்செல்வி மிகவும் அருமையாக நேர்த்தியாக வழங்கினார்.


காணொலியில் ஏராளமானோர் பங்கேற்று கருத்து விருந்தைச் சுவைந்தனர்.


No comments:

Post a Comment