21 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடையே காணொலியில் கழகத் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

21 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடையே காணொலியில் கழகத் தலைவர்

"வேற்றுமையில் ஒற்றுமையா - ஒற்றுமையை ஒழிக்க வேற்றுமையா?"


* கலி. பூங்குன்றன்


பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் தேசிய கல்விக் கொள்கை-‘நீட்’ இவற்றைப் பற்றிய கலந் துரையாடல் காணொலி மூலம் நேற்று (30.8.2020) முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. 21 ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து, நாட்டு மக்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் தேசிய கல்விக் கொள்கை - ‘நீட்’ பற்றி விளக்கம் அளித்தார். ஏற்கெனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று முத்தரப்புக் கூட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியதின் நீட்சியே இது என்றும் குறிப்பிட்டார்.



சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் இந்து மத சாஸ்திரங்களின் சாரம். குறிப்பாக மனுதர்மம் அதனைத்தான் வலியுறுத்து கிறது. (ஆனால், இப்பொழுதுகூட மனுதர்மம் சிறப்பானது என்று கூறி ‘துக்ளக்‘ ஏடு பாராட்டி எழுதுவது கவனிக்கத்தக்கது).


இப்பொழுது புகுத்தத் திட்டமிட்டிருக்கும் கல்வி என்பதும் தொழிற்கல்வி என்ற பெயராலே குலக் கல்வியைக் கொண்டுவரும் திட்டம்தான் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அத்திட்டத்தில் அடங்கியுள்ள ஏழு குறைபாடுகளை முக்கியமாகச் சுட்டிக்காட்டினார்.


(1) சமூக நீதிக்கு எதிரானது


இந்தக் கல்வித்திட்டம் சமூகநீதிக்கு  எதிரானது,  இந்தக்கல்வித் திட்டத்தில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்கள் என்பதற்குப் பதிலாக, சமூக - பொருளாதார சாதகமற்ற குழுக்கள் (Socio - Economic Disadvantaged Groups) என்ற சொல் லாக்கம் மிகத் தந்திரமாகப் புகுத்தப்பட்டுள்ளது. (பொரு ளாதாரத்தில் நலிவடைந்துள்ள உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்ற திட்டத்தின் பிரதிபலிப்பு இதில் காணப்படுகிறது).


(2) பன்முகத் தேர்வுகள்


மூன்றாம் வகுப்பு, அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் - 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வுகள் என்று தேர்வு, தேர்வு என்று மாணவர்கள் மத்தியில் தேர்வு என்றாலே ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்துதல். இத்தனைத் தேர்வுகளையும் தாண்டி கல்லூரியில் சேர வேண்டுமானால், அதற்கும் ஒரு நுழைவுத் தேர்வு என்ற சூழ்ச்சி வலை. தொடர் தேர்வுகள் காரணமாக இடையில் நிற்கும் (Drop-Outs) மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.


நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் சதவிகிதம் 1.2 விழுக்காடே!


(‘நீட்’ நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் திறந்த  போட்டியிலேயே (Open Competition) பிற்படுத்தப்பட் டோருக்கு அதிக இடங்கள் கிடைத்தன. எடுத்துக்காட்டாக 2016, 2017 எம்.பி.பி.எஸ். படிப்பில் கிடைத்திட்ட இடங்கள் விவரம்:


திறந்தபோட்டி - 884 இடங்கள்


இதில் பிற்படுத்தப்பட்டோர் - 599


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 159


தாழ்த்தப்பட்டோர் - 23


பழங்குடியினர் - 1


அருந்ததியினர் - 2


முஸ்லிம் - 32


உயர் ஜாதியினர் - 68


('நீட்' தேர்வு வந்த நிலையில் எல்லாம் தலைகீழாகி விட்டன. +2தேர்வில் 1,200க்கு 1,176 கட்ஆஃப் 196.75 பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா,  'நீட்' தேர்வில் வெறும் 84 மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம் அனிதாவா? Ôநீட்Õடா?)


(3) படிப்பைத் தொடராமல் வெளியேறச் செய்ய ஏற்பாடு:


10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் படிப்பை நிறுத்தி விட்டு வெளியேறலாம்; பின் எப்போது வேண்டுமானாலும் படிப்பைத் தொடரலாம் என்பதெல் லாம் யதார்த்தத்தில் சரி வராது. படிப்பை விட்டு வெளி யேறியவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர்வது என்பது நடக்காத காரியமே-இப்படியெல்லாம் ஓர் ஏமாற்று வித்தை!


எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை என்று அறிவித்து விட்டு, அதற்கு நேர் எதிராக ஏற்கெனவே படித்துக் கொண்டிருப்பவர் களை வெளியேற்றும் சதி இதன் பின்னணியில் உள்ளது.


 


(4) தொடக்கக் கல்வியா? குலக் கல்வியா?


6ஆம் வகுப்பு முதல் தொழிற் கல்வி என்பது நடைமுறையில் என்னவாகும்? கிராமங்களில் எந்தத் தொழிலைக் கற்க முடியும்? அப்பன் ஜாதித் தொழிலைத்தானே! ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டம்தானே வேறு பெயரில் இப்பொழுது திணிக்கப்படுகிறது. இதனை மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் போன்றவர்களும் கூறுகின்றனர்.


(5) ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு


தமிழ்நாட்டில் இரு மொழித் திட்டம்தான். மூன்று மொழி கிடையாது என்பது சட்டப்படி ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி கட்டாயம் என்று கூறப்பட்டாலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கேந்திரா வித்யாலயா பள்ளி களிலும் தமிழுக்கு இடம் உண்டா?


(கேந்திரா வித்யாலயா - மாணவர் ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு மத்திய அரசு  செலவு செய்வது ரூ.28,000


நவோதயா பள்ளிக்கு - ரூ.25,000/-


மாநில அரசு பள்ளிக்கு - ரூ.4,000/-


இதில்கூட பாரபட்சம் - நவீன வர்ணாசிரமம்)


மூன்று மொழிகளுள் இரண்டு மொழிகள் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை - இதன் பொருள் தாய்மொழி ஒன்று. இன்னொரு மொழி இந்தி அல்லது சமஸ்கிருதம்தானே!


(6) பெண் கல்வி


பெண்கள் படிப்பது என்பதில் இப்பொழுதுதான் ஆர்வம் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்கள் வருகை குறைந்த பள்ளிகளை மூடிவிட்டு, பத்து, பதினைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் பள்ளி வளாகம் உருவாக்கப்படும் என்பது பெண்களைக் கல்வி கூடத்திற்கு வரச் செய்யாமல் தடுப்பதே! உயர்கல்வியில் பெண்களுக்கான நிலை பற்றி இந்தக் கல்விக் கொள்கை பேசவே இல்லை.


(7) மாநில உரிமைப் பறிப்பு


மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இப்பொழுது ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும், கல்வி என்பது  மத்திய அரசுப் பட்டியலில் மட்டுமே அடங்கியுள்ளது போல மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது.


இந்தத் தேசியக் கல்வி கொள்கையில்கூட முறையாக மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டு, பரிசீலிக்கப்படவில்லை. ஏன், நாடாளுமன்றத்திலேயே விவாதத்துக்கு இடமில்லாமல் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.


பாரம்பரியக் கல்வி என்பது பழைய சனாதனக் கல்வியே!


இந்த ஏழு முக்கிய குறைபாடுகளை திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார்.


கோத்தாரி கமிஷன் எல்லோருக்கும் கல்வி பொதுமையாக்கப்பட வேண்டும் என்றது. பலகீனமாக் கப்பட்ட மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்றது.


ஆனால், இந்த கல்வித்திட்டக் குழுவில் கல்வி யாளர்கள் கிடையாது. கல்வியாளர்கள் தலைமை தாங்காத கல்விக் குழு என்ற விசித்திர விபரீதம்!


சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ,கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கா - தேர்வுக்கா? என்பது முக்கியமான கேள்வி.


வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள். தேசியக் கல்வியோ ஒற்றுமையை ஒழிக்க வேற்றுமையை விதைக்கிறது!


ஆசிரியர் பெருமக்கள் மிகப் பெரிய பிரதிநிதித்துவம் என்று சொல்லும் வகையில் ஏராளமானவர்கள் இந்தக் காணொலியில் கலந்து கொண்டிருப்பது - மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.


ஆசிரியர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது; எனது ஆசிரியர் ஆ.திராவிடமணிதான் என்னைச் செதுக்கியவர்.


கல்விக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சோதனை யிலிருந்து ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, முதல் தலை முறையாகக் கல்விக் கூடங்களை நோக்கிப் பறக்கும் மக்களை காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் முக்கிய கடமையாகும்.


மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் தேசிய கல்விக் கொள்கையின் விபரீதத்தை விளங்கும் படிக் கூறுங்கள்.


மீண்டும் சந்திப்போம் - செயல்படுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.


 


இதற்கு முன்னதாகவே....


தேசிய கல்விக் கொள்கை குறித்து கல்வி நிபுணர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து ஆலோசனை மற்றும் கருத்துருக் கூட்டத்தை  நடத்தி, ஆலோசனை களைத்  தீர்மானங்களாக நிறைவேற்றியது (14.6.2019).


ஆசிரியர் சங்கங்களோடு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது (12.11.2016).


மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடங்கிய முத்தரப்பு மாநாடு - திருச்சியில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது (18.12.2016).


மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, திருவாரூர் நாகர்கோவில், தூத்துக்குடி, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் முத்தரப்பினர் பங்கேற்ற  தேசியக் கல்விக் கொள்கை, ‘நீட்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. (2016)


இந்த நேரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் மானமிகு மீனாட்சிசுந்தரம் அவர்களை நினைவு கூர்வோம்.


 


கருத்துரையாற்றியோர் பட்டியல்


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், மாநில பொதுச் செயலாளர் : ரமேஷ்.


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், மாநில அமைப்புச் செயலாளர்: அன்பரசன்.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், மாநிலத் தலைவர்: கி.மகேந்திரன்.


தமிழக ஆசிரியர் கூட்டணி அய்பெட்டோ அமைப்பு (All India Federation of Elementary Teachers's Organisations - (AIFETO) அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை.


தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம், பொதுச் செயலாளர் : மனோகரன்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,  - பொருளாளர்: அம்பை ஆ. கணேசன்,


தமிழ்நாடு தமிழாசிரியர் சங்கம் - பொதுச் செயலாளர் : சு. நாகேந்திரன்.


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், மாநில தலைவர் : எஸ். பக்தவச்சலம்.


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  பொருளாளர் கே.பி. ரக்ஷித்.


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், தலைவர்: ஆ.பீட்டர்ராஜா


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், மாநில தலைவர்: இரா. இளங்கோவன்.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - தலைவர் மு.மணிமேகலை.


தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம், மாநில தலைவர்: பொன் செல்வராசு.


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொதுச் செயலாளர்: தாஸ்.


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், மாநில தலைவர்: கு. தியாகராஜன்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், மாநில தலைவர்: அ. சங்கர்.


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர், பி.கே. இளமாறன்.


தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்கம், மாநில தலைவர்: எஸ்.சங்கரபெருமாள்.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுச் செயலாளர்: பி. பேட்ரின் ரெய்மாண்ட்


அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, மாநில தலைவர்: பழ. சுப்பிரமணியன்.


வரவேற்புரை: சி. ரமேஷ் (பகுத்தறிவு ஆசிரியர் அணி) அறிமுகவுரை: ம. அழகிரிசாமி, (ப.க. மாநில தலைவர்) இணைப்புரை: வீ. குமரேசன் (பொருளாளர், தி.க.) நன்றியுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், தி.க.)


No comments:

Post a Comment