நாட்டுடைமைபற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து முக்கியம்- தொழிலாளர்களின் போராட்டம் சுனாமியாக எழும், எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

நாட்டுடைமைபற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து முக்கியம்- தொழிலாளர்களின் போராட்டம் சுனாமியாக எழும், எச்சரிக்கை!

போக்குவரத்துக் கழகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமா?


தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பு பறிபோய்விடும்!தி.மு.க. ஆட்சி போக்குவரத்துக் கழகத்தை நாட்டுடைமையாக்கியது; அ.தி.மு.க. ஆட்சியோ மீண்டும் தனியார் மயம் ஆக்கத் துடிக்கிறது. தொழிலாளர் களின் போராட்டம் சுனாமியாக எழும், எச்சரிக்கை என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப் பெற்ற முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டின் தீர்மானம் தொடங்கி, 1932 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுயமரியாதை இயக்க வேலைத் திட்டத்தின் அடிப்படை வரை போக்குவரத்து சாதனங்களை பொதுமக்களுக்கு உரிமையாக்கவேண்டும் - அதாவது நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற சமதர்மத் திட்டத்தை வெளியிட்டது.


1967 இல் அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, தமிழக முதல்வரான நம் கலைஞர் அவர்கள், பேருந்துகளை தேசிய மய மாக்கிக் காட்டியதோடு, லாபத்திலும் நடத்தி மகத்தான சமதர்மக் கொள்கையின் வெற்றியை உலகுக்கு உணர்த்தினார்.


தி.மு.க. ஆட்சிக்கும் - அ.தி.மு.க. ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு!


கடந்த 53 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆட்சி வரலாற்றை உற்றுநோக்கும் போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமையும் போது -  அரசு போக்குவரத்துக் கழகங்கள் புதுப்பொலிவும், வலிவும் பெறுவதும், தொழிலாளர் நலத்தை மய்யப்படுத்திய வளர்ச்சியைப் பெருக் குவதும் கண்கூடாகக் கண்ட ஒன்று. அது போல அ.தி.மு.க. ஆட்சி மாற்றம் நிகழ்கின்றபோது, அரசு போக்கு வரத்துக் கழகங்கள் பெரும் நட்டம் என்று கூறப்பட்டு, மேலும் வலுவிழக்கப்பட்டு, நாட்டுடைமை  கொள்கையே தோல்வி அடைந்துவிட்டது என்பது போன்ற ஒரு ‘படத்தை' வரைந்து காட்டுவது என்பதும் வாடிக்கை ஆகிவிட்டது!


2001 ஆம் ஆண்டுமுதல் 2006 ஆம் ஆண்டுவரை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ‘‘தனியார் மயம்'' என்ற பயத்தோடு பணியில் 5 ஆண்டு காலந் தள்ளிக் கொண்டிருந்த பிறகு, 2006-2011  தி.மு.க. ஆட்சி, கலைஞர் ஆட்சி மீண்டும்  ஏற்பட்டு, அவர்களது அச்சத்தைப் போக்கி, நம்பிக்கை ஒளி பாய்ச்சியது.


அந்த மகிழ்ச்சியும் - நம்பிக்கையும் போக்கு வரத்துத் தொழிலாளர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இப்போது மீண்டும் ‘வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறியது' என்ற பழமொழிக் கொப்ப, தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சிகளும், ஏற்பாடுகள்பற்றிய அந்த ரங்க ஆலோசனைகளும், அதற்கான பல வியூகங்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள், தொழிலாளர்களை மட்டுமல்ல, சமதர்மத்தில் நம்பிக்கை உள்ள முற்போக் காளர்கள் அனைவரையுமே அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது!


மோடி ஆட்சியை அ.தி.மு.க. ஆட்சி பின்பற்றுகிறதா?


‘உருட்டைக்கு நீளம், புளிப்பில் அதற்கு அப்பன்' என்று (புளி - எலுமிச்சை பழம்) பழமொழி ஒப்பீடுபோல, மத்தியில் அமைந் துள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி இதனை வெவ்வேறு வழிகளில் அமுல்படுத்தி, விமான நிலையங்களையெல்லாம் அதானி களுக்கும், அம்பானிகளுக்கும் மற்றும் பெருமுதலாளிகளுக்கும் நீண்ட காலக் குத்தகை என்று தாரைவார்க்கும் திட்டத்தை நாளும் நீட்டி வருகிறது.


அதுபோலவே, ரயில்வே துறையிலும் - தனியார் ரயில் விடுதல்மூலம் அதன் நாட்டுடைமைக் கொள்கை வேரில் வெந்நீர் பாய்ச்சப்பட்டு விட்டது!


சுற்றுச்சூழலை சாக்காக்கிக் கொண்டு, மின்சாரப் பேருந்துகளை ஓட்டிட துடியாய்த் துடித்துக் கொண்டுள்ளது! தமிழக அ.தி.மு.க. அரசும் 2019 லேயே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி, இந்த மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்குத் துணை போவதுபோல, இதை அமல்படுத்து வோம் என்று கூறி, ஒரு பகுதியாக, தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும் லண்டன் மாநகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சி-40 முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது.


போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாமா? அவர்களது குடும்பங்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டிய உத்தரவாதம் தமிழக அரசு சார்பாக தரப்படவேண்டாமா?


தந்தை பெரியார் கூறியபடி, தொழிலாளர் களையே அந்தத் திட்டத்தில் ஏன் ‘பங்காளி களாக' - பங்குதாரர்களாக - லாபத்தில் பங்கு பெறக்கூடிய தகுதி படைத்தவர்களாக்கிடும் திட்டத்தைச் செய்யக்கூடாது?


மக்களாட்சி என்பது மக்களுக்காகத் தானே?


ஏற்கெனவே பணிபுரிந்த தொழிலாளர்த் தோழர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது என்ற உத்தரவாதம் கொடுக்கும் நிலை இல்லையே! காரணம், ஒப்பந்தக்கார ருக்கு அல்லவா அந்த உரிமை தரப்பட் டுள்ளது!


எனவே, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரங்கள் கரோனா தொற்றுமூலம் பாதிக்கப் பட்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளவர் களுக்கு, சோதனை மேல் சோதனை ஏற்படுத்தாமல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காமல் செயல் படுத்தும் வகையில் தங்களது நிலைப் பாட்டை (Stand) தமிழக அ.தி.மு.க. ஆட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும்.


தொழிலாளர்களை முதலாளிகளிடம்


அடகு வைக்காதீர்!


இன்றேல், தொழிலாளர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்புப் புயலை - சுனாமியை ஆட்சியாளர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.


அக்குடும்பங்களின் எதிர்கால வாழ் வைக் கேள்விக் குறியாக்கக் கூடாது; தனிப்பட்ட முதலாளிகளிடம் அவர்கள் நலனை அடகு வைத்துவிடக் கூடாது என்று மனிதநேயத்தோடு தமிழக அரசை நாம் வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்!


காரணம், தந்தை பெரியார் கொள்கைப் படி நாட்டுடைமை பூத்தது; கனிந்தது. அதை இப்போது பறிப்பது என்றால், அது சிறிதும் நியாயமல்ல.


எனவே, தமிழக அரசு சீர்தூக்கிப் பார்க்கட்டும்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


31.8.2020


No comments:

Post a Comment