தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடைநிற்றல் என்ற அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 7, 2020

தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடைநிற்றல் என்ற அவலம்


இதற்கான காரணம் என்ன?


கல்வித் திட்டம் குறித்து மறு சிந்தனை தேவை!









தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடை நிற்றல் என்ற அவலம்; இதற்கான காரணம் என்ன? கல்வித் திட்டம்குறித்து மறு சிந்தனை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் 9, 10 ஆம் வகுப்பு மாண வர்கள் இடைநிற்றல் 100 சதவிகிதம் அதி கரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பள்ளியில் மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்க மாநில அரசு இதற்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் 5ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு அறிவித்த பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் முதல் சென்னை வரை திராவிடர் கழகம் சார்பில் மேற்கொள் ளப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணத்தின் நோக்கங்களுள் இதுவும் முக்கியமாக இடம் பெற்றிருந்தது. பல்வேறு தரப்புகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசாணை வெளியிட்டார். அதனை நாம் வரவேற்றோம்.


இந்நிலையில் மக்களவையில் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் பி.பி.சவுத்ரி, சுதாகர் துகாரா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.


இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியால் பதில ளித்தார். தேசிய அளவில் பள்ளி மாண வர்களின் இடைநிற்றல் 2015-2016ஆம் ஆண்டுகளில் 8.1 சதவீதமாக இருந்த தாகவும், 2016-2017ஆம் ஆண்டுகளில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறி யுள்ளார்.


ராஜஸ்தான், கருநாடகா, மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் 9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் 2015-2016 ஆம் ஆண்டில் இடைநிற்றல் 8 சதவீதமாக இருந்த நிலை யில் 2017-2018ஆம் ஆண்டில் 16.2 சத வீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.


இந்த ஆபத்தான நிலை ஏற்படும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வந் திருக்கிறோம். அது உண்மை என்று அதிகாரப்பூர்வமாக இப்பொழுது தெரிந்து விட்டதே!


கல்வி என்றாலே ஓர் அச்சுறுத்தல் என்ற நிலைக்கு மத்திய - மாநில அரசுகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் தள்ளி விட்டன.


தந்தை பெரியாரும், காமராசரும், திராவிட  இயக்கமும் கல்வி நீரோடையை எங்கெங்கும் பாயச் செய்த தமிழ்நாட்டில், இந்த நிலை என்பது மிகப்பெரிய அவலம்!


14 வயது வரை அனைவருக்கும் கல்வி என்ற அரசமைப்புச் சட்ட திருத்தம் ஒரு புறம் இருந்தாலும், மாணவர்களின் இடை நிற்றல் இன்னொருபுறம் என்பது அதிர்ச் சிக்குரியது.


வெறும் மனப்பாடம் - அதன் அடிப் படையில் தேர்வுகள் - அதில் பெறும் மதிப்பெண்கள்தான் தகுதி திறமையின் அளவுகோல் என்ற அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மறுசிந்தனை - ஆய்வு தேவை!


மதிப்பெண்தான் தகுதி - திறமைக்கான அளவுகோல் என்றால், அம்பேத்கர் நமக்குக் கிடைத்திருக்கமாட்டார். இந்தி யாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்காது.


இதுபற்றி டில்லி பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில், உச்சநீதி மன்ற நீதிபதி வி.ஆர்.இரவீந்திரன் கூறியது கவனிக்கத்தக்கது (19.8.2011).


‘‘அம்பேத்கர் அவர்கள் கூட வெறும் 37  சதவிகித மதிப்பெண்களைத்தான் பெற்றி ருந்தார். மதிப்பெண்ணை வைத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தால், இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் கிடைத்திருக்குமா?'' என்று கேட்டாரே!


கல்வி பயில்வது என்பதில் மாணவர்கள் மத்தியில் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்; 5, 8, 10, 11, 12 என்று வரிசையாகப் பொதுத் தேர்வுகள் அணிவகுத்து நின்றதால் ஏற்பட்ட கடும் விளைவுதான் இந்த மிகப்பெரிய அளவிலான இடைநிற்றலுக்கு முக்கிய காரணம்.


5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என் றாலும், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு என்பதுபற்றியும் மறுபரிசீலனை அவசியம் தேவை.


புதிய கல்விக் கொள்கையின்படி கல் லூரியில் சேர்வதற்கே நுழைவுத் தேர்வு என்பது என்ற தாக்குதலும் கைவிடப்பட வேண்டும்.


‘நீட்', ‘நெக்ஸ்ட்' என்று கல்வி பயிலும் மாணவர்கள்மீது தொடர் தாக்குதல், மூன்று மொழிகள் கட்டாயம் என்ற நிர்ப்பந்தம். இவைபற்றி எல்லாம் இதற்குப் பிறகாவது மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். சம வாய்ப்பும், சம வசதிகளும், சமக் கல்விச் சூழலும் செய்யப்படாத கல்விக் கூடங்கள் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் அனைத் தையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது கண்மூடித்தனமான சமூக அநீதியே!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


7.2.2020









No comments:

Post a Comment