அய்தராபாத் என்கவுன்டர் சர்ச்சையாகியுள்ளதே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

அய்தராபாத் என்கவுன்டர் சர்ச்சையாகியுள்ளதே


கேள்வி 1: நாடு முழுவதும் எடுக்கப்பட்ட 65 ஆயிரம் உணவு மாதிரிகளில் மூன்றில் ஒரு பங்கு கலப்படம் என்று தெரியவந்துள்ளதே?


- 'சிறகு' சீனுவாசன், வீராபுரம்


பதில்: நம் நாட்டில் இத்தகைய ஊழல்கள் மிகவும் சர்வ சாதாரணம்! மூன்றில் ஒரு பங்கு கலப்படம் மற்ற 2 பங்குக்கு பரவாமல் இருந்தால் சரி! “ஞான பூமி”யின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளுங்கள்.


கேள்வி 2: அண்ணா பல்கலைக் கழகத்தில் கீதைப்பாடம் - கை விடப்பட்டதாகத் தகவல் இல்லையே?


- பா.தினகரன், தூத்துக்குடி


பதில்: நாளும் அடுக்கடுக்காக போராட்டங்களை கொத்துக் கொத்தாக நடத்த வேண்டியுள்ளது. மக்கள் குரலை அலட்சியப்படுத்தும் நவீன “ஹிட்லர்களுடன்” தொடர்ந்து போராடிட வேண்டியுள்ளதே!


கேள்வி 3: இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அண்ணா என்றால் முதல் அமைச்சராக இருந்தார் என்ற எண்ணம் மட்டும் தானே இருக்கிறது?


- சொ.குணவதி, பண்ருட்டி


பதில்: என்ன செய்வது? அது இளைஞர்களின் குற்றமல்ல... திராவிட இயக்கங்கள் பெரியாரை, அண்ணாவை, அவ்விளைஞர்களிடம் கொண்டு சரியாக சேர்க்காததே முக்கிய குற்றம்.


அண்ணா பெயரில் கட்சி வைத்திருப்பவர்கள் கூட அண்ணாவைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி!


கேள்வி 4: குடியுரிமை திருத்த சட்டம் பற்றிக் கருத்துக் கூறாமல் போராட்டத்தில் வன்முறை கூடாது என்று மட்டும் ரஜினி சொல்வது எதைக் காட்டுகிறது?


- ந.இளவழகன், அகரம்


பதில்: ரஜினி போன்றவர்களிடம் கருத்துக் கேட்பது - அதுவும் குடியுரிமைச் சட்டம் பற்றி கேட்பதுதான் தவறு!


கேள்வி 5: “பகத்சிங்கைத் தூக்கிலிடும்போது அவன் கையில் கீதை இருந்தது” என்று ஆர்.எஸ்.எஸ். இதழான விஜய பாரதம் எழுதுகிறதே?


- கி.இராசம், திருமரைக்காடு


பதில்: பச்சைப் பொய்; அவர் ஒரு தீவிர நாத்திகவாதியாகவே தூக்குக் கயிற்றைச் சந்தித்தார்.


கேள்வி 6: கீழடித் தடங்களில் ஆரிய நாகரிகம் சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால்...?


- சு.மாறன், தென்மாப்பட்டு


பதில்: பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்க, தாராளமாய் மத்திய அரசு ஒதுக்கியிருப்பார்களே!


திராவிட நாகரிகம் என்று ஆய்வுகள் கூறுவதால்தான், இருப்பதால்தான் - இவ்வளவு இடையூறுகள் போலும்!


கேள்வி 7: குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காவது மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் பெறுவதில் அதிமுக அரசு தோல்வி ஆனது ஏன்?


- மு.சு.மாலதி, பொன்னமராவதி


பதில்: முதுகெலும்பு இல்லாதவர்களால் எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்? 'நீட்' முதல் எதில் வெற்றி பெற்றார்கள், இதில் தோல்வியுற?


கேள்வி 8: அய்தராபாத் என்கவுன்ட்டர் சர்ச்சையாகியுள்ளதே?


- அ.முபாரக், பள்ளத்தூர்


பதில்: மனித உரிமைக் கண்ணோட்டத்தில் சர்ச்சை தவிர்க்க முடியாதது தானே!


கேள்வி 9: சென்னையில் சிவா விஷ்ணு என்ற பெயரில் ஒரு கோயில் இருக்கிறதாமே - ஆகம விதிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டதாகப் பேச்செல்லாம் அடிபட்டதே - அதன் நிலை இப்பொழுது என்ன?


- செ.தாந்தோணி, நாகர்கோயில்


பதில்: ஆகமங்கள் என்பதெல்லாம் அவாள் வசதிக்கேற்ப வளையும் - நெளியும்!


கேள்வி 10: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனத்தில் மதுரை அய்யப்பன் கோயிலோடு நின்று விட்டதே?


- கா.முத்தழகன், மணப்பாறை


பதில்: ஆட்சியை அசைய வைக்க மீண்டும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு தீவிரமாக வேண்டும்!


No comments:

Post a Comment