விரைவில் ஆளுநர் மாற்றம் உண்மையை உடைக்கும் ‘இந்து’ என். ராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

விரைவில் ஆளுநர் மாற்றம் உண்மையை உடைக்கும் ‘இந்து’ என். ராம்

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பைக் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு. அந்த வழக்குத் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கின் போக்கினை தொடர்ந்து விசாரித்து வந்த உச்சநீதி மன்றம் '3 ஆண்டுகளுக்கு மேலாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' எனப் பல கேள்விகளை ஆளுநர் தரப்பை நோக்கி முன்வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஆகவே, ஆளுநருக்கும்  தமிழ்நாட்டு அரசுக்கும் இடையே தொடர்ந்து நிலவிவந்த மோதல் போக்கு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அதிகபட்சமாக நீதிமன்றம் ஆளும் கட்சித் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூற முற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்விகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிரபல ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் ஆளுநர் எப்படி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளார் என்பதைத் தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் முன்வைத்துள்ள முக்கியமான கருத்துகள் என்ன? "உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது மிகமிக நியாயமானது. வரவேற்கத்தக்க விடயம். நீதிமன்றம் எழுப்பி உள்ள விதிமுறைகள் ஏதோ தமிழ்நாட்டு ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லா மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.

அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

நமது அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு மிகக் குறைவான அதிகாரத்தைத்தான் வழங்கி இருக்கிறது. நாம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப் பிடிக் கின்ற நாடு. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட முன்வைக்கப்பட்டபோது பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டி.டி.கிருஷ்ணமாச் சாரியார் ஆளுநர் குறிப்பிட்ட சில விடயங்களில் மட்டும்தான் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி இருக்கிறார்.

சட்டமன்றம் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நேரடியாக அவர் முடியாது என்று சொல்ல முடியாது. மசோதாவை அவர் திருப்பி அனுப்பினால், எதற்காக அனுப்புகிறார் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

அப்படி விளக்கம் அளிக்காமல் மனுவை அவர் அனுப்பினால், மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைக்கலாம் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதை மீறிப்போனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க முடியும். அப்படி எதையும் செய்யாமல், 3 ஆண்டுகள் வரை தனது மேசை மீதே வைத்துக்கொள்வது அல்லது தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொள்வது ஒரு மோசமான நடத்தை. அதாவது ஒப்புதலும் தராமல், தரமாட்டேன் என்று தகவலும் சொல்லாமல் அவர் அப்படியே கிடப்பில் போடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஜனநாயக செயல்பாட்டிற்கு எதிரானது. அப்படி என்றால் தேர்தல் எதற்கு? சட்டமன்றம் எதற்கு? அப்படி என் றால் ஏன் ஆளுநர் இதைச் செய்கிறார்? அதற் குள்ளாகத்தான் ஹிந்துத்துவா அரசியல் என்பது ஒளிந்துகொண்டுள்ளது. அதற்காகத்தான் ஒன்றிய அரசு இவரைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள் ளது. திமுக அரசு கொண்டுவரும் பல நல்ல திட்டங் களைச் செயல்படுத்தவிடாமல் முடக்கி வையுங்கள் என்று அவருக்கு அறிவுரை தந்திருக்கிறார்கள். இப்படித்தான் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அப்படியே அவருக்கு ஓர் அறிவுரை மேலிடத்திலிருந்து வந்திருந்தால், அதை அவர் நாசூக்காகச் செய்தால் வெளியே தெரியாது. ஆனால், இவர் அதை வெட்டவெளிச்சமாகச் செய்கிறார். ஆகவேதான் அவர் நடவடிக்கைகளில் பிரச்சினைகள் ஏற்படு கின்றன. மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது - முதலமைச்சர் தான் இருக்கவேண்டும் என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறார்கள். அதை அவர் நிறுத்திவைக்கிறார். அதை ஏன் நிறுத்துகிறார்? அவர் சம்பந்தப்பட்ட மசோதா, ஆகவே நிறுத்தி வைக்கிறார். ஆளுநர் தன் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப் படையில் செயல்பட முடியாது. சட்டமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதனைத்தான் இவர் கேட்க வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த இந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இவரைப் போன்ற மோச மான ஆளுநர் வேறு யாரும் இல்லை என்றே சொல்ல லாம். அந்தளவுக்கு மோசமாக நடந்துகொள்கிறார்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 159-இன்படிதான் ஆளுநர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற என் முழு சக்தியையும் செலவிடுவேன். அதற்கு மாறாக நடந்து கொள்ள மாட்டேன். மக்களுக்கு விருப்பு வெறுப்பு அற்று சேவை செய்வேன். பொதுவானவனாக இருப்பேன்' என்றெல்லாம் சொல்லித்தானே சத்தியப் பிரமாணம் எடுக்கிறார்கள்? அப்படி என்றால் இவர் மக்கள் பிரதிநிதிகள் கூடி அனுப்பும் மசோதாவில் கையெழுத்துப் போடாமல் அதற்கு விரோதமாகத் தானே நடந்துகொண்டுள்ளார்? அப்படித்தானே பொருள்? 

ஒரு மசோதாவில் உள்ள குறை - நிறைகளை அலசி ஆராய அவர் நேரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதற்கும் ஒரு காலவரம்பு தேவையில்லையா? நியாயமான காலத்தைத்தான் அவர் எடுத்துக்கொண்டுள்ளார் என ஏற்கக்கூடிய அளவுக்கு அது இருக்க வேண்டும் இல்லையா? தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சிக்காலமே 5 ஆண்டு கள்தான். அதில் 3 ஆண்டுகள் வரை ஆளுநர் ஒப் புதல் அளிக்காமல் கிடப்பில் மசோதாவைப் போட்டு வைப்பது எந்தவிதத்தில் நியாயம் சொல்லுங்கள்? ஆகவே இது குறித்து உச்ச நீதிமன்றம் சில விளக் கங்களை ஆளுநருக்கு வழங்கவேண்டும். அல்லது பொதுவாக இந்த விவகாரம் குறித்துள்ள சந்தேகங் களுக்கு நீதிமன்றம்தான் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஆளுநர் ரவியைப் பொறுத்தவரை அவர் எடுத்துக்கொண்டுள்ள கால அளவு மிகமிக அதிகமானது. அவர் பொறுப்புடன் நடக்கவில்லை. அதற்கு இதுவே சாட்சி. இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றிவிட்டாரே! எனக்குக்கூட அந்த அழைப்பிதழ் வந்தது.

ஆளுநரின் ஆராய்ச்சி

ஆளுநர் ரவி பெரிய ஆராய்ச்சி செய்து, தமிழ்நாடு என்பது சரியில்லை. தமிழகம் என்பதுதான் சரி என்று மாற்றினாரே. அதை அவருக்கு யார் சொன்னார்களோ தெரியாது. தமிழ்நாடு என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம். உண்மைதான். ஆனால் அரசு ஆவணங்களில் தமிழ்நாடு என்றுதானே இருக்கிறது? அதைத்தானே அவர் அழைப்பிதழில் போடவேண்டும். அதைப்போன்று சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து அனுப்புகிறது. அதை அவர் ஏற்க மறுக்கிறார். 

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலேயே அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சங்கரய்யா, அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு நாட்டு விடுதலைக்காகப் போராட்டத்தில் ஈடுபடு கிறார். அதைப் பற்றி சாய்நாத் புத்தகத்தில்கூட எழுதி இருக்கிறார். அதை இவர் படிக்கவில்லை - சங்கரய்யா என்ன இவருக்கு எதிரியா? ஏன் மறுத்தார்? ஆளுநர் மாளிகையில் யார் யாரோ தருகின்ற ஆலோ சனையைக் கேட்டு இதை எல்லாம் அவர் தடுக்கிறார். அரசுடன் தகராறு செய்கிறார். ஒரு அமைச்சரை இவர் நீக்க முனைந்தாரே அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? திமுக அரசு கொண்டுவந்த மசோதாக்களுக்கு 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்கா மல் இருப்பதைப் போல, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களுக்குக்கூட 4 ஆண்டு களுக்கு மேலாக ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். 

வெட்கக் கேடானது

இந்தச் செயல்கள் எல்லாம் வெட்கக்கேடானது இல்லையா? அதிமுக கொண்டுவந்த மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியா மலே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பும் செய் திருக்கிறார். இதை எல்லாம் ஒன்றிய அரசும் கவனித்து வருகிறது. விரைவில் இவர் திரும்ப அழைக்கப்படுவார் என்றே தெரிகிறது. விரைவில் நீதிமன்றத் தீர்ப்பும் வர இருக்கிறது. அதன்பிறகு இதே போக்கில் ஆளுநர் தொடர முடியாது. ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விவாதங்கள் மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது. அதனடிப்படையில் தான் சொல் கிறேன், ஆளுநர் இதேபோல் இனியும் செயல்பட முடியாது" என அடித்துப் பேசுகிறார் என்.ராம்

நன்றி: 'ஒன் இந்தியா' தமிழ் இணையம், 28.11.2023


No comments:

Post a Comment